Published : 01 Oct 2015 10:33 AM
Last Updated : 01 Oct 2015 10:33 AM

பாசத்தில் நெகிழும் மக்களும் வறண்டுபோன வாழ்க்கை முறையும்

உசிலம்பட்டி சிசுக் கொலைகளை மீடியா உலகத்துக்கு கொண்டு வந்ததில் எழுத்தாளர் சௌபாவுக்கும் பங்குண்டு. தனது அனு பவத்தை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்ட அவர், என்னோட தொல்லைய தாங்க மாட்டாத எங்கம்மா, ‘ஏலேய்.. பொறந்தப்பயே ஒன்னய நெல்லைப் போட்டுக் கொன்டுருக்கணும்டா’ன்னு பேச்சு வழக்குல அடிக்கடி சொல்லும்.

அப்படின்னா என்னன்னு விசாரிச்சப்பத்தான் உசிலம்பட்டி பகுதியில பொம்பளப் புள்ள பொறந்தா நெல்லப் போட்டுக் கொல்லுவாங்கன்னு சொன்னாங்க.

அதிர்ச்சியான செய்தியா இருந்ததால விசாரிக்கக் கெளம்பிட்டேன்.

உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டுல இறங்கி சைக்கிள மிதிச்சிக்கிட்டுப்போயி ஊருக்குள்ள நைஸா விசாரிச்சேன். அப்ப எனக்கிருந்த க்ளூ நாவிதர் கிழவி நாகம்மா மட்டும்தான். எடுத்ததுமே அந்தம்மாக்கிட்ட இதக்கேக்கக்கூடா துன்னு அதுபோக்குலயே பேச்சுக் குடுத்தேன்.

முதியோர் பென்ஷனெல்லாம் ஒழுங்கா வருதான்னு கேட்டு முடிச்சுட்டு கடைசியா, ‘ஒங்க பக்கத்துல பொம்பளப் புள்ளைக பொறந்தா கொன்டு போடுவீங்களாம்லத்தா’ன்னு கேட்டது தான் தாமதம் ‘அட, ஆமா.. நானே கொல்லப் புள்ளைகள முடிச்சிருக்கனப்பே.. புள்ளைய பெத்துப் போட்டுக்கிட்டு சொல்லி விடுவாங்க. நான் போயி செஞ்சுட்டு வருவேன்’னு அந்தம்மா சர்வ சாதாரணமா சொன்னத கேட்டு மெரண்டுட்டேன்.

அவங்களப் பொறுத்தவரைக்கும் அது ஒரு குற்றமாவே தெரியல. வளர்ந்து அது கஷ்டப்படுறதுக்கு நம்மளே கொன்னுறலாம்னு நினைக்கிறாங்க.

சிசுக்கொலைக்கு எதிரான அரசின் போதனைகள் எல்லாம் அவங்களுக்குத் தெரியாது. சிசுக்கொலைகள் குறைஞ்சிருக்கு; ஆனா, இன்னும் நடக்குது. அந்த மக்கள் ஒண்ணும் கொடூரமானவங்க இல்லை. பாசத்தில் நெகிழ்கிற அவர்களின் வறண்டுபோன வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் ஏற்படாத போது இது மட்டும் எப்படி மாறி இருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார் சௌபா.

உசிலைப் பகுதியில் பெண் சிசுக்கொலைகள் குறைந்திருப்பதாகச் சொல்லும் ‘வெட் டிரஸ்ட்’ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி தர்மநீதி, “இப்ப, எப்பவாச்சும் ஒண்ணு ரெண்டுதான் சிசுக்கொலை நடக்குது. அதற்கு பதி லாக, கருவில் இருப்பது பெண் என்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்பவர்கள் கருவிலேயே சிதைத்து விடுகிறார்கள்.

மேலும் சிலர், ‘புள்ள மூளை வளர்ச்சி இல்லாம இருக்கு, ஒச்சமா இருக்கு, பொறந்தாலும் பொழைக்கிறது கஷ்டம் இப்படியெல்லாம் அக்கம் பக்கத்தில் முன் கூட்டியே செய்திகளை பரப்பிவிட்டு பிரசவத்துக்குப் போகிறவர்கள், குழந்தையை கொன்று புதைத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார்கள்” என்று சொன்னார்.

சிசுக்கொலைகள் இல்லையா?

2001-லிருந்து 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே கரைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 31,33,281. இதில் தமிழகத்தின் பங்கு மட்டுமே 19,848. இப்போது உசிலம்பட்டி பகுதியில் சிசுக்கொலைகள் நடப்பதில்லை என்று சொல்லும் மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் மாலதி, “முன்பு குடும்பக் கட்டுப் பாடு முறைகள் தெரியாததால் அளவுக் கதிகமாக பிள்ளைகளைப் பெற்றுவிட்டு பெண் குழந்தைகளைக் கொன்றார்கள்.

இப்போது அப்படி இல்லை. மாவட் டத்தில் 80 சதவீதத்துக்கு மேல் குடும்பக் கட்டுப்பாடு முறை மற்றும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதனால், பெரும்பாலும் 3-வது குழந்தைக்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஸ்கேன் பார்த்து கருக்கலைப்பு செய்வ தைத் தடுக்க ஸ்கேன் சென்டர்களும் மருத்துவமனைகளும் கண்காணிக்கப் படுகின்றன. மதுரை மாவட்டம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 990 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதத்தை எட்டி இருக்கிறது” என்கிறார்.

ஸ்கேன் சென்டர்கள்

ஸ்கேன் மற்றும் கருக்கலைப்பு மையங்களை ஆய்வு செய்ய, மாவட்ட அளவில் இணை இயக்குநரால் அமைக் கப்படும் கண்காணிப்புப் குழுவினர் பெயரளவுக்கே செயல்படுவதாக கூறப் படுகிறது. தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் எச்சரிக்கை மட்டுமே செய்யப் படுகின்றன. அச்சமின்றி கருக்கலைப்பு கள் செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

தொட்டில் குழந்தைகள் திட்டம்

பெண் சிசுக்கொலைகளை தடுப்பதற் காக முதன் முதலாக 1992-ல் சேலத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அப்போதைய அதிமுக அரசு. அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகிய இடங் களில் அரசு தொட்டில் குழந்தைகள் வரவேற்பு மையங்கள் திறக்கப்பட்டன.

2001-ல் மீண்டும் அதிமுக ஆட்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த குழந் தைகளில் பலஉள் நாடு, வெளிநாடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்க ளுக்கும் தத்து கொடுக்கப்பட்டன. 160 குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடமே சேர்த்து வைக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் 2001-ல் 1000: 942 என இருந்த ஆண், பெண் பிறப்பு விகிதம் 2011-ல் 1000 : 946 என்ற விகித மாக உயர்ந்தது. இது தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் பலன் எனச் சொன்னது அரசாங்கம்.

அதேசமயம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்திருந்தது. இதற்குக் காரணம் சிசு மற்றும் கருக்கொலைகள் தான் என ஒப்புக்கொண்ட அரசாங்கம், 2011-ல் இந்த மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தைகள் வரவேற்பு மையங்களை திறந்தது. பெற்றோரே குழந்தையை ஒப்படைக்கும் போது தங்களின் குழந்தை உரிமையை விட்டுக் கொடுப்பதாக பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். எனி னும் 60 நாட்களுக்குள் அவர்கள் மனம் மாறினால் மீண்டும் தங்கள் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். தொட்டில் குழந்தைகள் வரவேற்பு மையத்துக்கு வரும் குழந்தைகள் அந்தந்த பகுதிக ளில் உள்ள அங்கீகாரம் பெற்ற காப்ப கங்களில் ஒப்படைக்கப்பட்டு வளர்க்கப் படும். குறிப்பிட்ட வயது வந்ததும் அந்தக் குழந்தைகள் விரும்பினால் பெற் றோரிடம் சேர்த்து வைக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் காப்பகங்களே அவர்க ளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்துக் கொடுக்கும்.

இந்த குழந்தைகளை தத்து கொடுக்க அங்கீகரிக்கப்பட்ட சுமார் 24 மையங் கள் உள்ளன. அங்கீகாரமில்லாமல் செயல்படும் தத்துக் கொடுப்பு மையங் களும் ஏராளம் உண்டு.

அரசின் பதிவுக்கே போகாமல் குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இம்மையங்களில் பெரும் பாலானவை குழந்தைகளை வெளி நாடுகள் வரை பேரம் பேசி விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

நிதி குறைவு

சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில் குழந்தை மையங்களை திறந்தாலும் இந்தத் திட்டத்துக்காக அரசு ஒதுக்கிய நிதியும் அதிலிருந்து செலவழித்ததும் சொற்பம் தான். 2001-02-லிருந்து 2014-15 வரை கடந்த 15 ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்காக அரசு ஒதுக்கிய தொகை ரூ.2.59 கோடி. இதில் செலவழித்த தொகை ரூ.65.88 லட்சம் மட்டுமே.

இந்தச் சூழலில் தான் 2013-ல் அதிக அளவாக சத்தீஸ்கரில் 15 சிசுக்கொலை வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13 சிசுக் கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரம் தருகிறது.

சௌபா



படம்: கிருஷ்ணமூர்த்தி

(கரு வளரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x