Published : 10 Dec 2020 07:06 AM
Last Updated : 10 Dec 2020 07:06 AM
கேரளச் செய்திகளில் சில வாரங்களாக ஸ்தானார்த்தி, வித்யார்த்தி என்ற வார்த்தைகள்தான் அதிகமும் புழங்கிக்கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் இந்த வார்த்தைகளுக்கு முறையே வேட்பாளர், மாணவர் என்று அர்த்தம். டிசம்பர் 8-14 வரையில் மூன்று கட்டங்களாக நடக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தலில் கல்லூரி மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் போட்டியிடுகிறார்கள். இது கேரள இளைஞர்களின் வழக்கமான ஜனநாயகக் கொண்டாட்டம்தான் என்றபோதும், இதில் நாடு முழுவதுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும் உண்டு.
இடதுசாரிகளைப் பின்பற்றி காங்கிரஸும் பாஜகவும் தங்களது மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களைக் களத்தில் இறக்குகின்றன என்பதாக மட்டும் இந்தத் தேர்தலைச் சுருக்கிவிட முடியாது. மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பொதுச் சமூகத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவருகிறார்கள். அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மட்டுமின்றி பொதுநலன் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளிலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது.
இளைஞர்களின் களம்
ஓர் உதாரணத்துக்கு, கொச்சி நகராட்சி உறுப்பினராகப் போட்டியிடும் எம்.ஆர்.அஞ்சலியைச் சொல்லலாம். எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் குழுவில் ஒரு தன்னார்வலராகப் பங்கேற்றவர். மூவரை அடக்கம் செய்தவர். மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளில் அங்கம் வகிப்பதும் பொறுப்பு வகிப்பதும் மட்டுமே தேர்தலில் நிற்பதற்குத் தகுதியாகிவிடவில்லை. கூப்பிட்ட குரலுக்கு உண்மையாகவே ஓடிவந்து உதவக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையையும் இந்த இளைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
குட்டநாடு சம்பக்குளத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீகாந்த், வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, ஒரு நாள்கூடப் பிரச்சாரத்துக்குக் கிளம்பவில்லை. அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை என்பதால் கரோனா சோதனைகள் செய்து கொள்வதற்காக மருத்துவமனை செல்பவர்களைத் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுவருகிறார். முகத்தை மறைத்தபடி முழுப் பாதுகாப்புக் கவசத்துடன் ஆட்டோ ஓட்டும் அவரும் ஒரு வேட்பாளர்தான் என்று அந்தப் பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அப்புறம் ஏன் வாக்குகள் கேட்டுச் செல்ல வேண்டும் என்பது அவரது நம்பிக்கை. கொல்லம் குளத்துப்புழா ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி லேபுமோள் போட்டியிடுகிறார். அது பழங்குடியினருக்கான இடமல்ல; பொதுப் போட்டியில்தான் அவர் கலந்துகொண்டிருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்து கணக்கில் கொண்டால் மாணவர் அமைப்பு ஒன்றில் அவர் பத்தாண்டு காலமாக உறுப்பினராக இருந்துவருகிறார். கோழிக்கோடு குட்டியாடிப் பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரு கட்சி 70% பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. பொதுப் போட்டியில் பெண்களும் பங்கெடுக்கிறார்கள்; அதைக் கட்சிகளும் ஊக்கப்படுத்துகின்றன.
விநோத வேட்பாளர்கள்
கேரள உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை கவனத்துக்குரிய மற்றொரு முக்கிய விஷயம், அது பொதுச்சமூகத்தின் முக்கிய விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. கொல்லம் நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் கரோனா தாமஸ் என்ற பெயர்கொண்ட பாஜக வேட்பாளர், எர்ணாகுளம் ராயமங்கலத்தில் வார்டு கவுன்சிலராகப் போட்டியிடும் பாதிரியார் மாத்யூ, திருச்சூர் மதிலகம் வார்டு கவுன்சிலர் தேர்தலில் எதிரெதிராகக் களமிறங்கியிருக்கும் பிஜூ - பைஜூ சகோதரர்கள், இடுக்கியில் தொடுபுழம் நகர சபை வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஒரே வீட்டில் எதிரெதிராகப் போட்டியிடும் சகோதரர்களின் மனைவியர் என்று ஒவ்வொரு செய்தியும் மாநிலம் முழுவதையும் எட்டியிருக்கிறது.
கண்ணூரில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் புதுமணத் தம்பதியான அப்சல் - ஷப்னா, ஆலப்புழாவில் புன்னப்புரம் ஊராட்சி மன்ற உறுப்பினராகப் போட்டியிடும் சொரியாசிஸ் நோயில் பாதிக்கப்பட்ட ஆண்டனி, மாணவர் தலைவர் அபிமன்யுவின் சொந்த ஊரான இடுக்கி வட்டவடாவில் தமிழரான செம்மலர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது, பத்தனம்திட்டா மலையாளப்புழாவில் தோட்டத் தொழிலாளிகளான தமிழ் வாக்காளர்களை மனதில் கொண்டு தமிழிலேயே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது வரையில் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் மனதில் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பெருமிதங்கள் எவ்வளவோ உண்டு.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பாடல்களும் பல்குரலிசையுமாய் ஒலிக்கின்றன. ‘கிளிகள் பாடணும்... புதிய புலரி காணணும்’ தேர்தல் பிரச்சாரப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடிய இளைஞர் ஷாகுல் ஹமீது, மலப்புரம் குருவா பஞ்சாயத்து உறுப்பினராகப் போட்டியிடும் தந்தை முஸ்தபாவின் வெற்றிக்காகப் பாட்டுப் பாடி வாக்கு சேகரிக்கும் சிறுமி தில்னே, அதேபோல ஐந்தாம் வகுப்பு படிக்கும் முகம்மது ஷானின் தேர்தல் பிரச்சாரப் பாடல் ஆகியவையும் கவனம் பெற்றிருக்கின்றன. குழந்தைகள் வாக்களிக்கத்தான் முடியாது, தேர்தல் திருவிழாவில் பங்கெடுக்கலாம்தானே!
இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர் என்று பத்தனம்திட்டா மாவட்டம் அருவப்புலத்தைச் சேர்ந்த ரேஷ்மா மரியம் ராயைச் சொல்லலாம். வேட்பாளர் தகுதிக்கான 21 வயதை எட்டும் வரை காத்திருந்து, அதற்கு அடுத்த நாளில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், கேரளம் முழுக்கக் கவனிக்கப்பட்டிருக்கிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகத்தான் அவர் காத்திருந்தாரே தவிர, பொதுவாழ்க்கையில் காலடி எடுத்துவைப்பதற்காக அல்ல. மாணவர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர், தற்போது இளைஞர் அமைப்பின் மாவட்டக் குழுவில் பொறுப்பில் இருக்கிறார். நீண்ட காலமாக எதிர்க்கட்சியின் கையில் இருக்கும் கவுன்சிலர் இடத்தைக் கைப்பற்றவே அவர் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்.
ஜனநாயகக் கட்டமைப்பு!
பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னிதாழம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் ராகுல், கல்லூரியில் படிக்கும் 22 வயது இளைஞர். சாலை வசதியற்ற, மேடும் பள்ளமுமாய் நடந்தே கடக்க வேண்டிய பகுதிகளில் அவர் தினந்தோறும் வீடுவீடாகச் சென்று நாளிதழ் விநியோகிக்கிறார். பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். ஏதோ ஒரு கட்சியின் சார்பாகத்தான் அவர் போட்டியிடுகிறார். மக்களிடம் அவருக்கு இருக்கும் நேரடிப் பரிச்சயமும் நம்பிக்கையும்தான் அவரது பொதுவாழ்க்கையின் ‘வைப்புத்தொகை’.
தேர்தலில் போட்டியிடும் இளைஞர்களின் தொலைக்காட்சிப் பேட்டிகளைப் பார்க்கிறபோது, அவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் பிரச்சினைகள் குறித்தும், சார்ந்திருக்கும் கட்சிகள் சார்ந்தும் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்; அதைத் தெளிவோடு எடுத்துச்சொல்லும் திறனையும் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கேரளத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு இங்கிருந்தே தொடங்குகிறது. மக்களிடம் நேரடித் தொடர்பு உள்ளவர்கள் மக்களின் பிரதிநிதியாகும்போதுதான், கட்சிக்குள் நடக்கும் விவாதங்களிலேயே அவர்களால் வாய்திறக்க முடியும். கட்சிக்கு உள்ளேயே ஜனநாயகக் குரல்களுக்கு வாய்ப்பு உருவாகும்போதுதான் அது பொதுவெளியிலும் பிரதிபலிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT