Last Updated : 10 Dec, 2020 03:15 AM

7  

Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை?

சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு ஒரு ஆணையத்தை நியமித்திருக்கிறது. அதைக் கொண்டு ஒரு அறிக்கை தயாரிக்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு சாதியின் அனைத்து மக்களையும் இது கணக்கெடுக்குமா அல்லது மக்கள்தொகைக் கணக்கெடுப்புபோல அல்லாமல் ஆய்வாக இருக்குமா என்பது பற்றித் தெரியவில்லை. ‘சமூக - பொருளாதாரரீதியிலான சாதிவாரிக் கணக்கெடுப்’பை ஒன்றிய அரசு 2011-ல் நாடு முழுக்கவும் நடத்தியது. ஆனால், அதன் கண்டறிதல்களை அது வெளியிடவில்லை. கர்நாடகத்திலும் இதுபோன்றதொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு முன்னால் வைக்கப்படவில்லை.

இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியா?

1931 வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட இடையூறால் 1941-ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த ஆண்டு சாதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. சாதி பற்றிய தகவல்களைத் தனியாக அட்டவணைப்படுத்துவதற்குக் கூடுதல் செலவாகிறது என்று 1941-ன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பற்றிய அறிக்கையில் அப்போதைய இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் எம்.டபிள்யு.எம்.யீட்ஸ் தெரிவித்தார். “பிரிட்டிஷ் இந்தியாவுக்கான அட்டவணைப்படுத்துதலில் சாதி உள்ளடங்காது. 1931-ல்கூட பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு அதற்குக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது; இந்த மிகப் பெரிய, அதிகம் செலவுபிடிக்கக் கூடிய அட்டவணையைக் கழித்துக்கட்ட நேரம் கடந்துவிட்டது” என்று அவர் எழுதினார். எனினும், தகவல்களை வகைப்படுத்தும்போது நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சாதிவாரிப் பதிவுகளைக் கோரிய சில சமஸ்தானங்கள் அல்லது மாகாணங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அந்தத் தகவல்கள் வழங்கப்பட்டன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு விமர்சனத்துக்குள்ளானதா?

சாதி குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முதன்மையான வாதம் எதுவென்றால், அது சாதி அமைப்பைத் தொடர்ந்து நீட்டிக்கவே உதவுகிறது என்பதுதான். 1901-லிருந்து ஒவ்வொரு முறையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கும்போதும் சாதி பற்றி தகவல் திரட்டுவது விமர்சனத்துக்கு உள்ளாகிவந்திருந்ததாக 1931-ன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஜே.எச்.ஹட்டன் குறிப்பிடுகிறார். “ஒருவர் குறிப்பிட்ட சாதியொன்றைச் சேர்ந்தவர் என்று பதிவுசெய்வதே சாதி முறையை நீடிக்கச் செய்கிறது என்பதுபோல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது” என்று அவர் எழுதினார். எனினும், ஒரு உண்மைத் தகவலைப் பதிவுசெய்வதில் தவறு ஏதும் இல்லை என்றும், சாதியின் இருப்பைப் புறக்கணிப்பது என்பது நெருப்புக்கோழி தலையைப் புதைத்துக்கொள்வது போன்றது என்றும் கூறி அந்த விமர்சனங்களை அவர் நிராகரித்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு என்ன பார்வை இருந்தது?

சுதந்திர இந்தியாவின் முதல் ‘இந்திய பொது-பதிவாளர்’ ஆர்.ஏ.கோபாலசாமி 1951-ன் அறிக்கையில் இவ்வாறு கூறினார்: “1951-ன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது சாதிகள், இனங்கள், இனக்குழுக்கள் போன்றவை பற்றிய கேள்விகளை உள்ளடக்கவில்லை; ‘சிறப்புக் குழுக்கள்’ தொடர்புடைய அவசியமான புள்ளிவிவரங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான விவரங்களும் மட்டும் திரட்டப்பட்டு ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணைய’த்துக்கு மடைமாற்றப்பட்டன.” பட்டியலினச் சாதிகள், பழங்குடியினர், ஆங்கிலோ-இந்தியர்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் நோக்கத்துக்காக ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட சில சாதிகள் போன்றவை ‘சிறப்புக் குழுக்கள்’ என்று விளக்கப்பட்டன. இது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன என்பதையும், ஆனால் தொகுக்கவோ வெளியிடவோ படவில்லை என்பதையும் உணர்த்துகிறது.

இதுவரை சாதி பற்றிய தகவல்கள் எப்படித் திரட்டப்பட்டன?

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பங்காகப் பட்டியலினத்தோர்/ பழங்குடியினர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டாலும் பிற சாதியினர் குறித்த தகவல்கள் கணக்கெடுப்பாளர்களால் திரட்டப்படவில்லை. இதில் பிரதான வழிமுறை எதுவென்றால் கணக்கெடுப்பாளரிடம் தானாக முன்வந்து தன் சாதி பற்றிய தகவல்களைக் கூறுதல். இதுவரை, பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையங்கள் பல மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் தொகையை உறுதிப்படுத்திக்கொள்வதற்குத் தாங்களாகவே கணக்கெடுப்பு நடத்தியிருக்கின்றன. இதில் பின்பற்றப்படும் வழிமுறையானது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். பொதுத் தளத்தில் கிடைக்கக் கூடிய இந்த ஆணையங்கள் சிலவற்றின் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இந்தக் குழுக்களெல்லாம் கேள்விகளின் பட்டியலைப் பலரிடமும் கொடுத்துப் பெறுவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளைச் சந்திப்பது, தொடர்புடைய பகுதிகளுக்குச் செல்வது, தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஜே.ஏ.அம்பாசங்கர் ஆணையம், கர்நாடகத்தின் வேங்கடசாமி ஆணையம் போன்றவை செய்ததுபோல வீடுவீடாக ஏறி இறங்கிக் கணக்கெடுத்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றியிருப்பது தெரியவருகிறது.

எஸ்ஈசிசி 2011 என்ன செய்தது?

2011-ல் மேற்கொள்ளப்பட்ட ‘சமூக - பொருளாதாரரீதியிலான சாதிவாரிக் கணக்கெடுப்பு’ (எஸ்ஈசிசி) பல்வேறு சாதிகளின் சமூக - பொருளாதார நிலை குறித்துத் தரவுகள் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பெரும் முயற்சி ஆகும். அந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் சிலவற்றுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகள் சில பொருந்திப்போனாலும் அதில் கண்டறியப்பட்ட விஷயங்கள் வேறுபட்டவையே. மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது ஒரு மாத காலத்துக்குள் எடுக்கப்பட்டது. சாதிவாரிக் கணக்கெடுப்போ நீண்ட கால அளவுக்கு எடுக்கப்பட்டது. ஆகவே, மறுஆய்வுக்கும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் போதிய அவகாசம் இருந்தது. எஸ்ஈசிசி-2011 இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. ஒரு பகுதியில் கிராமப்புற, நகர்ப்புற வீடுகளின் கணக்கெடுப்பு, முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட சில அளவீடுகளின் அடிப்படையில் அவற்றைத் தரப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன; இன்னொரு பகுதியில், சாதிவாரிக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. எனினும், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள மக்களின் பொருளாதார நிலை பற்றிய தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய தரவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று சொல்லப்படவில்லை என்றாலும் அரசியல்ரீதியாகப் பெரும் பிரச்சினையை அந்தத் தரவுகள் ஏற்படுத்திவிடும் என்று ஊகிக்கப்படுகிறது. ஆதிக்கம் மிக்கதும் அதிகாரம் கொண்டதுமான சாதிகள் சில அவர்கள் சொல்லிக்கொள்வதுபோல் எண்ணிக்கையில் அதிகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தக் கூடிய தரவுகளை வெளியிட்டால், அவர்களைப் பகைத்துக்கொள்ள நேரிடும் என்பது முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் சட்டரீதியான நோக்கம் என்ன?

பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் மேல் எல்லை அதிகமாக இருப்பதன் அடிப்படை என்ன என்று உச்ச நீதிமன்றம் கடந்த இருபதாண்டுகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பட்டியலில் ஒரு சாதி இடம்பெறுவதற்கும், பல்வேறு பணிகளில் அதற்குக் குறைந்த அளவே பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதற்கும் போதுமான அளவு தரவுகள் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சாதிகளின் பட்டியல் அடிப்படையில் சீரான கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இப்படியாகக் குறிப்பிட்ட சில சாதிகள் மட்டுமே நீண்ட காலத்துக்கு எல்லாப் பலன்களையும் அனுபவிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஒவ்வொரு சாதியும் எவ்வளவு மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவர்களில் எல்லோருக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கேற்ற வகையில் இடஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க முடியும் என்று பல்வேறு சமூகங்களின் தலைவர்கள் கூறிவருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அளவிடக் கூடிய தரவுகளைப் பெறுவது என்பது 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாப்பதற்கு அவசியம் என்று மாநில அரசு கூறியிருக்கிறது. பொருத்தமானதும் துல்லியமானதுமான தரவுகளைப் பெறுவது என்பது சாதிவாரிக் கணக்கெடுப்பால் அடையக் கூடிய சாதகமான அம்சம்; இதனால், சில பிரிவுகளிடையே மனக்கசப்பு ஏற்படவும், கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் சில பிரிவினர் தங்களுக்கு அதிக அளவிலும் தனியாகவும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே மாதிரியாகப் பெயர்களைக் கொண்ட சாதிகளை அட்டவணைப்படுத்துவதும், சில பிரிவுகளைத் தனி சாதிகளாகப் பிரித்து வகைப்படுத்துவதா அல்லது உட்பிரிவுகளாகக் கருதுவதா என்பதும் சவாலாகவே இருக்கும்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x