Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM
சென்னையில் மார்ச் 22, 1890 அன்று பொது நூலகத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அன்றைய மாகாண ஆளுநர் கன்னிமாராவின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை: ‘இந்தியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்விக்கும் தொழிலுக்கும் தேவையான நூல்களை வாங்கிப் பயில இயலாத நிலையில், இத்தகைய தேவையை நான் அடிக்கல் நாட்டவிருக்கின்ற கட்டிடத்தில் அமையவிருக்கும் இலவச நூலகம் நிறைவுசெய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.’
இன்று சென்ட்ரல் ரயில் நிலையமும் எல்ஐசி கட்டிடமும் சென்னையின் பொது அடையாளங்களாக இருக்கின்றன என்றால், சென்னைப் பல்கலைக்கழகமும் கன்னிமாரா நூலகமும் இந்தப் பெருநகரத்தின் பெருமையைப் பேசும் அறிவுசார் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன என்று தயக்கமின்றிச் சொல்லலாம்.
இர்வின் கைவண்ணம்
ஏப்ரல் 14, 1890 அன்றே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நூலகம் திறந்துவிடப்பட்டது என்றாலும், கட்டிடப் பணிகள் முடிந்து அதிகாரபூர்வமாக அது திறக்கப்பட்டது டிசம்பர் 5, 1896-ல்தான். நூலகம் திறக்கப்பட்டு 125 ஆண்டுகளாகிவிட்டன. நூற்றாண்டுப் பழமையான அரிய புத்தகங்களுக்காக மட்டுமின்றி, அதன் கட்டிடக் கலைக்காகவும் கன்னிமாரா பேசப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், சட்டக் கல்லூரி, அருங்காட்சியகம் என்று சென்னையின் புகழ்பெற்ற இந்தோ சார்சனிக் பாணிக் கட்டிடங்களை வடிவமைத்த ஹெ.இர்வின்தான் கன்னிமாரா நூலகத்தையும் வடிவமைத்தவர். நூலகக் கட்டிடம் அரைவட்ட வடிவத்தில் அமைந்தது. மேற்கூரை, தூண்கள், ஜன்னல்கள் மட்டுமின்றி புத்தக அலமாரிகளும் நாற்காலிகளும்கூட இலைகள், மலர்கள் பின்னிப் பிணைந்தவையாக வடிவமைக்கப்பட்டன. வாசகர்களுக்கான மேஜைகளும்கூட வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டன.
முதல் நூலகர்
கன்னிமாரா கட்டிடத்துக்குள்தான் 1905 வரை சென்னை இலக்கியச் சங்க நூலகமும், 1928 வரை சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் இயங்கிவந்தன. 1939 வரை அருங்காட்சியகப் பொறுப்பாளரே நூலகராகவும் கூடுதல் பொறுப்பேற்றுவந்தார். 1939-ல் முதன்முறையாகத் தனி நூலகராகப் பொறுப்பேற்றார் ரா.ஜனார்த்தனம். அவர் நூலகராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால், மூடிய புத்தக அடுக்கு முறையே பின்பற்றப்பட்டுவந்தது. அதாவது, புத்தகங்கள் அலமாரிகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும், புத்தகம் வேண்டுவோர் நூலகரிடம் கூறி புத்தகத்தைப் பெற்று படித்து முடித்ததும் அவரிடமே கொடுத்துவிட வேண்டும். நூலகர் மீண்டும் புத்தகத்தைப் பூட்டி வைத்துவிடுவார்.
ரா.ஜனார்த்தனம் திறந்த புத்தக அடுக்கு முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி, வாசகர்களே புத்தகங்களை அலமாரிகளிலிருந்து எடுத்துப் படிக்கலாம். மேலும், நூலகத்தின் உறுப்பினர்கள் புத்தகங்களை இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்துச்சென்றும் படிக்கலாம். இந்த முறை படிப்படியாகப் பின்னாட்களில் மற்ற பொது நூலகங்களிலும் பின்பற்றப்பட்டது.
அவினாசிலிங்கத்தின் கனவு
இந்திய வரலாற்றிலேயே பொது நூலகங்களுக்கு என்று சட்டம் இயற்றப்பட்டது தமிழ்நாட்டில்தான். 1948-ல் அந்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1950-ல் நடைமுறைக்கு வந்தது. எல்லோர்க்கும் கல்வி சென்றுசேர வேண்டும் என்ற கனவோடு அப்போதைய கல்வித் துறை அமைச்சர் அவினாசிலிங்கத்தின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, கன்னிமாரா நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாக அறிவிக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் உள்ள நான்கு தேசிய நூலகங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. ஐநா, யுனெஸ்கோ, ஆசிய வளர்ச்சி வங்கி அமைப்புகளின் அனைத்து வெளியீடுகளும் கிடைக்கும் தகவல் மையமாகவும் அறிவிக்கப்பட்ட நூலகம் இது. இதே வளாகத்தில் சில காலம் நூலகப் பயிற்சி மையமும் இயங்கிவந்திருக்கிறது.
கன்னிமாரா நூலகத்துக்குப் புதிதாக வந்த நூல்களின் விவரங்களை ‘தி இந்து’ இதழில் பிரசுரிக்கும் வழக்கம்கூட ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. இப்போதும் நூலக அலமாரியில் புதிய நூல்களைக் காட்சிப்படுத்தும் வழக்கம் இருந்தாலும் இணையத்தின் அதிவிரைவுக் காலத்தில் புதிய புத்தகங்களைப் படிப்பதற்காக யாராலும் பொறுமைகாக்க முடியாது.
புதிய கட்டிடம்
பொது நூலகம் தற்போது இயங்கிக்கொண்டிருப்பது 1974-ல் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில். 125 ஆண்டுப் பழைமையான நூலகக் கட்டிடம் அரிய நூல்களைச் சேகரித்துவைக்கும் மையமாகச் செயல்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு உதவும் வகையில் 1981-ல் பாடநூல் பிரிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து, நகலச்சு எடுக்கும் வசதி, இணைய தொடர்புடன் கூடிய கணிப்பொறி வசதி ஆகியவையும் உருவாக்கப்பட்டன.
1994-ல் தொடங்கப்பட்ட குடிமைப் பணி கல்வி மையம் கன்னிமாராவின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று இன்று அதிகாரிகளாக இருப்பவர்களில் பலரும் இந்தக் குடிமைப் பணி கல்வி மையத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்கள். பொருளாதார அளவில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் பலருக்கும் ஒரு வேடந்தாங்கலாகவே புகலிடம் அளித்துக்கொண்டிருக்கிறது கன்னிமாரா நூலகம். இன்றும் மதிய நேரங்களில் வளாக மரத்தடிகளில் உணவுப் பொட்டலங்களோடு அமர்ந்திருக்கும் இளைஞர்களே அதற்குச் சாட்சி.
அறிவுப் பட்டறை
தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த முக்கியப் புத்தகங்கள்கூட வாங்கப்பட்டதாகக் காட்சிக்குப் படவில்லை. சென்னையின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றான கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டிடத்தைப் பாதுகாப்பதில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மழைக் காலங்களில் மேற்கூரையின் விரிசல்களிலிருந்து தண்ணீர் உள்ளே கசிவதால், கிடைத்தற்கரிய அரிய புத்தகங்கள் பலவும் சேதமடைய வாய்ப்புள்ளது.
இது, கன்னிமாரா நூலகத்துக்கு 125-வது ஆண்டு மட்டுமல்ல; தமிழகத்தின் பொது நூலகத் துறைக்குப் பொன்விழா ஆண்டும்கூட. அவினாசிலிங்கத்தின் கனவை நிறைவேற்றும் முயற்சியாகவே 1972-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி பொது நூலகத் துறையைத் தொடங்கினார். அண்ணாவைத் தங்களது வழிகாட்டும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுகவுக்கு, அவரைச் செதுக்கிய அறிவுப் பட்டறையான கன்னிமாராவைப் பழைமையின் துருவேறிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT