Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161-ம்கூறில் மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் 6.9.2018-ல் அளித்த தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்து பேரறிவாளனின் விடுதலைக்காகப் பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆளுநர் காலதாமதம் செய்துவருவதால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி பேரறிவாளன் சமர்ப்பித்த மனு, கடந்த நவம்பர் 3-ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமலேயே, நிலுவையில் உள்ள கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்குமாறு ஆளுநரை தமிழ்நாடு அரசாங்கம் ஏன் அணுகக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார்.
அப்போது தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன், பல்நோக்கு விசாரணை முகமையிடமிருந்து ஓர் அறிக்கையை ஆளுநர் கேட்டிருப்பதாகவும், அது வந்த பிறகே ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் கூறியதுடன் நிற்காமல், பேரறிவாளனின் இந்த மனு மீதான வழக்கைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு ஒரு கட்சிக்காரர் அல்ல என்றும் வாதிட்டார்.
ஒன்றிய அரசு வழக்குரைஞரின் விடாப்பிடி
நவம்பர் 21-ல் பல்நோக்கு விசாரணை முகமைக்குப் பொறுப்பான சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன்னிடமிருந்து எந்த அறிக்கையையும் ஆளுநர் கேட்கவில்லை என்றும், அப்படிக் கேட்டாலும், புலனாய்வு பற்றிய தகவல்களை சட்டப்படி ஆளுநருக்குத் தர முடியாது என்றும் கூறிவிட்டது.
பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், நவம்பர் 23 அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திடீரென்று ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.எம்.நடராஜ், கைதிகளை விடுதலை செய்வதில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ல் மாநில அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், பிரிவு 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும், எனவே ஒன்றிய அரசுதான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன் கீழ் கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசாங்கத்துக்குள்ள அதிகாரம் பற்றி 6.9.2018-ல் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பைப் படித்துக் காட்டியபோதும்கூட ஒன்றிய அரசின் வழக்குரைஞர் தனது வாதத்தைக் கைவிடாமல் விடாப்பிடியாக வாதிட்டார். அவரது வாதத்தை மறுத்து, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன் கீழ் மாநில அரசுக்குள்ள இறையாண்மையையும் அதிகாரத்தையும் பற்றிப் பேசாமல் தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் ஏனோ மௌனம் காத்தார்.
வேலூரா, புழலா?
இது ஒருபுறம் இருக்க, நாள்பட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படும் பேரறிவாளன் தனது மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பரோலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான ஆயத்தின் முன் 27.11.2020-ல் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனின் மனுவைக் கடுமையாக எதிர்த்த தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன், நீதிபதிகளிடம் உண்மைக்குப் புறம்பான பின்வரும் வாதத்தை முன்வைத்தது அதிர்ச்சியைத் தருகிறது: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தேவைப்பட்டால் அதற்கு மிக அருகிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் அவருடைய வாதம்.
பேரறிவாளன் தற்போது சி.எம்.சி. மருத்துவமனையிலிருந்து ஏறத்தாழ 140 கி.மீ. தொலைவில் உள்ள புழல் மத்திய சிறைவாசியாக இருக்கிறார் என்பதுகூட தமிழக அரசின் வழக்குரைஞருக்குத் தெரியவில்லையா? மேலும், சி.எம்.சி. போன்ற தனியார் மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெற சிறை விதிகளில் இடம் இல்லை என்பதும் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோதான் இதற்கு அனுமதி தர வேண்டும் என்பதும்கூட அவருக்குத் தெரியவில்லையா? தண்டனைக் குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்குக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 72-ன் மூன்றாம் பகுதியில் மாநில ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டக் கூறு 161-ல் வழங்கப்படும் இதே போன்ற அதிகாரத்தைப் பறிப்பதோ, அதில் குறுக்கிடுவதோ இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரின் எல்லை எது?
மேலும், குடியரசுத் தலைவரோ ஆளுநரோ தாமாகவே சுயேச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்னும் கேள்வியை உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலித்தது. இந்தியக் குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநரும் முறையே ஒன்றிய, மாநில அரசுகளின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும், அந்த அறிவுரை அவர்களைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதிபட, தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது (எடுத்துக்காட்டாக: மருராம் எதிர் இந்திய ஒன்றியம் [1981] 1எஸ்சிசி 107; கேஹார் சிங் எதிர் இந்திய ஒன்றியம் [1989] 1 எஸ்சிசி 204.)
ஒன்றிய அரசுக்கு தொடர்பில்லாத ஒரு வழக்கில் அது தலையிடுவதையும், அந்த அரசின் வழக்குரைஞர் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான வாதத்தை முன்வைப்பதையும் எதிர்த்து வழக்காடாமல் அதற்கு இசைந்துபோவதுபோல தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் மெளனம் காக்கிறார். இதையெல்லாம் தமிழ்நாடு அரசு இனியேனும் அனுமதிக்காமல் பேரரறிவாளனுக்கு நீதியும் நியாயமும் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை.
- எஸ்.வி.ராஜதுரை,
மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர்,
தொடர்புக்கு: sagumano@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT