Last Updated : 23 Oct, 2015 10:59 AM

 

Published : 23 Oct 2015 10:59 AM
Last Updated : 23 Oct 2015 10:59 AM

பயாஸ்கோப் | நனவான திரைக் கற்பனைகள்!

காலப் பயணம், கால இயந்திரம் ஆகியவற்றின் மீது மேற்கத்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரே மாதிரியான நபர்களின் படங்களை வைத்து, ‘குறிப்பிட்ட இந்த நபர் அந்தக் காலத்திலேயே வாழ்ந்திருக்கிறாரா? அப்படியென்றால், அவர் காலப் பயணத்தின் மூலம் கடந்த காலத்துக்குச் சென்றவரா?’ என்றெல்லாம் அவ்வப்போது பரபரப்புத் துணுக்குகள் அமெரிக்க, ஐரோப்பிய இதழ்களில் வெளியாவது சகஜம்.

காலப் பயணம் பற்றிய அறிவியல் புனைகதைகளின் அட்டகாசமான திரைவடிவம் ‘பேக் டு தி ஃபியூச்சர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம். 1985-ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் ராபர்ட் செமிக்கிஸ். ‘காஸ்ட் அவே’, ‘போலார் எக்ஸ்பிரஸ்’, ‘ஃப்ளைட்’ போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்றவர் இவர். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் புகழ்பெற்ற இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். துடிப்பான பள்ளி மாணவர் மார்ட்டி மெக்ஃப்ளை எனும் பாத்திரத்தில் மைக்கேல் ஜே. ஃபாக்ஸும், மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினாலும் அலட்டிக்கொள்ளாத விஞ்ஞானி டாக்டர் டாக் பிரவுன் பாத்திரத்தில் கிறிஸ்டோபர் லாயிடும் நடித்த இப்படம், ஹாலிவுட் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்தது. கார் ஒன்றில் ஏகப்பட்ட மாறுதல்களைச் செய்து கால இயந்திரத்தை உருவாக்குவார் டாக்டர் பிரவுன். நகைச்சுவை, ஒளிப்பதிவு, இசை, தொழில்நுட்பம் என்று இப்படத்தின் ‘ப்ளஸ்’கள் ஏராளம்!

மூன்று பாகங்களாக இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் மெக் ஃப்ளை, 1985-லிருந்து 1955-க்குச் சென்று (அப்போது இளம் வயதில் இருக்கும்) தனது தந்தைக்கும் தாய்க்கும் இடையில் காதல் மலர்வதற்கு உதவி செய்வார். மூன்றாம் பாகத்தில், மெக்ஃப்ளையும், டாக்டர் பிரவுனும் கெளபாய்கள் காலத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டமாக, நிகழ்காலத்துக்குத் திரும்புவார்கள். முற்றிலும் வேறுவிதமான காலகட்டத்திலிருந்து காலப் பயணம் செய்யும் மெக்ஃப்ளையின் உடையும், பழக்க வழக்கமும் அந்தந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தும். (கெளபாய்கள் காலத்துக்குச் செல்லும் மெக்ஃப்ளை, தனது பெயரை ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்’ என்று சொல்லும் காட்சி ரகளையானது!)

1989-ல் வெளியான இரண்டாவது பாகத்தில்தான் எதிர்காலத்துக்குச் செல்வான் மெக்ஃப்ளை. அதாவது, 1985-லிருந்து 2015-க்கு. ஆம், நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்துக்கு! அறிவியல் புனைகதைகளைப் பொறுத்தவரை 2000-லேயே எல்லா இடங்களிலும் ரோபோக்கள் புழக்கத்துக்கு வந்துவிடும் என்றெல்லாம் கற்பனை செய்யப்பட்டது. இந்தப் படத்திலும் எதிர்கால உலகம் பற்றிய அதீத புனைவுகள் இருந்தன. படத்தில் காட்டும் அளவுக்கு, இன்று உலகமே அதி நவீனமாகிவிடவில்லை. எனினும், படத்தில் காட்டப்பட்ட கற்பனை சாதனங்கள் இன்று புழக்கத்துக்கு வந்திருக்கின்றன. சில சாதனங்கள் ஆராய்ச்சி அளவில் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, வீடியோ சாட்டிங், தட்டையான டி.வி. (அதன் பெரிய திரையில் ஒரே சமயத்தில் பல்வேறு சேனல்கள் ஓடிக்கொண்டிருக்கும்), நாம் இன்று பயன்படுத்தும் டேப்லெட் கணினிகள், ஹோலோகிராம் எனப்படும் தொழில்நுட்பம் (முப்பரிமாண உருவத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு மேடைகளில் ‘தோன்றி’ நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தாரே, அந்தத் தொழில்நுட்பம்) போன்றவை இப்படத்தில் இடம்பெற்றன. இன்று அவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. படத்தில் வரும் பறக்கும் கார், வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

இத்தனை சுவாரஸ்யங்களைக் கொண்ட இப்படத்தை புதன்கிழமை (அக்டோபர் 21) அதிபர் ஒபாமா உட்பட அமெரிக்கர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். காரணம் வேறொன்றும் இல்லை, கதையின்படி, மெக்ஃப்ளை (1985-லிருந்து) வந்து சேரும் தேதி அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x