Published : 21 Oct 2015 10:37 AM
Last Updated : 21 Oct 2015 10:37 AM
மனிதர்களுக்குப் பொறாமை இன்றியமையாதது என்று கூறுகிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவராயிருந்த லூதர் மேயர். சரிதான், வசிட்டரைப் பார்த்துப் பொறாமைப்பட்ட காரணத்தால்தானே கடும் தவம் புரிந்து விசுவாமித்திரர் பிரும்ம ரிஷியாக முடிந்தது!
பறவைகளிலும் பாலூட்டி விலங்குகளிலும் கூடப் பொறாமையுணர்வு தென்படுகிறது. புலிகளிலும் சிங்கங்களிலும் ஆண்கள் தமது சாம்ராஜ்ய எல்லைக்குள் வேறு ஆண்கள் நுழைய அனுமதிப்பதில்லை. வாலில்லாக் குரங்கு இனத்தைச் சேர்ந்த கொரில்லா, சிம்பன்சி, கிப்பன் வகையறாக்களில் கூட்டத் தலைவருக்கு மட்டுமே மற்ற பெண்களை அனுபவிக்கும் உரிமையிருக்கிறதே என்ற பொறாமை, கூட்டத்தில் உள்ள பிற ஆண் குரங்குகளுக்கு இருப்பதை ஜேன் உடால் என்ற விலங்கு நடத்தை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார். தலைவர் அயர்ந்திருக்கும் வேளைகளில், கூட்டத்திலுள்ள இளம் ஆண் குரங்குகள் அவருடைய அந்தப்புரத்திலிருந்து பெண் குரங்குகளை ஆசை காட்டி அழைத்து மகிழுமாம். ஆனால், அவை அதற்காக மனிதர்களைப் போலத் தலைவருக்கு எதிராகச் சூழ்ச்சிகளிலும் உள்ளடி வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.
பொறாமை தூண்டப்படுகிறது
மூளையில் ஹைபோதாலமஸ் பகுதியில் சுரக்கும் பல்வேறு ரசாயனங்களே மகிழ்ச்சி, கோபம், துக்கம், பொறாமை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. மனிதர்கள் மட்டுமே அந்த உணர்ச்சிகளுக்கு வெளிப்படையான நீண்ட கால மறுவினைகளைக் காட்டுகிறார்கள்.
பொறாமை உணர்வு மூளையின் செல்களில் உருவாகிறது என ஆய்வர்கள் கருதுகிறார்கள். அதில் ஜீன் அமைப்புக்கும் பாரம்பரியத்துக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். திருதராஷ்டிரனுக்குப் பாண்டுவின் பேரிலும் காந்தாரிக்கு குந்தியின் பேரிலும் துரியோதனாதிகளுக்குப் பாண்டவர்கள் பேரிலும் இருந்த பொறாமையைக் கவனிக்கும்போது இந்தக் கருத்து ஏற்புடையதாகவே தெரிகிறது.
ஒரு ஆய்வின்போது இரண்டு ஆறு மாதக் குழந்தைகளை ஒரே கட்டிலில் படுக்க வைத்தார்களாம். ஒன்றின் வாயில் ஒரு நிப்பிள் வைக்கப்பட்டது. மற்ற குழந்தை சில நிமிஷங்களுக்கு அதையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு, தன் கையை நீட்டி நிப்பிளைப் பறித்துத் தன் வாயில் வைத்துக்கொண்டதாம். இதுபோல அது ஆறு முறை நிப்பிளைப் பறித்துக் கொண்டேயிருந்ததாம். இதன் மூலம் புரிவது என்ன?
பொறாமை என்பது நேர்மையான வகையில் மற்றவரை விஞ்ச வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுவதாயிருந்தால் அது வரவேற்கத்தக்கதே என்கிறார் லூதர் மேயர்.
அதே சமயம், எப்போதும் எதிராளி பெற்ற லாபத்தைப் பற்றியோ புகழைப் பற்றியோ பொறாமையுடன் எண்ணிக்கொண்டிருந்தால் மூளையில் பாதகமான விளைவுகள் ஏற்படும். முன்கோபம், நரம்புத் தளர்ச்சி, தூக்கமிழப்பு, செயலிழப்பு, கவனச் சிதறல் போன்ற உளவியல் கோளாறுகள் ஏற்பட்டு, உடல் மற்றும் மனம் பாதிக்கப்படும் என்கிறார். அது சரி, எல்லா நாட்டு இலக்கியங்களிலும் பொறாமையில் பீடிக்கப்பட்ட கதை மாந்தர்கள் அனைவருக்கும் இறுதியில் துன்பமும் தண்டனையும்தானே கிட்டுகின்றன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT