Published : 16 Oct 2015 11:04 AM
Last Updated : 16 Oct 2015 11:04 AM
ஐம்பூதங்களில் அடுத்ததாக நிலம். தரை, புவி, மண், இடம், வயல் என்று ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல பொருள்கள் நிலத்துக்கு உண்டு.
சங்க இலக்கியத்தில் திணைப் பாகுபாட்டில் ஐந்து வகை நிலங்களும் அவற்றுக்கு உரியதாகச் சில இயல்புகளும் கூறப்பட்டிருக்கின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும், குறிஞ்சியும் முல்லையும் இயல்பழிந்து தரிசாகும் நிலம் பாலை என்றும் அழைக்கப்பட்டன.
நவீன புவியியல் நோக்கில் நிலத்தை ஏராளமான வகைகளாகப் பகுத்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வகையிலும் உட்பிரிவுகள் ஏராளம் உண்டு. இவற்றில் சமவெளி தொடர்பான சொற்களைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.
அருஞ்சுரம் (நிழலற்ற வெட்டவெளி)
அவாந்தரவெளி (வெட்டவெளி)
எடார் (திடல்)
கடுவெளி (நிழலற்ற வெட்டவெளி)
சமக்கட்டுநிலம் (சமவெளி)
சமபூமி (சமவெளி)
தட்டு (சமநிலம்)
தரைப்பற்று (சமநிலம்)
திறந்தவெளி
துறவை (திறந்தவெளி)
மன்றம் (திறந்தவெளி)
மைதானம்
வயல் (பயிர் நிலம், திறந்தவெளி)
வயலை (திறந்தவெளி)
வாகியம் (திறந்தவெளி)
வெட்டவெளி
வெடி (திறந்தவெளி)
வெண்பு (திறந்தவெளி)
வெளி...
சொல்தேடல்
இணைய உலகில் தற்போது ட்ரால் (troll), ட்ராலிங் (trolling), ட்ராலர் (troller) ஆகிய ஆங்கிலச் சொற்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஒருவரைக் கடுமையாகவும் மோசமாகவும் வசைபாடியோ, அவரைத் தூண்டிவிடும் விதத்திலோ பதிவிடுவதைக் குறிக்கும் சொற்கள்தான் ட்ரால், ட்ராலிங் என்பவை. இப்படிப் பதிவிடுபவர் ட்ரால், ட்ராலர் என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை வாசகர்கள் பரிந்துரைக்க இயலுமா?
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT