Published : 02 Oct 2015 09:09 AM
Last Updated : 02 Oct 2015 09:09 AM
பாதுகாப்பற்ற நிலையில் எத்தனையோ கோமதி அம்மாக்களும், அப்சராக்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றனர்.
பெங்களூரில் இருந்தபோதுதான் கோமதி அம்மாளைச் சந்தித்தேன். இன்ஃபோசிஸில் வேலை கிடைத்த மகனோடு, எங்கள் பக்கத்து வீட்டில் குடியேறினார் கோமதி அம்மாள். திருநெல்வேலி மணம் கமழக் கமழ அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஊர் ஞாபகத்தைக் கிளறின. அப்பாவித்தனமும் குழந்தை முகமும் மாறாத அவருடைய நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை சொன்னது, அவர் ஒரு தனித்து வாழும் தாய் என்பதை. 50 வயதைக் கடந்த கோமதி அம்மாளுக்குத் தன் கூடவே இருக்கும் மூத்த மகனைத் தவிர, இளைய மகனும் மகளும் பி.இ. படித்து முடித்துவிட்டு சென்னையிலும் ஹைதராபாத்திலும் ஐ.டி. கம்பெனிகளில் வேலைபார்க்கிறார்கள்.
கோமதி அம்மாள் 15 வயதில் திருமணம் ஆனவர். அன்பான கணவர். சவுகரியமான குடும்பம். மூன்று பிள்ளைகள். இப்படிச் சீராக வாழ்க்கை நகர, ஒரு பிற்பகலில் கோமதி அம்மாள் தனது, பெண் குழந்தையை இடுப்பில் இடுக்கிக்கொண்டு, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே கிரைண்டரில் வழக்கம்போல இட்லி மாவை அரைத்துக்கொண்டிருக்கிறார். திண்ணையில் மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டிருக்கிறான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மூத்தவனைக் கணவர் அழைத்துவந்துவிடுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் அவருடைய மரணச் செய்தி வந்து சேர்ந்தது.
பிள்ளைகளுக்காக வாழத்தானே வேணும்
அன்புக் கணவரை இழந்து தவிக்கும் நிலையில் சொத்து விவகாரத்திலும் ஏமாற்றினர் உறவினர். உலகம் அறியாத இளம்பெண்தான் கோமதி. வீடு வீடாக, கடை கடையாக இட்லி மாவு அரைத்துக் கொடுத்தே மூன்று பிள்ளைகளையும் பி.இ. படிக்க வைத்திருக்கிறார். “இவ்வளவு கஷ்டப்பட்டு வாழணுமா என ஒரு நாளாவது உங்களுக்குத் தோணியிருக்கும் இல்லையாம்மா?” என ஒரு நாள் கேட்டபோது சொன்னார், “என் பிள்ளைகளுக்காக வாழத்தானே வேணும்!”.
‘மாயா’திரைப்படத்தின் அப்சராவையும் மாயா மேத்யூஸையும் பார்த்தபோது கோமதி அம்மாள்தான் ஞாபகத்துக்கு வந்தார்.
மனஸ்தாபத்தால் கணவரைப் பிரிந்து, கைக்குழந்தையோடு தோழி வீட்டில் வாழ்கிறாள் அப்சரா. துணிச்சலும், நேர்மையும், திறமையும் மிகுந்த நவீன பெண்ணாக இருக்கிறாள். விளம்பரப்படங்களில் நடிக்கிறாள். ஆனால், மீண்டும் மீண்டும் பண விஷயத்தில் ஏமாற்றப்படுகிறாள். அவளுக்குக் கொடுக்கப்படும் காசோலைகள் போன வேகத்தில் வங்கியிலிருந்து திரும்புகின்றன. கடன்கொடுத்தவர் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார். கணவரோ தோழி மூலம் காசோலையை அனுப்புகிறார். சுயமரியாதையில் அதை அவள் கிழித்து எறிகிறாள்.
குழந்தையைப் பகலில் மழலைக் காப்பகத்தில் (க்ரெஷ்) விட்டுவிட்டு எப்படியாவது பணத்தைப் புரட்டுவதற்காக காசோலை கொடுத்து ஏமாற்றிய தயாரிப்பாளரைத் தேடிச் செல்கிறாள். “உங்க பாப்பா அழுதுக்கிட்டே இருக்கா… சீக்கிரம் வந்து தூக்கிட்டுப் போங்க. வரும்போது இந்த மாசத்தோட ஃபீஸ் கட்டிடுங்க” என்ற போன் அழைப்பு காப்பகத்திலிருந்து வருகிறது. நிலைகுலைந்துபோகிறாள்.
படத்துக்குள் வரும் பேய்ப் படம் ‘இருள்’. அதைத் தனியாகப் பார்த்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று ஒரு போட்டி. போட்டியில் ஏற்கெனவே ஒருவர் கலந்துகொண்டு மாரடைப்பால் இறந்துவிடுகிறார். அவர்தான் அப்சரா தேடிச்செல்லும் தயாரிப்பாளர்.
தாயின் துணிவு
தனக்காகவும் தன் குழந்தைக்காகவும் அந்தப் படத்தைப் பார்க்கத் துணிகிறாள் அப்சரா. இப்படியாகத் தனித்து வாழும் ஒரு தாயின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிக்கிறது 'மாயா' படம். தோற்றத்தில் நவீன பெண்ணாக இருந்தாலும், முழுக்க முழுக்கச் சம்பிரதாயமான இந்தியத் தாயாகவே இருக்கிறாள் அப்சரா. தன் குழந்தைக்காகத் தன்னையே பலிகொடுக்கவும் துணிகிறாள். தனித்து வாழும் தாய்கள் பலர் இப்படி எத்தனையோ சோதனைகளைத் தினந்தோறும் எதிர்கொள்ளும் நிதர்சனம் திரையரங்க இருட்டுக்கு வெளியே.
அப்சராவைவிடவும் அவளுடைய தாய் மாயா மேத்யூவின் வாழ்க்கை அவலமானது. கர்ப்பிணியான மாயாவுக்கு அவளுடைய கணவர் வேறொரு பெண்ணோடு உறவு வைத்திருப்பது தெரியவர அவள் நிர்க்கதியாகிறாள். மனநலம் குன்றியோருக்கான விடுதிக்கு இழுத்துவரப்படுகிறாள். அங்கு வதைக்கப்படுகிறாள்.
முக்கியக் காரணம்
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் தனித்து வாழும் தாய்மார்களைக் குறித்துப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2011-ல் நடத்திய ஆய்வு சுட்டிக்காட்டும் முக்கியமான விஷயம் இது. கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதுதான் பெண்கள் அவர்களின் திருமணத்தைத் துண்டித்துக்கொள்ள முக்கியக் காரணம்.
அதேபோல, தனித்து வாழும் 1,000 தாய்மார் களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் 54% விதவைகள், 25% கணவனைவிட்டுப் பிரிந்தவர்கள், 15% கணவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது வஞ்சிக்கப்பட்டவர்கள், 6% விவாகரத்தானவர்கள். அதிலும் பெரும்பாலா னவர்கள் 33 வயதுக்கு உட்பட்டவர்கள். 60% தனித்து வாழும் தாய்மார்கள் எந்தத் துணையும் இன்றி தங்கள் பிள்ளைகளோடு மட்டுமே வாழ்ந்துவருவது இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
உறைய வைத்த காட்சி
கதாநாயகி அப்சராவும் இதே நிலையில்தான் இருக்கிறாள். தன் வாழ்வைப் பணயம் வைத்து அந்தப் பேய்ப் படத்தைப் பார்க்கச் செல்லும்போதுகூடத் தியேட்டரின் நுழைவாயில் வரை தன் குழந்தையைக் கையில் ஏந்திச் செல்கிறாள். தன்னந்தனியாகக் கைக்குழந்தையோடு ஆட்டோவில் செல்லும் காட்சி, ஒரு தாயின் தனிமையைப் பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பதற்றத்தில் இருக்கும் அவளை ஆள் அரவம் இல்லாத நெடுஞ்சாலையில் ஆட்டோவை ஓட்டியபடியே பின்நோக்கும் கண்ணாடி வழியாகக் கூர்மையாக இச்சையோடு பார்க்கிறான். படம் முழுக்கப் பேய் ஏற்படுத்தும் திகிலைக் காட்டிலும் ஒரு பெண்ணாக என்னை அச்சத்தில் உறையவைத்தக் காட்சி அது.
அப்போது அருவருப்பும் கோபமும் கலந்த பார்வையில் ஆட்டோ ஓட்டுநரைப் பார்க்கும் அப்சராவின் கண்கள், இரவு நேரங்களில் தனிமையில் பயணிக்கும் பெரும்பாலான பெண்களின் கண்கள். தன் பயத்தை மறைத்துக்கொள்ளும் செயல்தான் அது. அவள் பயம், வெறுப்பாக மாறுகிறது. அதே பயம்தான் பேயாக மாறும் மாயாவுக்கு உயிர்களைப் பறிக்கும் வெறியாக மாறுகிறது.
அது சரி, சாமானியப் பெண்களால் கோபப்பட மட்டும்தானே முடியும்! தெய்வமாக அல்லது பேயாக உருமாறினால் மட்டும்தானே இங்கு அநீதிக்குப் பெண்களால் எதிர்வினையாற்ற முடியும்?
கோமதி அம்மாளின் வாழ்க்கையில் கணவரின் துர்மரணம் அவரைத் தனித்து வாழ வேண்டிய தாய் ஆக்கியது. ஆனால், அப்சராவுக்கும் மாயா மேத்யூவுக்கும் கணவருடன் ஏற்பட்ட உறவுச் சிக்கல் அவர்களைத் தனிமையில் ஆழ்த்தின. இப்படியாக இன்று தனிமையின் கொடுமையை அனுபவித்துக்கொண்டே நிர்க்கதியாக, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் எத்தனையோ கோமதி அம்மாக்களும், அப்சராக்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றனர்.
அவர்கள் காயப்பட்டு விழும்போது தாங்கிப்பிடித்து, அவர்களது துக்கங்களையும் காயங்களையும் ஆற்றுவதற்கு, சர்வ வல்லமை படைத்த 'மாயசக்தி' எதுவும் வருமா?
- ம.சுசித்ரா, தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT