Published : 02 Oct 2015 09:17 AM
Last Updated : 02 Oct 2015 09:17 AM
தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து…
தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?
என்னுடைய அப்பா மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் மூலமாகத்தான் கம்யூனிஸக் கருத்துகள் சிறிய வயதிலேயே என்னை வந்தடைந்தன. என் அப்பா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றியும் ஒரு ஆக்கபூர்வமான பிம்பத்தையே என்னிடத்தில் ஏற்படுத்தினார். வரலாற்றில் இவர்களை எதிரெதிர் தரப்பில் வைத்து எதிரிகளாகச் சித்தரிக்க முடியாது என்ற பார்வையை என்னிடம் அவர் ஏற்படுத்தினார். காந்தியை என்றுமே எதிரியாக நான் பார்த்ததில்லை. அவரை விமர்சித்திருக்கிறேன். என்றாலும் பலரும் காந்தியைத் தட்டையாகப் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. சமூகத்தின் பன்மைத்துவத்தை நேசிக்கிற யாரும் காந்தியை வெறுக்க முடியாது.
நெருக்கடி நிலை, பாபர் மசூதி இடிப்பு, ஈழத்தில் நிகழ்ந்த இனஅழிப்பு ஆகிய மூன்று வரலாற்று நிகழ்வுகளும்தான் என்னை மேலும் காந்தியை நோக்கித் தள்ளின.
பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை என்பது இந்திய வரலாற்றில், குறிப்பாகச் சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை.இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்கவில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத்தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும் தலித்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மைத் தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள், முஸ்லிம்கள், தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.
இன்னொரு பக்கம், ஈழப் போராட்டம். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தால் கடைசியில் யாருக்கும் விடுதலை கிடைக்காதது மட்டுமல்லாமல், இனஅழிப்பும் நிகழ்ந்தது. 1990-களுக்குப் பிறகு ஹமாஸ், ஸ்காட்லாந்தில் உள்ள ஆயுதப் போராட்ட இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பலவும் ஆயுதப் பாதையைக் கைவிட்டு வேறு விதமான பாதைக்குச் செல்வது என்று முடிவெடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அமைதி வழியைத் தேர்ந்தெடுத்தவர் காந்தி.
காந்தி மட்டும் இல்லையென்றால் புரட்சியின் மூலம் ஆங்கிலேயரை அடித்துத் துரத்தி இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தியிருக்கலாம் என்று தீவிர இடதுசாரிகள் தரப்பில் அடிக்கடி சொல்லப்படுகிறதே?
அவர்களிடம் ஒரு எளிய கேள்வி. ஆனானப்பட்ட புரட்சியாளர் லெனின் புரட்சி ஏற்படுத்திய ரஷ்யாவில் இன்று என்ன நிலை என்று கேட்க வேண்டும். மாவோ ஏற்படுத்திய சீனப் புரட்சியின் இன்றைய நிலை என்ன? சும்மா பேசலாம். ஆனால், இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை. வன்முறை மூலம் ஒரு தலைமுறையானது தனது நிகழ்காலத்தை இழக்கிறது. உன்னதமான லட்சியங்களைக் காரணம் காட்டித்தான் நிகழ்காலத்தை இழக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உன்னத லட்சியமொன்றைக் காட்டிக்கூட ஒருவரது நிகழ்காலத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. எதிர்காலம் என்பது அப்படியொன்றும் உத்தரவாதமான எதிர்காலமும் அல்ல.
பலவீனமான மக்கள், பிரம்மாண்டமான எதிரி. இந்நிலையில் வன்முறையின் மூலம் அந்த பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்த நினைத்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அறிந்தே காந்தி அகிம்சையைத் தேர்ந்தெடுக்கிறார். பலவீனமான மக்களைக் கொண்டு பலம் பொருந்திய எதிரியை வீழ்த்துகிறார். எதிரியை வெறுக்காமல் எதிர்ப்பது எப்படி என்பது அவரது அருமையான உத்திகளுள் ஒன்று!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கியப் பங்கு என்னவென்று நினைக்கிறீர்கள்?
மேல்தட்டினர் கையில் அன்றைய சுதந்திரப் போராட்டம் இருந்தது. பெருந்திரளாக மக்களைத் திரட்டும் நோக்கம் அவர்களுக்குக் கிடையாது. காந்தியின் வருகைக்குப் பிறகு கதையே வேறு. இவ்வளவு பெருந்திரளான மக்களை, குறிப்பாக ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் போன்றோரை காந்தி அளவுக்கு அரசியலுக்குள் கொண்டுவந்தவர்கள் உலக வரலாற்றில் அரிது. கூடவே, முஸ்லிம்களை விட்டுவிட்டுப் பெறும் சுதந்திரம் சுதந்திரமாக இருக்காது என்றும் காந்தி கருதினார்.
காந்தி வருணாசிரமக் கருத்துகளை ஆதரித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?
காந்தி தேங்கிப்போன ஒரு மனிதரல்ல. தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வந்தவர் அவர். ஆரம்பத்தில் வருணாசி ரமத்தின் மீது சிறிது ஈர்ப்பு கொண்டவராகத் தோன்றி னாலும் தீண்டாமையைத் தனிப்பட்ட வாழ்விலோ அவரது கம்யூன்கள், ஆசிரமங்கள் எதிலுமோ அவர் கடைப் பிடித்ததே இல்லை.
காந்தி தீண்டாமைக்கு எதிராக தென்னாப்பிரிக்க காலத்திலிருந்தே பேசிவந்திருக்கிறார். மயிலாடுதுறையில் பெருந்திரளான பிராமணர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அந்த உரையில், அந்தப் பகுதியில் நிலவிய தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசுகிறார். தீண்டாமைக் கொடுமையையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி முன்னேறப்போகிறீர்கள் என்று கடுமையாக வசைபாடுகிறார்.
போகப்போக முற்றிலும் புரட்சிகரமான கருத்துகள் அவரிடமிருந்து உருவாகின்றன. ஒரு கட்டத்தில் தன் ஆசிரமத்துக்குள் கலப்புத் திருமணம் மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று அறிவித்தார். அதுவும் மணமக்களில் ஒருவர் தலித்தாக இருப்பது அவசியம் என்றார். அதையே கடைப்பிடிக்கவும் செய்தார்.
காந்தி சொன்னார் என்று தங்கள் சொத்து சுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தலித்களுக்காகப் பணிபுரிய வந்த பிராமணர்கள் ஏராளம். அம்பேத்கர், பெரியார் போன்றவர்களெல்லாம் ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் முன்னோடிகள்தான். இந்த அம்சத்தில் காந்தியின் கருத்து மாற்றத்துக்குக் காரணமானவர்கள் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். ஆனால், அவர்களின் போராட்டங்கள் முடிந்த பிறகு கோயில்களில் மறுபடியும் பழைய கதையே தொடர்ந்திருக்கிறது. காந்தி நுழைந்த பிறகு, ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில்கள் திறந்துவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு ஆலயப் பிரவேசப் போராட்டங்களை பெரியார், அம்பேத்கர் நடத்தினர். காந்தியோ பாதிப்புகளுக்கு எந்தத் தரப்பு காரணமோ அந்தத் தரப்பை முன்னிறுத்துகிறார். மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடக்கிறது. இதைப் பற்றியெல்லாம் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’என்ற புத்தகத்தில் விரிவாக விவாதித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் விரிவாக்கிய பதிப்பு பிரக்ஞை பதிப்பகத்தால் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.
கீதையை எப்போதும் காந்தி தூக்கிப்பிடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதல்லவா?
எதிரியை அழிப்பதற்கான ஒரு உத்தி நூல் போல், ஒரு வன்முறை நூலாக திலகர், அரவிந்தரில் ஆரம்பித்து பாரதியார் வரைக்கும் உரை எழுதுகிறார்கள். கீதைக்கு காந்தியும் உரை எழுதுகிறார். ‘நமக்கு எதிரே இருக்கும் எதிரியை வீழ்த்துவதற்கான புத்தகம் அல்ல இது. நமக்கு உள்ளே இருக்கும் தீமையை, எதிரியை வீழ்த்துவதற்கான வழிமுறையைச் சொல்லக் கூடிய, சமாதானத்தை வலியுறுத்தக்கூடிய புத்தகம் இது’ என்கிறார் காந்தி. இந்துத்துவவாதிகள் இதை எதிர்த்தாலும், அவருக்கு மாபெரும் செல்வாக்கு இருந்ததல்லவா! ஆகவே, அவர் சொன்னதை வேதவாக்காக மக்கள் எடுத்துக்கொண்டார்கள். புனிதப் புத்தகங்களாக இருந்தாலும் கூட இந்தக் காலத்துக்குப் பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பொருத்தமில்லாவற்றை விட்டுவிட வேண்டும் என்பது அவரது கருத்து.
இந்துத்துவவாதிகள் அவரைக் கொன்றதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. பாகிஸ்தான் பற்றிய பேச்சு இல்லாதபோதே, முப்பதுகளிலிருந்தே காந்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. சனாதனத்தின் மீது காந்தி நிகழ்த்திய பெரும் தாக்குதல்தான் அவரது படுகொலைக்கு முக்கியமான காரணம்.
அம்பேத்கர்-காந்தி எதிரெதிராகச் சித்தரிக்கப்படுகிறார்களே?
அம்பேத்கர்-காந்தி இருவரையும் எப்போதும் எதிரிகளாகப் பார்க்க முடியாது. இருவரின் அரசியல் அணுகுமுறையும் வேறுவேறு, அவ்வளவுதான்.
பூனா ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அம்பேத்கருக்கு பெரியார் போன்ற ஒருசிலரே ஆதரவாக இருந்தார்கள். எம்.சி. ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள்கூட அம்பேத்கருக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். தலித்களை சிறுபான்மையினராக உள்ளடக்கி, அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி அளிப்பதை காந்தி ஆதரித்திருக்கலாம்தான். காந்தியின் பிழைகளில் ஒன்று என இதைச் சொல்லவும் இடமுண்டு. ஆனால், அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு எனச் சொல்லிவிடவும் முடியாது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை அவர்கள் சில ஆண்டு அனுபவங்களுக்குப் பின், அது தங்களை அந்நியப்படுத்துகிறது என்று சொல்லி, வேண்டாம் என மறுத்துவிட்டனர்.
அரசியல் நிர்ணய சபையிலும், முதல் அமைச்சரவையிலும் தகுதியானவர் என்கிற வகையில் அம்பேத்கரை உள்ளடக்கியதில் காந்தியின் பங்கும் இருந்ததுதானே.
காந்தியின் இந்தியாவுக்கும் மோடியின் இந்தியாவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?
காந்தி தேசம் பல வண்ண தேசம். மோடி தேசம் ஒற்றை வண்ண தேசம்; காவி தேசம்.
காந்தியுடன் உங்களால் உடன்பட முடியாத இடங்கள் என்னென்ன?
அவரது கட்டாய மது விலக்கு, காந்தியப் பொருளா தாரம் போன்றவற்றில் நடை முறைச் சிக்கல்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அதை காந்தியே உணர்ந்திருந்தார். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் அதிகாரங்களில் இருந்த போதெல்லாம் அவர் தனது பொருளாதாரத் திட்டத்தை வற்புறுத்தவில்லை. காந்தியப் பொருளாதார வல்லுநரான ஜே.சி.குமரப்பா இருமுறையும் பதவி விலகத்தான் நேர்ந்தது. ஆனால், இன்றைய புதிய உலகச் சூழலில் காந்தியப் பொருளாதாரத்தையும் கூட நாம் மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டியுள்ளது.
எனக்கு காந்தியை விட மார்க்ஸ்தான் அதிக விருப்பத்துக்குரியவர். ஆனால், என் விருப்பத்துக்குரிய மார்க்ஸோ, மதிப்புக்குரிய காந்தியோ, பெரியார், அம்பேத்கரோ யாராக இருந்தாலும் இன்று முற்றிலும் பொருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. மார்க்ஸைப் பற்றி லெனின் சொன்னது நினைவுக்கு வருகிறது :
`மார்க்ஸின் காலகட்டம் வேறு, நம் காலகட்டம் வேறு. அது முதலாளித்துவக் காலகட்டம். நம்முடையது ஏகாதிபத்தியக் காலகட்டம். இந்தக் காலகட்டத்தை விளக்க 70 மார்க்ஸ்கள் தேவைப்படுவார்கள்.' ஆகவே, இந்த முன்னோடிகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதைவிட அவர்களின் வழிகாட்டுதல்களை எடுத்துக்கொண்டு நமக்கான அரசியலை இன்று நாமே உருவாக்கிக்கொள்வதுதான் முக்கியம்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT