Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கானோரின் கண்கள் தொலைக்காட்சித் திரையை விட்டு அகலவே இல்லை. மாநிலங்களின் தேர்தல் முடிவும் நிறைய தருணங்கள் திருப்பம் நிறைந்தவையாக இருந்தன. முடிவு அறிவிக்கப்படுவதற்கும் முன்பே வெற்றியடைந்துவிட்டதாக முந்திக்கொண்டு கூறிய அறிவிப்புகளும் உண்டு. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நாட்டின் தேர்தல் நடைமுறையை அபத்த நாடகம்போல ஆக்கிய தருணங்களும் உண்டு.
எனினும், பெரும்பாலான ஜனநாயகங்களில் தேர்தலை நடத்தும் நடுவராகிய தேர்தல் ஆணையமானது அமெரிக்கத் தேர்தலில் தலைகாட்டவில்லை என்பதை எந்தக் கருத்தாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளரும், வல்லுநரும், எந்தத் தலையங்கமும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதுவும், உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில்.
விநோதமான வெற்றிடம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தைப் போன்று அமெரிக்காவில் இருப்பதாகிய ‘அமெரிக்க ஐக்கிய மாநிலங்களுக்கான கூட்டரசுத் தேர்தல் ஆணையம்’ ஒரு ஆணையைக்கூட வெளியிடவில்லை என்பதையும், ஒரு குறுக்கிடலைக்கூடச் செய்யவில்லை என்பதையும் கூர்ந்து கவனித்துவருகிறேன். தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்திருக்கும் எனக்கு (தலைமைத் தேர்தல் அதிகாரியாக 2009 பொதுத் தேர்தலை நடத்தினேன்) இது ஒரு விநோதமான வெற்றிடமாகத் தோன்றுகிறது.
தேர்தல்கள் நடத்தும்போதும் தேர்தல் தொடர்பான பிற விஷயங்களின்போதும் பிரயோகிக்கக் கூடிய அளவில் ‘இந்தியத் தேர்தல் ஆணைய’த்துக்கு மிகப் பெரிய அதிகாரத்தைக் கொடுப்பதன் அவசியம் குறித்து நம் அரசமைப்பின் தந்தையர்கள் அரசமைப்பு அவையில் விவாதித்தார்கள். வாக்காளர் பட்டியலின் பாதுகாவலராக இருப்பதால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அனைத்து விவகாரங்களும் ‘இந்தியத் தேர்தல் ஆணைய’த்தின் வரம்புக்குள் வருகிறது. உண்மையில், தேர்தலின்போது ‘இந்தியத் தேர்தல் ஆணைய’த்துக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் வானளாவியவை; தேர்தல் நடைமுறையின்போது உச்ச நீதிமன்றம்கூடத் தலையிடுவதில்லை. ஆக, ஒரு கேள்வி எழுகிறது. அமெரிக்காவின் தேர்தல் ஆணையம் ஏன் தன்னைக் கிட்டத்தட்ட புலப்படாத வகையில் இருத்திக்கொள்கிறது?
ஓர் ஒப்பீடு
முதலாவதாக, அமெரிக்கக் கூட்டரசின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைவிடக் குறைவு. மேலும், அமெரிக்கக் கூட்டரசின் தேர்தல் ஆணையம் ஒப்பீட்டளவில் சமீபத்தில்தான், அதாவது 1975-ல்தான் நிறுவப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் நிதி தொடர்பான விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துடன் தொடங்கப்பட்டது. ஒரு கண்காணிப்பு அமைப்பாக, அது நிதி தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கான பணப் பங்களிப்புகள்மீது சட்டத்தை அமல்படுத்துவதற்கும், அதிபர் தேர்தலில் பொதுமக்களின் நிதிப் பங்களிப்புகளை மேற்பார்வையிடுவதற்குமானது. ஆனால், இதுவரை இந்தப் பொறுப்புக்கு உட்பட்டு அது அளித்த எந்த அறிக்கையும் என் கண்ணில் படவில்லை.
இதற்கான காரணம் அதிர்ச்சியூட்டக் கூடியது. அமெரிக்கக் கூட்டரசின் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு ஆணையர்கள் தலைமை வகிக்கிறார்கள். இந்த ஆறு பதவிகளும் ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட வேண்டும், இதை செனட் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், மிக முக்கியமான இந்த அதிபர் தேர்தலில் ஆணையர் பதவிகளில் காலியிடங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்த ராஜினாமாக்கள் காரணமாக இந்த ஆணையத்தால் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இயங்கவே முடியவில்லை. இதன் காரணமாக, இந்த ஆண்டின் மே தொடங்கி ஜூலை வரையிலான காலகட்டம் தவிர இந்த ஆணையத்தால் கடந்த ஆகஸ்ட் 2019-லிருந்து எந்த உத்தரவுகளையும் இட முடியவில்லை; ஏனெனில், இந்த உத்தரவுகளை இடுவதற்கு அடிப்படை எண்ணிக்கை தேவை, அதாவது நான்கு பேராவது தேவை. இதன் காரணமாக, போதுமான உறுப்பினர்கள் இல்லாமல் ஆணையத்தின் முன் பல நூறு விவகாரங்கள் நிலுவையில் இருக்கின்றன.
நான் தேர்தல் ஆணையராக இருந்தபோது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ‘கூட்டரசுத் தேர்தல் ஆணைய’த்துக்கு அலுவல்பூர்வமாகச் சென்றிருந்தேன். அந்தக் கட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் வெறும் இரண்டு பேர் மட்டும் இருந்தார்கள், இரண்டு கட்சிகளிலிருந்தும் தலா ஒருவர். அடியோட்டமாய் ஓடிக்கொண்டிருந்த பதற்றத்தை நான் உணர்ந்தேன். அப்போதும்கூட, முடிவெடுத்தலில் அவரவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு அடிப்படையில் பிளவு காணப்பட்டது.
அமெரிக்க வரலாற்றின் மிகவும் எதிரெதிர் துருவநிலைகள் காணப்பட்ட தற்போதைய தேர்தலின்போது அதிபர் ட்ரம்ப் ‘கூட்டரசுத் தேர்தல் ஆணைய’த்திடம் முறையிடப்போவதாக ஒரு தடவைகூடக் கூறவில்லை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் முறையிடப்போவதாகத்தான் கூறினார். இதற்கு நேர்மாறாக, நமது அரசமைப்பின் தந்தையர் தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில், அதாவது தேர்தல் தொடர்பான மனுக்கள் அளிக்கும் காலத்தில், நீதித் துறையின் தலையீட்டுக்கு எல்லை விதிக்க முடிவுசெய்தார்கள். தேர்தல் சமயத்தில் தேர்தல் தொடர்பான மனுக்களை அனுமதித்தால் தேர்தல் நடைமுறைகளுக்கு அது முட்டுக்கட்டை ஏற்படுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது முடிவேயில்லாமல் தள்ளிப்போகும் நிலை ஏற்படும்.
இந்தத் தாமதங்களும் கசப்புணர்வும்தான் அமெரிக்கத் தேர்தலில் நாம் கண்டுகொண்டிருப்பது; இந்தச் சிக்கலெல்லாம் இந்தியத் தேர்தல் நடைமுறையில் லாகவமாகத் தவிர்க்கப்பட்டன.
அஞ்சல் வாக்குகளின் தளத்தை விரிவுபடுத்தல்
எனினும், அஞ்சல் வாக்குகளைப் பொறுத்தவரை அமெரிக்க முறையிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள முடியும். 2016 அமெரிக்கத் தேர்தலில் பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வாக்குகள் அஞ்சல் வாக்குகள் மூலமும் முன்னதாக வாக்களிக்கும் விதத்திலும் பெறப்பட்டவை. இந்தியாவில் அஞ்சல் வாக்குகளை ஒருசில பிரிவுகளுக்கு மட்டும், பெரும்பாலும் அரசு அலுவலர்கள் (எடுத்துக்காட்டாக, தேர்தல் பணியில் இருப்பவர்கள்), காவல் துறையினர், ராணுவத்தினர் போன்றோருக்கு மட்டும் அனுமதிக்கிறோம். கரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் இந்தச் சிரமமான காலத்தில் இந்த வாக்களிப்பு முறையை நாம் விரிவுபடுத்தி மூத்த குடிமக்களையும் தங்கள் வாக்குகளை முன்கூட்டியே செலுத்துவதைச் சௌகரியமாக உணர்வோரையும் உள்ளடக்க வேண்டும். தவறுகள் ஏற்படாதவாறு வழிவகைகள் காண வேண்டும்.
பல்வேறு நாடுகளில் தேர்தல்களின்போது நான் அதிகாரபூர்வ நோக்கராக இருந்திருக்கிறேன். எங்கெல்லாம், இறுதி முடிவானது ஒரு பிரிவு வாக்காளர்களைக் கோபத்துக்குள்ளாக்கியதோ அங்கெல்லாம் வாரக் கணக்கில் மாதக் கணக்கில் போராட்டம் நடத்தியதைக் கண்டிருக்கிறேன்; தர்ணாவில் அமர்ந்துவிடுவார்கள், அடிக்கடி ஒட்டுமொத்தத் தெருக்களை அடைத்துவிடுவார்கள்.
வேறொரு இடத்தில் கோபத்துக்குள்ளானோர் தினமும் மாலையில் அரை மணி நேரம் பாத்திரங்களைத் தட்டுவதைக் கேட்டிருக்கிறேன். தற்போது, அமெரிக்கத் தேர்தலையொட்டி கொந்தளிப்பை உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது; ஜோ பைடன் பெரும்பான்மையைக் கடந்தாலும் எண்ணிக்கையை அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இதற்கு நேரெதிராக, 1951-52-ல் நடைபெற்ற நமது முதல் தேர்தலிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் நமது அரசியல் கட்சியினர், அவர்களில் வென்றவர்கள், தோற்றவர்கள் இரண்டு தரப்பிலும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகளை எப்போதும் ஒப்புக்கொண்டுவருகின்றனர்; இதன் காரணமாக ஆட்சியதிகாரமானது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகக் கைமாறுகிறது.
- நவீன் பி.சாவ்லா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியத் தேர்தல் ஆணையம், அன்னை தெரசாவின் வரலாற்றாசிரியர்.
© தி இந்து, தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT