Published : 27 Oct 2015 08:10 AM
Last Updated : 27 Oct 2015 08:10 AM
'கசப்பு சாக்லேட்' என்ற தலைப்பில் பிங்கி விரானி 2000-ம் வருடம் புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகத்தில் குழந்தைகள் பாலினக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் யாரும் சில நாட்களுக்கு நல்ல மனநிலையில் செயல்பட்டிருக்க முடியாது. அப்புத்தகம் ஏற்படுத்திய அதிர்வலைகளுக்குப் பின்னர்தான் நாடு முழுவதும் குழுந்தைகள் பாலினக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தைப் பற்றிய விவாதங்கள் பெருமளவில் நடத்தப்பட்டு, நாடாளுமன்றம் 2012-ம் வருடத்திய பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் சட்டத்தை உருவாக்கியது.
அச்சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றங்களைப் புரிபவர்களுக்குப் பலவாறான தண்டனைகள் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்துபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அக்குற்றங்களைத் தீவிரமாக்குபவர்களுக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. எவ்விதமான நடவடிக்கைகள் குழந்தைகள் பாலினக் குற்றங்களாகும் என்பதையும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. குழந்தைகள் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டால் அச்சம்ப வங்களை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருப்ப வர்களையும் தண்டிக்கச் சட்டம் வழிவகுத்துள்ளது.
மவுனத்தின் குற்றம்
குழந்தைகள் மீது பாலினக் கொடுமைகள் சுற்றியுள்ள மவுனங்களாலேயே நடத்தப்பட்டுவருகிறது என்று கூறும் பிங்கி இரானி, தான் படித்த ஆய்வுகள், அறிக் கைகள், விசாரணைகள் அடிப்படையில் எழுதிய அப்புத்தகத்தில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் தொடர்ந்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், அவற்றில் 50% அவர்களது இல்லத்திலேயே நடைபெறுகிறது என்றும், அதில் முக்கியமாக அக்குழந்தைகளின் நம்பிக்கை பெற்ற அவர்களது இல்லத்தில் உள்ள பெரியவர்களால்தான் அக்குற்றங்கள் நடக்கின்றன என்றும் கூறுகிறார்.
இக்கருத்தின் தாக்கத்தால், அம்பை ‘அந்தேரி மேம் பாலத்தில் ஒரு சந்திப்பு’ (காலச்சுவடு) என்ற புத்தகத்தில் அண்ணனின் பாலியல் தொல்லை தாங்காமல் ஓடிப்போன தங்கையைப் பற்றியும், பின்னர் தனது அத்துமீறல்களைத் தடுக்க முயன்ற மகள்களையே கொலை செய்த தகப்பனைப் பற்றியும் எழுதியிருப்பார்.
குழந்தைகள் மீது பாலினக் குற்றங்கள் புரிபவர்களது நிலைமை இவ்வாறிருக்க, சென்னை உயர் நீதிமன்றம் கேள்விக்குரிய தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது. போலி கையெழுத்து போட்டு மோசடி ஆவணங்களைத் தயாரிப்பவர்களது கரத்தை வெட்டப் பரிந்துரைத்த அண்மைத் தீர்ப்புபோல, குழந்தைகள் மீது பாலினக் கொடுமை இழைப்போரின் ஆண்மையை நீக்கக் கோருகின்றது இந்தத் தீர்ப்பு!
நீதிபதி கிருபாகரன், தனது தீர்ப்பில் பாலினக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் மீது காட்டியுள்ள அனுதாபத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேசமயம், குற்றம் இழைப்பவருக்கு எவ்விதத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை நாடாளு மன்ற, சட்டமன்ற சட்டங்களின் மூலம்தான் உருவாக்க முடியும் என்பதும், குற்றங்களுக்கான தண்டனையைத் தக்க விசாரணையின் மூலம் நீதி மன்றங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்பதுமே விதி. நீதிபதிகள் தங்க ளது சொந்த கருத்துகளை நீதி மன்றத் தீர்ப்புகளில் புகுத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது. அவ்வாறிருக்க, மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத்தான் குரலெழுப்புவதாகவும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்க ளின் சார்பாகப் போராடுவது இல்லையென்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், தான் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் அடிப்படையிலேயே அத் தகைய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் கூறியுள்ளார்.
முதல் தண்டனைச் சட்டம்
தீர்ப்பில் கண்டுள்ள கூறுகளை ஆராயும்முன் 1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டம் உருவான வரலாற்றைப் பார்ப்போம். சிப்பாய் கலவரத்துக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி பிரிட்டிஷ் - இந்தியாவின் பேரரசி என்று முடி சூட்டிக் கொண்டதுடன், அதை நிர்வகிக்கும் பொறுப்பை இங்கிலாந்து எடுத்துக்கொண்டது. காலனி இந்தியாவில் திருமணம், சொத்து, வாரிசுரிமைப் பற்றிய விதிமுறைகள் சில இருந்தபோதும் கிரிமினல் குற்றவிதிகள் நடை முறையில் இல்லை. குறுநில மன்னர்களும், நிலப் பிரபுக்களும் தங்களுக்குத் தோன்றிய வகையில் கிரிமினல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கினர். இசுலாமியர்கள் ஆண்ட பகுதிகளில் அவர்களது மதப்படி தண்டனைகள் வழங்கப்பட்டன. அப்படிப்பட்ட மாறுகால், மாறுகை வாங்கும் தண்டனைகளை ஆங்கிலேய அரசு பின்பற்றத் தயங்கியது. அத்தண்டனை முறைகள் மக்களது எதிர்ப்பை உருவாக்கும் என்று எண்ணிய காலனியரசு, புதிய தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்க விழைந்தது. மெக்காலே பிரபுவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவர் உதகமண்டலத்தில் தங்கி சில வாரங்களில் எழுதிக்கொடுத்த இந்திய தண்ட னைச் சட்டம் 1860 முதல் அமலுக்கு வந்தது.
பழிக்குப் பழியா?
இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 155 வருடங்களானாலும் நமது தண்டனை முறைகளின் ஆதாரத்தை நாம் மாற்றிக்கொள்ளவில்லை. சட்டங்களால் விதிக்கப்படும் தண்டனைகள் குற்றவாளியைச் சீர்திருத்து வதற்காக ஏற்படுத்தப்பட்டனவே அன்றி, அவர்களைப் பழிக்குப்பழி வாங்குவதற்காக உண்டாக்கப்பட்டவை அல்ல. இதையேதான் காந்தியடிகள் “கண்ணுக்குக் கண் என்பது உலகையே குருடாக்கிவிடும்” என்று குறிப் பிட்டிருந்தார். மாறுகால், மாறுகை வாங்கும் வழக்கங்கள் எல்லாம் மன்னர் ஆட்சிகளோடு மடிந்துவிட்டன. குற்றவாளிகளுக்கான சிறைத் தண்டனையின்போது அவர்கள் மனம் திருந்தி பொது நீரோட்டத்தோடு கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் முறையே நாகரிக உலகின் தண்டனைகளாக இருக்க முடியும். இதன் காரணமாகத்தான் உலகின் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனைக்கு மரண தண்டனை விதித்துவிட்டன.
குற்றங்களைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முறையாகச் செயல்படவில்லை என்றால், அவற்றைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை களை ஆலோசிக்க வேண்டும். அதை விடுத்து, குற்றவாளி களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை முறைகளை மாற்றுவதன் மூலம் குற்றங்களைக் குறைத்துவிடலாம் என்று எண்ணுவது எளிமையான சிந்தனைப் போக்காகும்.
1985-ல் தன்னுடைய மருமகள் புஷ்பாவை வரதட்சணை கொடுமை இழைத்து கொலை செய்த அவரது மாமியார் லச்மாதேவியின் வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.லோதா, அப்பெண்ணுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியதோடு, அவளைத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பொதுமைதானத்தில் தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டார். பொதுவெளியில் கொடுக்கப்படும் தண்டனை மற்ற குற்றவாளிகளுக்கும் பாடமாக இருக்கும் என்று அவர் தீர்ப்பில் எழுதினார். மேலும், பொதுமக்கள் திரண்டு நேரில் காண்பதற்காக ஊடகங்கள் அச்செய்தியைப் பிரசுரிக்கவும் உத்தர விட்டார். இச்செய்தியைப் படித்த சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் காரணமாக அன்றைய அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் நீதிபதிகள் விருப்பு, வெறுப்புக்கேற்பத் தண்டனைகள் வழங்க முடியாது என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படிதான் தண்டனை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டி ருந்தார். சட்டப்படி ஒருவரது மரண தண்டனை சிறைக் கொட்டடியில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலை யில்தான் நடத்தமுடியுமேயொழிய, குற்றவாளியானாலும் நாகரிகமற்ற முறையில் அவர்களது உயிரைப் பறிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தையே மனுவாக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுவெளியில் மரண தண்டனைக்குத் தடைவிதித்தது.
எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான்
ராஜஸ்தானிலிருந்து வந்து மதுரையில் கொள்ளை யடித்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில், 2,000 கி.மீ. தள்ளிவந்து மதுரையில் கொள்ளையடித்த அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பு எழுதினார். அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பைக் கடுமையான கண்டன விமர் சனங்களுக்கு உள்ளாக்கியது. கொள்ளைக் குற்றமும், அதற்கான தண்டனையும் ஒன்றுதான். மதுரையும் ராஜஸ்தானும் இந்தியாவிலேதான் இருக்கின்றன. ஊர்விட்டு வந்து வேறொரு ஊரில் கொள்ளையடிப்பதற்கு வித்தியாசமான தண்டனை இருக்க முடியாது என்று கூறி ஓமா(எ)ஓம்பிரகாஷ் என்ற கொள்ளையனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்தது. அந்தத் தீர்ப்பில் (2012) நீதிபதிகள் தங்களது சொந்த கருத்துகளைத் தீர்ப்பு வழங்கும்போது பதிவுசெய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில், பிரமாண வாக்குமூலத்தின் அடிப் படையில், தான் கடமையாற்றுவதாகக் கூறி, மத்திய அரசுக்குப் புதிய சட்டம் இயற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
2012-ம் வருடம் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம், பாலின நடுநிலைமை வகுக்கும் சட்டமாகும். குழந்தைகள் எந்தப் பாலினமானாலும் அவர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களை யார் இழைத்தாலும் (ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை) அவர்களுக்குத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டமாகும். எனவே, அச்சட்டத்தின் கீழ் குற்றமிழைப்பவர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே என்பதாகக்கொண்டு, அவர்களது ஆண்மைத் தன்மையைப் பறிக்கும் தண்டனையை விதிக்கச் சட்டம் இயற்றக் கோரும் தீர்ப்பு எப்படிச் சரியாகும்? இதுபோன்ற குற்றமிழைக்கும் பெண்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? மேலும், பாலியல் வல்லுறவு பற்றிய குற்றங்களும் இன்று விரிவாக்கப்பட்டுள்ளன. வன்புணர்ச்சி தவிர, கைவிரல்களால் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை அலசுவதையும் வன்புணர்ச்சி சட்டம் வரையறுத்துள்ளது. ஆண்குறியைப் பயன்படுத்து பவர்களுக்கு ஆண்மை இழப்பென்றால், விரல்களைப் பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை? அதன்பின், வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் பற்றி குழந்தைகளின் தாயே தனது கணவன் மீதோ (அ) மகன்களின் மீதோ புகார் அளிக்க முன்வருவார்களா?
மேலும், பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி புகட்டுவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. இக்குற்றங்களைத் தடுப்பதற்குப் புத்தாக்கப் பயிற்சி பெற வேண்டியவர்கள் சமுதாயத்தில் உள்ள பெரியவர்களே தவிர, குழந்தைகள் அல்ல. மனித உரிமைக்காகப் போராடுபவர்கள், அனைவரின் உரிமைகளுக்கும்தான் போராடுகிறார்கள். அவர்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் நன்மை அடைபவர்கள் அரசும், காவல்துறையும் மட்டுமாகவேயிருக்கும். எனவே, இயற்றப்பட்ட சட்டங் களை முறையாக நிறைவேற்றுவதற்கு முன் வருமாறு ஆலோசனை கூறுவதே முக்கியம். மாறாக, புதிய சட்டத் திருத்தங்களுக்கு உத்தரவிடுவது எவ்விதத்திலும் பயனளிக்காது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் தமது சொந்தக் கருத்துக்களைக் கலக்காமல்... இக்குற்றத்தைத் தடுக்கும் விதமாகச் செயல்படும் அமைப்புகளையும், ஆர்வலர்களையும் கலந்தாலோசித்துவிட்டுத் தீர்ப்பளிப் பது மிகவும் அவசியம்.
- கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT