Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரை விடுதலை செய்வதற்கான சாத்தியப்பாடு 2014-ல் தோன்றியது. அந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. 18.2.2014 அன்று வழங்கிய தீர்ப்பில், அரசமைப்புச் சட்டக் கூறு 161, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின் கீழ் மாநில அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்சொன்ன மூவரை விடுதலை செய்வதைத் தமிழக அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்னும் ஆலோசனையையும் வழங்கியது.
அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன், இந்தியக் குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநரும் முறையே ஒன்றிய, மாநில அரசாங்கங்களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும், அந்த அறிவுரை அவர்களைக் கட்டுப்படுத்தும் என்று மாதுராம் (1981), கேஹர் சிங்(1989) வழக்குகளில் உறுதிபட, தெளிவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா சொன்னது என்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433-ன் கீழ் இந்த மூவரோடு சேர்த்து, உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பெற்ற மூவர், மு.கருணாநிதி அரசாங்கத்தால் கருணை வழங்கப்பட்ட நளினி ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்யும் முடிவைத் தனது அமைச்சரவை எடுத்திருப்பதாக 19.02.2014 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த முடிவை ஒன்றிய அரசாங்கத்துக்கு அனுப்புவதாகவும், மூன்று நாட்களுக்குள் ஒன்றிய அரசாங்கம் பதில் அனுப்பாவிட்டால் தனது அரசாங்கம் அவர்களை விடுதலை செய்துவிடும் என்றும் கூறினார். அதாவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே அமைச்சரவை கூடி அந்த முடிவை எடுத்தது. எழுவரை விடுதலை செய்வதைத் தமிழக அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியதேயன்றி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறவில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433-ன் படி செயல்பட வேண்டுமானால் அதற்கான சில நிர்வாக நடைமுறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழுவதையும் படித்துப் பார்த்திருக்க வேண்டும். இரண்டாவதாக, நீண்ட கால சிறைவாசம் அனுபவித்துள்ள கைதிகளின் நன்னடத்தை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள ஆலோசனை வாரியத்திடம் கருத்துக் கேட்டறிய வேண்டும். அப்போது மன்மோகன் சிங்கின் தலைமையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்குச் சிக்கலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஜெயலலிதாவின் அறிவிப்பு அமைந்திருந்தது. மன்மோகன் சிங் அரசாங்கமும் தன் பங்குக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகி எழுவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி செய்துவிட்டது. ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழும், கொலைக் குற்றத்துக்கான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்த எழுவருக்கும் ‘தடா’ சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தது. அவர்களது மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதிருந்த பயங்கரவாத, சீர்குலைவுக் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கொலைக் குற்றத்துக்கான இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் மட்டுமே அவர்களுக்குத் தண்டனை விதித்தது.
இன்றைய நிலவரம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெரும் சதித் திட்டம் இருக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய காங்கிரஸ் தலைமையில் இருந்த ஒன்றிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல்முனைக் கண்காணிப்பு முகமையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும் கூறி வந்தது. பேரரறிவாளன் தொடுத்த வழக்கொன்று 4.11.2020 அன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னால் இருந்த சதி பற்றிய புலனாய்வு ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தாது என்றார். அதோடு 20 ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத புலனாய்வு, எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மேற்கொள்ள வேண்டிய முடிவுக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், எழுவரை விடுதலை செய்ய ஒப்புதல் தரும்படி தமிழ்நாடு அரசாங்கம் அனுப்பியுள்ள பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடத் தயங்குவதாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பல்நோக்குப் புலனாய்வு முகமையைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு, ஆளுநர் எழுவரை விடுதலை செய்வதைக் காலவரையறையின்றித் தள்ளிப்போட்டுக்கொண்டிருப்பது நியாயமல்ல. தமிழ்நாடு அரசாங்கம் அமைச்சரவையைக் கூட்டி உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தின் அடிப்படையில் இன்னொரு பரிந்துரையையும் வேண்டுகோளையும் ஆளுநருக்கு அனுப்பி, எழுவரின் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்தும் மனிதநேயச் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர்,
தொடர்புக்கு: sagumano@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT