Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
அன்று மாலையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ சதுக்கத்தில் பெரும் கூட்டம் திரண்டிருந்தது. தூரத்தில் ஒலித்த முரசுகள், கார்களின் ஒலிகள், இசை, மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சிலர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அமைதியாக நிற்பது என்று ஒரு கொண்டாட்ட மனநிலைதான் சந்தேகத்துக்கு இடமின்றிக் காணப்பட்டது. ஆண், பெண் காவலர்கள் சிலர் சதுக்கத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தனர் – எச்சரிக்கையுடன் அதே நேரத்தில் இறுக்கமின்றி, சிலர் கைகட்டி நின்றிருந்தனர். வெள்ளை மாளிகைப் பகுதிக்கோ, அந்தப் பகுதியிலிருந்தோ மக்களும் கார்களும் வருவதும் போவதுமாக இருந்தனர், நடைபாதையை மக்கள் நிரப்பினார்கள், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து விதிகளை மீறி நடந்துசெல்வோருக்கும் வாகன ஓட்டுநர்கள் வழிவிட்டார்கள்.
“பேயோட்டி முடித்ததைப் போல் உணர்கிறோம் நாங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டார் அரசறிவியலாளர் ஃபிரான்ஸிஸ் ஃபுகுயாமா. இந்தக் கொண்டாட்டங்களின் நடுநாயகமான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட 7.7 கோடி வாக்குகள் பெற்று சாதனை புரிந்திருக்கிறார். கொண்டாட்ட தினமானது அவருக்கும், அவரது துணை அதிபராகப் போட்டியிட்டவரும் அந்தப் பதவிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்படும் வெள்ளையரல்லாத பெண்ணுமான கமலா ஹாரிஸுக்கும் உரியது. இது இந்தக் கதையின் ஒரு பகுதிதான். ஏனெனில், அமெரிக்காவில் ஒரு இணை பிரபஞ்சம் இருக்கிறது; அதில் 7.2 கோடி மக்கள் தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுவரையிலான இரண்டாவது அதிகபட்ச வாக்கு எண்ணிக்கை இது.
கடுமையான பிளவு
ட்ரம்ப்பின் ஆதரவாளர்களும் பைடனின் ஆதரவாளர்களும் கடுமையாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். கரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் 2.4 லட்சம் பேரைக் கொன்றிருந்தாலும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் வெறும் 24% நபர்களே அந்த விஷயம் தங்கள் வாக்குக்கு ‘மிக முக்கியமானது’ என்று கடந்த மாதம் கூறியிருந்ததாக பியூ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பைடன் ஆதரவாளர்களில், பதிவுசெய்திருந்த வாக்காளர்களில் 82% பேர் இவ்விதம் கருத்து கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நாட்டின் தலைமையை ஜனவரி 20, 2021-ல் ஜோ பைடன் ஏற்பார். நாட்டை ஒருங்குசேர்த்து அதன் காயங்களை ஆற்றும் பணியில் ஜோ பைடனுக்குச் சிக்கலான இயங்குமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது, அவையெல்லாம் எதிரெதிர்த் திசைகளில் இழுக்கக் கூடியவை. ட்ரம்ப்பின் ஆதரவுத் தளம் 2016-ஐ விட தற்போது 80 லட்சம் வாக்குகள் அதிகரித்திருக்கிறது; சமூக ஊடகங்களிலும் அவரைப் பெருமளவிலானோர் பின்தொடர்கிறார்கள். ஆகவே, பொது வெளியில் அவர் புறந்தள்ள முடியாத ஒரு சக்தியாகவே இருப்பார்.
ட்ரம்ப்பின் ஆதரவுத் தளம்
ட்ரம்ப்பின் விளைவுகள் ஏற்கெனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. குறைந்த எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே பைடனின் வெற்றிக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக ட்ரம்ப் அள்ளிவீசும் பொய்களுக்கு ஆதரவு தருகிறார்கள், அல்லது அமைதியாக இருக்கிறார்கள், ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெறுவார் என்று அவர்கள் காத்திருக்கலாம்.
பைடன் ஆற்ற வேண்டிய பணியின் தீவிரம் என்பது ட்ரம்ப் தன் ஆதரவாளர்களிடம் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துவார் என்பதையும் கொஞ்சம் சார்ந்திருக்கிறது. 2008-ல் ஒபாமா வென்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காலம்சென்ற செனட்டர் ஜான் மெக்கைன் தனக்கு வாக்களித்தவர்கள் புதிய அதிபரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தோல்வியையே இன்னும் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் இதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களை அவர் எங்கே கேட்டுக்கொள்வது?
குடியரசுக் கட்சியினர் ட்ரம்ப்புக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கவே செய்வார்கள் [நம் நாட்டின் மாநிலங்கள் அவையுடன் ஒப்பிடத்தக்க ‘செனட்’டில் குடியரசுக் கட்சி கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கிறது]. செனட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் செனட் தேர்தலை வென்றாக வேண்டும். இந்தத் தேர்தல் ஜனவரி 5 அன்று நடைபெறவிருக்கிறது. இதில் வென்றால் அங்கு கிடைக்கும் இரண்டும் இடங்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத்தரும். வெற்றிபெறத் தவறினால் அமைச்சக நியமனங்கள், நீதித் துறை நியமனங்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், பொருளாதாரத்துக்கு நிதியூட்டம் செலுத்துதல், மருத்துவப் பராமரிப்பை அமல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் சட்டத்தைச் சீர்திருத்துதல் போன்றவற்றுக்கும் குடியரசுக் கட்சியினரின் செனட்டர்கள் ஆதரவை பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
36 ஆண்டுகளாக செனட்டராக இருப்பவர் பைடன். இவர் மிட்ச் மெக்கானல், ட்ரம்ப்பின் நண்பர் லின்ட்ஸே கிரஹாம் போன்றோருடன் தான் பல தசாப்தங்களாகக் கொண்டிருக்கும் நட்பைச் சார்ந்திருக்க வேண்டும். அமைச்சரவை அமைக்கத் தகுதியானவர் பைடன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார். தனக்கும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய அதிபருக்கும் இடையே பொதுவான புள்ளியைக் கண்டறிவேன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார்.
செனட்டில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெறும் என்றால் தன் விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள ‘செயல்படுத்தும் ஆணை’களை பைடன் பயன்படுத்த வேண்டிவரும். ட்ரம்ப் தனது ‘செயல்படுத்தும் ஆணை’களைக் கொண்டு நிறைவேற்றிய பல கொள்கைகளை பைடன் தான் பதவியேற்றதும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறார் (செனட் ஒத்துழைக்காதபோது அதைத் தவிர்ப்பதற்காக ஒபாமாவும் இந்த அதிகாரத்தைத்தான் பயன்படுத்தினார்). பாரிஸ் ஒப்பந்தத்திலும் உலக சுகாதார நிறுவனத்திலும் இணைந்துகொள்வதற்கான உத்தரவுகள், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வருவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொள்வது போன்றவை பரிசீலிக்கப்படுகின்றன.
மூர்க்கமான குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல பைடன் முன்னிருக்கும் சவால்: ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் மிதவாதிகள், முற்போக்காளர்கள் போன்றோரையும் பைடன் சமாளித்தாக வேண்டும். அவர்களின் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவர், பைடனிடம் பின்தங்கிவிட்டார்.
பைடன் மீதான எதிர்பார்ப்புகள்
பைடனுக்காக சாண்டர்ஸ் கடுமையாகப் பிரச்சாரம் செய்திருந்தார். அரிசோனாவில் குடியரசுக் கட்சியினர் மக்களிடையே இறங்கிச் செயலாற்றியதுதான் பைடனுக்கு வாக்குகளை அங்கே பெற்றுத்தந்தது. மக்கள்தொகை அமைப்பில் காணப்பட்ட மாற்றங்களும் நகர்ப்புறம், கிராமப்புறங்கள் போன்றவற்றுக்கிடையே வாக்களிக்கும் விதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளும் அரிசோனாவிலும் ஜார்ஜியாவிலும் பைடன் முன்னிலை பெற உதவின. பல்வேறு தரப்பினர் பைடனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை பைடன் வகுக்க வேண்டும்.
புதிய பசுமை ஒப்பந்தம், எல்லோருக்கும் மெடிகேர் போன்ற முற்போக்கான கொள்கைகள் ஊசல் மாவட்டங்களின் வேட்பாளர்களைப் பாதிக்கவில்லை என்கிறார் நாடாளுமன்றத்தின் முற்போக்கான உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா அக்கேஸியோ-கார்ட்டெஸ். கட்சிக்குள்ளேயே ‘செயல்பாட்டாளர்களுக்கு எதிரான உணர்வு’ இருக்கிறது என்று அவர் கூறுகிறார். நிர்வாகமானது கட்சியின் முற்போக்காளர்களையும் அரவணைத்துச் செல்லுமா, இல்லை பாரபட்சமாக நடத்துமா என்பதை பைடனின் அணியினர் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் அவர். செனட்டானது குடியரசுக் கட்சியின் வசம் செல்லுமென்றால் அது ஜனநாயகக் கட்சியில் உள்ள பிளவுகளைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.
பைடனை ஆதரித்த ஜான் காஸிக் போன்ற மையவாதக் குடியரசுக் கட்சியினர் மிதவாத, முற்போக்கு ஜனநாயகக் கட்சியினர் போன்றோரை உள்ளடக்கும் அமைச்சரவையை பைடன் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சகாக்களுடனும் பணியாற்றிய வரலாறு, ஒற்றுமை என்ற அவருடைய செய்தி, பரிவுணர்வு போன்றவையெல்லாம் ஜனவரி 20 அன்றுதான் மிகவும் முக்கியமானவையாக இருக்கும்.
- ஸ்ரீராம் லெட்சுமண்
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT