Published : 13 Oct 2015 11:07 AM
Last Updated : 13 Oct 2015 11:07 AM
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் எல்லா பூஜை புனஸ்காரங்களையும் பெண்களே செய்கின்றனர்.
பரம்பரை அடிப்படையில் மட்டுமே இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் நியமிக்கப்பட்டுவந்த வழக்கொழிய 1971-ல் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை சட்டத்தை திருத்தியது அன்றைய திமுக அரசு. பரம்பரை உரிமையாக கொண்டாடப்பட்ட நிலையை இது மாற்றியது. இதன் மூலம் திராவிடக் கொள்கையை நிலைநாட்டி, சமூகச் சீர்திருத்தத்தில் தன் முத்திரையைப் பதித்தது திமுக. ஆனால், ஓராண்டு நிறைவடையும் முன்பே இந்தச் சீர்திருத்த நடவடிக்கை முடக்கப்பட்டது.
அர்ச்சகர்கள் நியமனத்தில் புதுவழியைக் கையாள அரசு நினைத்தது. சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இப்போது 'அர்ச்சகர் நியமனம்' ஒரு மதச்சார்பற்ற செயல்பாடு என்று கூறிய உச்ச நீதிமன்றம், பரம்பரை வழியிலான அர்ச்சகர் நியமனத்தை ஏற்க மறுத்தது, அதே நேரத்தில் கோயில்களில் 'பழக்கவழக்கங்களாக' தொடரும் பூஜை முறைகள், அர்ச்சகர் முறைகள் தொடர வேண்டும் என்று கூறிவிட்டது. “உரிய தகுதியும் பயிற்சியும்” பெற்ற எந்த நபரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-ல் திமுக அரசு சட்டம் கொண்டுவந்தது. ஆனால் மீண்டும் எதிர் வழக்கு தொடுக்கப்பட்டது...
குறுக்கே சமயம் மட்டுமல்ல
திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுதெரிவிப்பவர்களுக்கும், அதை நம்பிக் காத்திருப்பவர்களுக்கும் கைகொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் உள்ளன. அவை, இந்து மத ஸ்தாபனங்கள் அனைத்தும் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினர் மற்றும் உட்சாதிப் பிரிவினருக்கும் பொதுவானது எனக் கூறும் சட்டப் பரிவு 25(2) (பி) மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் (17) ஆகும்.
ஆக, தீட்டு என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தவிர, பிறர் கடவுள் விக்ரகங்களைத் தொடக் கூடாது என்பது சட்டத்தை மீறுவதாகும். இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் தரும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமாயின், சமத்துவத்துக்குக் குறுக்கே நிற்கும் சமயச் சடங்குகள் அழித்தொழிக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ஒரு நகைமுரண் நிலவுகிறது. சமூக நீதி வேண்டும், கோயிலுக்குள் சாதி மற்றும் வர்க்கச் சமத்துவம் வேண்டும் எனக் குரல் எழுப்புவோர்கூடச் சமய நம்பிக்கைகளில் பாலினச் சமத்துவம் குறித்து வாய் திறப்பதில்லை.
உதாரணத்துக்கு, அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்ட அனைவரும் ஆண்களே. அவ்வளவு ஏன், 2006-ல் இந்த வழக்கில் ‘எவரேனும் அர்ச்சகராகலாம்’ என்னும் வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. எவரேனும் என்பது சாதி, சமயம், பாலினம் என அனைத்துக்கும் பொதுவான வார்த்தையே. அதனை அடுத்து திமுக அரசு பிராமணர் அல்லாத பூசாரிகளுக்கான பயிற்சி மையங்களை நிறுவியது. ஆனால், அப்போதும் ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.
பல முறை சட்டத் திருத்தங்கள் வந்தபோதும் இன்றும் தமிழகத்தில் நிகழும் பெரும்பாலான திருமண வைபவங்கள், முக்கிய பூஜைகள், கோயில் விசேஷ அர்ச்சனைகள் ஆகியவற்றுக்குப் பூசாரிகளாக நிற்பது பிராமண ஆண்களே.
கோயில் நுழைவுப் போராட்டத்தில் தொடங்கி, பரம்பரைப் பூசாரிகள் நியமனத்தைத் தடை செய்யும் போராட்டம் வரை தமிழகம் கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் கோயில்களில் பெண்களின் பங்கு என்பதும் ஆகமக் கோயில்களில் பெண் பூசாரிகள் நியமனம் என்பதும் இதுவரை பேசாப் பொருள்தான்.
புனித நூல்களில் பாகுபாடில்லை
வேத நூல்கள் உட்பட இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை. புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேதம் பயின்றனர். “மணம் முடித்தோ அல்லது மணம் முடிக்காமலோ பிரம்மவாதினி எனும் பெண் பூணூல் அணிந்த பிறகு (யக்ஞோபவீதம்) வேத ஞானம் பெறுவதற்காக வேதம் பயின்றார்.
வேதப் பள்ளி ஆசிரியரான கதா சாக்ஷாவுக்கு காதி எனும் பெண் மாணவி இருந்தார் என அஷ்டத்யாயி நூலில் பாணினி குறிப்பிட்டுள்ளார். ரிக் வேதப் பாடல்கள் கைவரப்பெற்ற பெண் மாணவிகளை அவர் பாவிரிச்சி என்றே அழைக்கிறார்” என்கிறார் சமூக வரலாற்றாசிரியர் நந்திதா கிருஷ்ணா. பெண்கள் குறித்துப் பாடப்பட்ட எத்தனையோ வேதப் பாடல்களும் இருக்கின்றன. வேத குருக்களாகப் பணியாற்றியதைத் தவிரவும் கோயில் விக்ரகங்களுக்கு முக்கிய அபிஷேகப் பூசைகளும் பெண்கள் செய்திருக்கின்றனர்.
பிராமண ஆகம முறைகளைப் பின்பற்றிய இந்துக் கோயில்களுக்கும் சிறுதெய்வ வழிபாடுகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு. சிறுதெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்த கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இல்லாவிட்டாலும், சமயச் சடங்குகளில் முக்கியப் பங்குவகித்தனர். ஆனால், வேதங்களைப் படிக்கவும் ஆன்மிக ஞானம் பெறவும் தகுதியுடையவர்கள் பிராமண ஆண்களே எனப் பிராமணர்களுக்குள் பிடிவாதம் இருந்ததுபோலவே மற்ற சமூகத்தினரும் பெண்களைச் சமயச் சடங்குகள் ஆற்ற மறுப்புத் தெரிவித்தனர் என்கிறார் எழுத்தாளர் வ.கீதா. அறிவைக் கைப்பற்றும் இந்தச் செயல்தான் ஆணாதிக்கத்தின் துவக்கப் புள்ளி.
குருதியின் குறியீடு
ஆனால் பெண்களே அத்தனை பூஜை புனஸ்காரங்களையும் செய்யும் ஒரு கோயில் இருக்கிறது. சென்னையிலிருந்து 50 மைல் தொலைவில் 1970-களில் கட்டி எழுப்பப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்தான் அது.
சாதி, இனம், வர்க்க வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது குருதியின் நிறம். அதன் குறியீடாக இங்கு வரும் பெண்கள் சிவப்பு நிறச் சேலை அணிவது வழக்கம். ‘ஒரு தாய், ஒரு குலம்’ என்பதே இக்கோயிலின் மந்திரச் சொல்.
மாதவிடாய் நாட்களில் கோயிலுக்குள் கால் பதிக்கவே கலாச்சாரத் தடை விதிக்கும் ஒரு மதத்தில், இந்தக் கோயில் அந்தத் தடைகளைத் தவிடுபொடியாக்குகிறது. புனிதம், தீட்டு போன்ற படிப்பினைகளுக்கு இங்கு இடமில்லை. மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வாகக் கருதுவதால் எந்நேரமும் இந்தக் கோயிலுக்குள் பெண்கள் பிரவேசிக்கலாம்.
அதேபோல கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு உரித்தான அம்மன் கோயில்களில் பெண் பூசாரிகள் காண்பது சகஜம். இருப்பினும், அங்கும் ஆண்கள் பெண்களின் இடத்தைப் பிடித்துக்கொள்வது உண்டு. பெண் பூசாரிகளுக்குப் பதிலாக நுழையும் ஆண்கள் சேலை அணிந்து பூஜை செய்யும் போக்கும் உள்ளது என்கிறார் முனைவர் கிருஷ்ணா.
பிரச்சினை எங்கே?
பெண் அர்ச்சகராக நினைத்தால் ஏன் இத்தனை எதிர்ப்பு? மாதவிடாய் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முதலாவதாக, யாகம் நடத்துபவருக்கும் (யஜமானா) புரோகிதருக்கும் இடையேஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர்கையில் கங்கணம் கட்ட வேண்டும். அந்த வகையில்ஒரு ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும். அடுத்து, யாகம் முடிந்ததும் நடத்துபவர் புரோகிதருக்குச் சம்பாவனை கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடாகக் கருதப்படும்.
இரண்டாவதாக, பண்டைய காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருந்தபோதும் பொருளாதார வளர்ச்சி அடையும் எண்ணம் துளிர்த்தவுடன் ஆண்கள்பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல் சமய, ஆன்மிகத் தளத்திலும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர்.மூன்றாவதாக, தொடர்ந்து பல ஆண்டுகள் பயின்றால்மட்டுமே அர்ச்சகராக முடியும். இளம் வயதிலேயே திருமணம் முடித்துக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்கு எழுதப்படாத விதி. பெண் அர்ச்சகர் உருவாக இதுவும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது எனலாம்.
ரிக் வேத காலத்தில் 30-க்கும் அதிகமான பெண் வேத பண்டிதர்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. ஆனால், இன்று ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் பெண்களுக்கு இடமில்லை.
எல்லா சமயத்திலும் தடை
அதேபோல, மசூதிகளில் இமாம் பொறுப்பேற்றுப்பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தும் உரிமைகோரி போராடும் இஸ்லாமியப் பெண்களும் உள்ளனர்.தொழுகைக்கும் பெண்களை உள்ளே அனுமதிக்காதமசூதிகளும் உள்ளன. தடைகளை மீறிஇஸ்லாமியப் புனித நூல்களைக் கற்றுத் தேர்ந்து‘அலிமா’ பட்டம் பெற்ற பெண் அறிஞர்களும் உண்டு.
ஆனால், ஆணாதிக்கச் சூழலில் பொதுத் தொழுகைக்கூட்டங்களை முன்னின்று நடத்தப் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமானஉண்மை. “நான், வக்ஃபு வாரியத்தின் தலைவராகநியமிக்கப்பட்டபோது, ஒரு இஸ்லாமிய நிறுவனத்தைஎப்படி ஒரு பெண் நிர்வாகம் செய்யலாம் எனும் எதிர்ப்புக்குரல் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது” என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பதர் சையத். இதேபோல கத்தோலிக்க தேவாலயமும் பெண் பாதிரியார் பதவிக்கு அங்கீகாரம் தர நெடுங்காலமாக மறுத்துவந்தது.
இந்து அர்ச்சகர் நியமனத்தில் 2006-ன் தீர்ப்பை உச்ச நீதி மன்றம் நிறைவேற்றினால் சமத்துவம் சாத்தியப்படும். அதிலும் யாருடைய அங்கீகாரத்துக்காகவும் காத்திருக்காமல் பெண் அர்ச்சகர்களை நியமிக்கும் உத்தரவைப் பிறப்பித்தால் உண்மையான பாலினச் சமத்துவம் கோயிலுக்குள்ளும் நிலைநாட்டப்படும்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில் சுருக்கமாக: ம. சுசித்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT