Last Updated : 12 Nov, 2020 03:14 AM

16  

Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

மோடி வென்றளித்த தேர்தல்

பிஹார் தேர்தல் முடிவை ஒட்டுமொத்தமாக வர்ணிப்பது என்றால், ‘கலவையான முடிவு’ என்று சொல்லலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பார்வையில் வர்ணிப்பது என்றால், ‘நிதீஷ் அரசு கடுமையான போராட்டத்திலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்லலாம். உண்மையில் இது, ‘நிதீஷுக்கு மோடி வென்றளித்திருக்கும் தேர்தல்’ என்றே சொல்ல வேண்டும். பெருத்த சவால்களுக்கு இடையே முதல்வர் நிதீஷ் குமார் எதிர்கொண்ட தேர்தல் இது. எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் செல்வாக்கு மக்களிடம் சரிந்திருந்தது, ‘கடைசித் தேர்தல்’ என்று உருக்கமாக அவர் மக்களிடம் மன்றாட வேண்டியிருந்தது, தேர்தலின் போக்குகள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஆதரவாகக் களம் முழுமையாக மாறிக்கொண்டிருப்பதை உறுதியாகக் கூறின. மீண்டும் நிதீஷ் ஆட்சிப் பொறுப்பில் அமரும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது என்றால் பிரதான காரணம், பிரதமர் மோடியின் வியூகமும் பிரச்சாரமும்!

விட்டுக்கொடு, ஆள்!

பாஜக ஆள வேண்டும் அல்லது ஆளும் கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்ற வியூகத்தைக் கொண்டிருக்கும் அக்கட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிற்பாடு, கூட்டணிக் கட்சிகளுடன் உறவை எப்படிப் பேணுகிறது என்பது தனிக் கதை. ஆனால், தேர்தல் பேரங்களில் எவ்வளவு இறங்கிப்போவதற்கும் பாஜக தயாராக இருக்கிறது என்பதற்கு பிஹார் ஓர் உதாரணம் மட்டும் அல்ல, அதுவே பாஜகவின் வெற்றிக்கான முக்கியமான வியூகமும்.

பாஜகவின் அணுக்கக் கூட்டாளிகளில் ஒருவராக இருந்து, பின்னர் கட்சியின் மையம் நோக்கி மோடி கொண்டுவரப்பட்ட பிறகு முரண்பாடு கொண்டு பாஜகவிடமிருந்து விலகி, பின்னர் லாலுவோடு கைகோத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை வென்று, பின்னர் லாலுவுடனான முரண்பாடுகளால் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் வந்த நிதீஷை அணுகுவது பாஜகவுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. கட்சி நாளுக்கு நாள் சிறுத்துவந்தாலும், கூட்டணியில் தனக்கே பெரும் பங்கு கேட்பவர் நிதீஷ்.

2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றே 22 தொகுதிகளை வென்றது பாஜக, நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், 53 தொகுதிகளை வென்றது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து எதிரே கூட்டணியில் நின்ற நிதீஷ் 101 இடங்களில் நின்று 71 தொகுதிகளை வென்றார். லாலுவுடன் உறவை முறித்துக்கொண்டு பாஜக கூட்டணிக்குத் திரும்பியபோது, கூட்டணியில் சட்டமன்றத்தில் பாஜகவுக்கே பலம் அதிகம் என்றாலும், முதல்வர் பதவியில் நிதீஷ் தொடர்ந்து நீடிக்க ஒப்புக்கொண்டது பாஜக.

2019 மக்களவைத் தேர்தல் வந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 17, ஐஜதவுக்கு 17, கூட்டணிக் கட்சிகளுக்கு 6 என்று உடன்பாடு கண்டது பாஜக. 17 தொகுதிகளில் பாஜகவும் ஐஜத 16 தொகுதிகளிலும் வென்றன. அடுத்து, 2020 சட்டமன்றத் தேர்தல். இப்போதும் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐஜதவுக்கு 115 தொகுதிகளைக் கேட்டார் நிதீஷ். பாஜக 110 தொகுதிகளோடு தன்னைச் சுருக்கிக்கொண்டது. ஆனால், 74 இடங்களை அது வென்றது. ஐஜத 43 தொகுதிகளோடு சுருண்டது. இப்போதும் முதல்வர் நிதீஷ் என்றே அறிவித்திருக்கிறது பாஜக.

எவ்வளவு நாட்கள் இது நீடிக்கும், நிதீஷின் கை முன்புபோல ஓங்கியிருக்குமா என்பதெல்லாம் பிற்பாடு பார்க்க வேண்டியவை. ஆனால், தன் பலம் – பலவீனத்தை உணர்ந்து இதுவரை இறங்கி நடந்திருக்கிறது பாஜக. காரணம், மூன்று பெரிய கட்சிகளைக் கொண்ட பிஹார் களத்தில், நிதீஷ் போன்ற உள்ளூர் செல்வாக்குள்ள முகம் பாஜகவுக்குக் கிடையாது. மேலும், பாஜக – ஐஜத கூட்டணி என்பது சமூகரீதியாகவும் மிக வலுவான கூட்டணி. மேல் அடுக்குச் சாதியினரின் பெரும்பான்மைத் தேர்வு பாஜக, கீழ் அடுக்குச் சாதியினரின் பெரும்பான்மைத் தேர்வு ஐஜத. ஆனால், நிதீஷை பாஜக பகைத்துக்கொண்டால் லாலுவின் ராட்சதக் கை ஓங்கும். மாநில அரசியலில் தன் கருத்தியலுக்கு எதிரான மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பாஜக மிக உறுதியாக இருக்கிறது.

ஆட்சியிலோ கூட்டணியிலோ இருப்பது கட்சியைக் களத்தில் வளர்த்தெடுக்கப் பெரிய பலம். மேலதிகம் கூட்டணிக் கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்களையும், ஒத்த கருத்தாளர்களையும் உள்ளிழுக்க, கட்சியை மேலும் வளர்த்தெடுக்க வசதியான பலம். ஆட்சியை நிதீஷுக்கு விட்டுக்கொடுத்தாலும், கட்சியை இப்படித்தான் வளர்த்தெடுத்தது பாஜக. லாலுவுக்கு எதிரான சக்திகளின் கூட்டு மையமாக முன்பு ஐஜத இருந்த நிலை மாறி இன்று அந்த இடத்துக்கு பாஜக நகர்ந்திருக்கிறது.

நம்பகம் இழந்த நிதீஷ்

அரசியல் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றுவது பதவிக்காக நிதீஷ் எதையும் செய்வார் என்ற பேச்சை பிஹாரிகள் மத்தியில் உருவாக்கியது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக அவர் ஆட்சியில் தொடர்ந்ததும் இயல்பான அதிருப்தியை உருவாக்கியிருந்தது. மேலும், கரோனா தாக்குதலும் ஊரடங்கின் பின்விளைவுகளும் நிதீஷ் ஆட்சியின் அவலட்சணங்களை அப்பட்டமாக்கின. ஊரடங்கைத் தொடர்ந்த ஏப்ரல் மாதத்தில் பிஹாரில் வேலைவாய்ப்பின்மை 46.6% அதிகரித்ததும், புலம்பெயர் தொழிலாளர்களாக இந்தியா முழுவதும் வேலைபார்த்துவரும் பிஹாரிகளில் 30லட்சம் பேர் பிஹாருக்குத் திரும்பியதும் அங்கிருந்த நிலைமையை உணர்த்தும். இதோடு பெருவெள்ளமும் அதன் கடும் பாதிப்புகளும் சேர்ந்துகொண்டன.

தேர்தலுக்கு நீண்ட காலம் முன்பே கணக்கிட்டுக் காய்களை நகர்த்தும் பாஜகவுக்கு முன் இந்தச் சங்கடங்கள் ஒவ்வொன்றும் மலைபோலக் குவிந்தன. மாநிலத்தில் தனக்கென்று ஒரு செல்வாக்கான முகம் இல்லை என்பதாலேயே அது நிதீஷை நாடியிருந்தது. ஆனால், திரண்டுவந்த அதிருப்தி நிதீஷின் கூட்டங்களிலேயே அதிருப்தியாக வெளிப்பட்டது. நிதீஷ் கூட்டங்களில் மக்கள் திரள் போதவில்லை, சில இடங்களில் எதிர்ப்புக் குரல்களும் வெளிப்படையாகக் கேட்டன. கூட்டணியின் முகமாக சுவரொட்டிகளில் நிதீஷ் இருந்த இடத்தில் மோடியைக் கொண்டுவந்தது பாஜக. மோடியின் பிரச்சாரங்கள் எதிர்ப்பலையை மட்டுப்படுத்தின.

கவனிக்க வேண்டிய விஷயம், பிஹாரில் மட்டும் அல்ல; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் என்று 11 மாநிலங்களின் 58 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசம் இருந்த தொகுதியைத் தட்டிப்பறித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்திருந்தாலும், அதற்காக மக்கள் மோடியையோ பாஜகவையோ குற்றஞ்சாட்டவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் பாஜகவினர். எதிர்க்கட்சிகளால் பாஜகவின் நிர்வாகத் தோல்விகளை மக்களிடம் வலுவாகக் கொண்டுசேர்க்க முடியவில்லை என்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், மக்கள் ஆட்சியையும் மோடியையும் தனியே பிரித்துப்பார்க்கிறார்கள் என்பது மட்டும் புலப்படுகிறது.

முற்றிலுமாகப் பறிகொடுக்கவிருந்த ஒரு தேர்தலைத் தாங்கிப்பிடித்து நிதீஷின் கைகளில் அளித்திருக்கிறார் மோடி. அது எவ்வளவு காலம் நிதீஷின் கைகளிலேயே இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்திருந்தாலும், அதற்காக மக்கள் மோடியையோ பாஜகவையோ குற்றஞ்சாட்டவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் பாஜகவினர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x