Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

இந்தியப் பொருளாதாரம் ஊசலாடுகிறதா?

வைகைச்செல்வன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கலாம், ஆனால், நாம் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுவிடவில்லை என்று சமீபத்தில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது குறிப்பிட்டார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் காரணமாக நமது பொருளாதார நிலை ஊசலாட்டத்துக்கும் தள்ளாட்டத்துக்கும் உள்ளாகியிருக்கும் சூழலில், நிதிக் கொள்கைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. கூடவே, கடுமையான நிதிப் பற்றாக்குறையின் காரணமாகப் பல்வேறு நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சூழலுக்குத் தகுந்த நிதிக் கொள்கைகளை உருவாக்குவதோடு பழையவற்றைத் திருத்திக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலக நாடுகள் அனைத்துக்குமே நிதிப் பற்றாக்குறை பெரும் சவால்தான். எதிர்பார்த்ததைவிட சந்தையின் வளர்ச்சி குறைந்திருக்கிறது. தனியார் நுகர்வும் முதலீடுகளும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏற்றுமதியும் இறக்குமதியும் சுணங்கிக்கிடக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 60% பங்கு வகித்துவந்த உள்நாட்டு நுகர்வு நிலைகுலைந்து கிடக்கிறது. ரிசர்வ் வங்கி 5 முறை வட்டி விகிதங்களை மாற்றியமைத்தும்கூட அந்நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாய் எதையும் உணர முடியவில்லை.

வட்டிக் குறைப்பும் வாங்கும் சக்தியும்

இந்தியாவுக்கான உத்தேச வளர்ச்சி விகித அளவு கணிசமாகக் குறையும் என்று, கடந்த ஆண்டே பன்னாட்டு நிதியம் கணித்திருந்தது. மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்து, அவர்களின் வாங்கும் திறனை அதிகமாக்கும்போது பணவீக்க அழுத்தங்களால் பாதிப்பு ஏற்படாது என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கினாலும், அதன் காரணமாக பெரும் மாற்றம் நிகழுமா என்பது சந்தேகமே. வட்டி விகிதங்களைக் குறைத்தாலும், அதன் படிநிலை மாற்றம் சிக்கலானதாகவே இருக்கும். அதைத் தவிர்த்து, அடுத்தடுத்த வட்டிக் குறைப்புகளின் பயன்கள், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சென்று சேர வேண்டும். அது நடந்திருக்கிறதா என்பது கேள்விக்குறி.

கடன்கள் மீதான வட்டிக் குறைப்பு, கார்ப்பரேட் வரிகள் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை; அவற்றுக்குரிய வழிவகைகளையும் ஆராய வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திருந்த போதிலும்கூட, முதலீட்டு அளவு எதிர்பார்த்த அளவு வரவில்லை. 88% ஆக இருந்த முதலீடு, 10% அளவுக்குக் குறைந்துவிட்டது, மிகக் குறைந்த அளவிலேயே கடன் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பதே. வெளிநாட்டு முதலீடுகளை விட, நம்முடைய உள்நாட்டுச் சந்தையின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

மாநிலங்களின் நிதிச் சவால்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்களின் நேரடி வரி வருவாய் கடுமையாகக் குறைந்துவிட்டது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுதான் தற்போது மாநிலங்கள் தங்களது திட்டங்களைத் தீட்டுவதற்கும், வரவு-செலவுகளைத் திறம்பட நிர்வகிப்பதற்குமான ஒரே பெரிய வாய்ப்பு. ஜிஎஸ்டி மூலம் நேரடியாகக் கிடைக்கும் வரி வருவாயில் 41%-ஐ மாநிலங்களுடன் ஒன்றிய அரசு பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், கூடுதல் வரிகளின் மூலம் கிடைக்கும் வரி வருவாயை அது பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை. கடந்த இரண்டாண்டுகளாக ஒன்றிய அரசு தன்னுடைய நிதியாதாரத்தை அதிகரிப்பதற்கு இந்தக் கூடுதல் வரி வழியையே நம்பியிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஜிஎஸ்டி அல்லாத ஒன்றிய அரசின் வரி வருவாய் 14% என்றால், இந்த நிதியாண்டில் அது 18% ஆக அதிகரித்திருக்கிறது. இது 4%தானே என்று எளிதில் கடந்துவிட முடியாது. ஏனென்றால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு விதித்திருக்கும் கூடுதல் வரியால், மாநிலங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இலக்கின் அளவு ரூ.1.2 லட்சம் கோடி. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தும்போது, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நியாயமான முறையில் வருவாய்ப் பங்கீடு தரப்படும் என்கிற வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. ஆகவேதான், மாநிலங்கள் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல், மிகுந்த சிரமத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

கூட்டாட்சிக்கு எதிரானது

இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நிலைப்பாடு ஆகும். மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.70,000 கோடியை வழங்க உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பு 2020-2021 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி மீது விதிக்கப்பட்டுவரும் கூடுதல் வரியின் வாயிலாகக் கிடைத்திருக்கிற தொகை ரூ.20,000 கோடி. ஆகவே, இதை வைத்து மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2018-2019 நிதியாண்டில் பல்வேறு கூடுதல் வரிகளின் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.2.75 லட்சம் கோடி வரி வசூல் வந்தது. அதில் ரூ.1.15 லட்சம் கோடி இந்தியத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்கான அனுமதியையும் நாடாளுமன்றத்தில் பெறவில்லை. இவ்வாறு வரி வசூலிக்கப்படுவதன் நோக்கத்தை மீறி வேறு காரணத்துக்காகப் பயன்படுத்தப்படுவது புரியாத புதிராக இருக்கிறது. கூடுதல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.8,871 கோடியும், சாலைகள் போக்குவரத்துக் கட்டமைப்புக்கான கூடுதல் வரியாகக் கிடைத்த ரூ.10,157 கோடியும் உரிய முறையில் அத்துறைக்கு வழங்கப்படவில்லை. இவற்றோடு ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி ரூ.40,806 கோடியும் அக்கணக்கில் சேர்க்கப்படவில்லை.

வருவாய்ப் பற்றாக்குறை

தற்போது இந்தியாவின் வருவாய்ப் பற்றாக்குறை 88.52 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கிய 2020-2021 நிதியாண்டில் இந்தியாவின் வருவாய்ப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% என்று பொருளாதார வல்லுநர்கள் ஏற்கெனவே மதிப்பிட்டிருந்தனர். இதை நிதியமைச்சகம் 3.5% அளவுக்குத்தான் கணித்திருந்தது. கருத்துக்கணிப்பில் இந்தியாவின் பொருளாதாரம் 5.1% சரிவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. மேலும், இந்தச் சரிவு 9.1% வரை உயரக்கூடும் என்றும் அவதானித்திருந்தனர்.

இதற்கிடையே பருவமழை தாமதமானதாலும், பல்வேறு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டதாலும், வழக்கமான அளவுக்கு உணவுப் பொருட்கள் சந்தைக்கு வராததாலும், காய்கறிகளின் விலையேற்றம் 5.54%ஆக உயர்ந்துவிட்டது. வெங்காயத்தின் விலை 400%-க்கு மேல் உயர்ந்துள்ளது.

சில்லறை வணிகப் பொருட்களின் மீதான பணவீக்கம் 4.62% ஆக இருந்த நிலையும் மாறிவிட்டது. ஆகவேதான், இந்தப் பணவீக்கத்தைக் கூர்ந்து கவனிக்கக் கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால், அது நிதிக் கொள்கையிலும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்னொரு பக்கம், அரசாங்கத்தின் செலவும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இலவச தானியங்களை வழங்குவதற்கும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் செலவு அதிகரித்தபடியே உள்ளது. அதை ஈடுகட்ட கச்சா எண்ணெய் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உலகம் முழுவதுமே முடக்க நிலைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் பெருமளவு குறைந்துவிட்டது. இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) தனது காலாண்டு வருவாயில் 47% சரிவைக் கண்டுள்ளது.

அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் வருவாய்ப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும் என்றும் ஒன்றிய அரசு நம்புகிறது. கடைசியில், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை எவ்வளவு சீர்திருத்தம் செய்தாலும், அது பின்னுக்கு இழுக்கிற நகர்வாகவே முடிந்துவிடுகிறது. அடுத்த 2021-2022 நிதியாண்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய ஏற்றம் இருக்கும் என்று சர்வதேச மனித மேலாண்மை நிறுவனமான ஏ.டி.பி கணித்திருக்கிறது. அந்தக் கணிப்பு நம்பிக்கையளிக்கிறது என்றாலும் அதற்கான காத்திருப்பு கடும் சவாலாகத்தான் இருக்கப்போகிறது.

- வைகைச்செல்வன்,

தமிழக முன்னாள் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x