Last Updated : 27 Oct, 2015 08:04 AM

 

Published : 27 Oct 2015 08:04 AM
Last Updated : 27 Oct 2015 08:04 AM

எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே?

நல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா?

ஏடு தேடுதல் என்கிற சொற்றொடர் உடனடியாக நினைவூட்டுகிற ஆளுமை உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை அலைந்து திரிந்து, தேடி எடுத்து, பரிசோதித்து, அரும்பதவுரை எழுதி, அச்சிட்டு வழங்கியவர் உ.வே. சாமிநாதையர் (1855 - 1942). இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பிரதி எடுப்பதும், நூல்களை அச்சிடுவதும், சேகரித்து வைப்பதும் எளிதாகிவிட்டன. எனில், தமிழ்ப் படைப்புகளைத் தேடித்தான் கண்டடைய வேண்டும் என்கிற நிலைமை மாறியிருக்கிறதா?

அன்று பழந்தமிழ் இலக்கியங்கள் புலவர் இல்லங் களிலும் மடாலயங்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றின் மேன்மையை அறிந்திருந்தவர் குறைவு. உ.வே.சா ஏடுகள் இருக்கும் இடங்களை விசாரித்தறிந்து ஊர் ஊராகப் போனார். பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது.

எலிகளின் ஆய்வு

ஒரு புலவரின் மகன், ஆங்கிலம் படித்து குமாஸ்தாவாக உத்தியோகம் பார்ப்பவர், பழைய ஏடுகள் வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டிருந்ததால் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டேன் என்கிறார். ஒரு கோயிலில் ‘வைக்கோல் கூளம் மாதிரி இருந்த பழைய ஏடுகளை அக்கினி வளர்த்து ஆகுதி செய்துவிட்டோம்’ என்கிறார்கள். இன்னொரு வீட்டில் உள்ளவர் ‘‘இந்தக் குப்பையைச் சுமந்துகொண்டிருப்பதில் என்ன பயன்? ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்'’ என்கிறார். சில இடங்களில் உ.வே.சாவிற்குக் கிடைத்த சுவடிகளை அவருக்கு முன்பாகவே எலிகளும் பூச்சிகளும் ஆய்வுசெய்திருந்தன.

இவற்றாலெல்லாம் ஊக்கம் இழக்காமல் உ.வே.சா. தேடலைத் தொடர்ந்தார். அவருக்கு ஏடுகள் கிடைக்கவே செய்தன. 23 ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி 1887-ல் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தார். சிலப்பதிகாரச் சுவடிகளைத் தேடி 50 ஊர்களுக்கு மேல் பயணம் செய் தார். மணிமேகலைக்குத் தனியே ஆராய்ச்சிக் குறிப்பு எழுதினார்; அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் இடம் பெறு கின்றன. சங்க இலக்கியங்களில் புறநானூறு உட்பட பத்துப்பாட்டு முழுவதையும், எட்டுத்தொகையில் ஐந்து நூல்களையும் பதிப்பித்தார். இலக்கியம், இலக்கணம், தலபுராணம் எல்லாமாக உ.வே.சா. பதிப்பித்தவை 79 நூல்கள் என்று பட்டியலிடுகிறார் ஆய்வாளர் ப. சரவணன்.

உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களைக் காகித வாகனமேற்றினார். உ.வே.சா. காலத்திலேயே வாழ்ந்து மறைந்த பாரதியார் (1882-1921) காகிதங்களில்தான் எழுதினார். அவர் மறைந்தபோது அவரது படைப்புகள் பலவும் நூலாக்கம் பெறவில்லை. அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மேதமை உணரப்பட்டது.

தேடல் முடிந்ததா?

பாரதியின் கவிதைகளை அவரது தம்பி விஸ்வநாத ஐயர் பதிப்பிக்கத் தொடங்கினார். பாரதியின் கையெழுத்துப் படிகள், பத்திரிகை எழுத்துக் கள், படங்கள், கடிதங்கள் என்று 50 ஆண்டு காலம் தேடித் தேடி பதிப்பித்தார் ‘பாரதி அறிஞர்' ரா.அ.பத்ம நாபன். பாரதியின் படைப்புகளைக் கண்டெடுத்து காலவரிசைப்படுத்தி 12 தொகுதிகளாக வெளியிட்டார் சீனி. விசுவநாதன். பெ. தூரன், இளசை மணியன், ஏ.கே. செட்டியார். பெ.சு. மணி, பா. இறையரசன் முதலானோரும் பாரதி தேடலில் ஈடுபட்டவர்கள். தேடல் முடிந்ததா?

பாரதி புதுச்சேரியிலிருந்து வெளியிட்ட ‘விஜயா’ நாளிதழ் சிலகாலம் முன்புவரை கிடைக்கவில்லை. வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி ‘விஜயா’ இதழ்கள் சிலவற்றைப் பாரீசில் கண்டுபிடித்து 2004-ல் பதிப்பித்தார். தொடர்ந்து அவரே 2008-ல் பாரதி இந்து நாளிதழில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்' பகுதிக்கு எழுதியவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்துப் பதிப்பித்திருக்கிறார். பாரதியின் இறுதிக் காலப் படைப்புகளுள் ஒன்றான ‘கோவில் யானை' என்கிற நாடகத்தைச் சமீபத்தில் கண்டுபிடித்தவர் பேராசிரியர் ய. மணிகண்டன். பாரதி தேடல் தொடர்கிறது. சரி, பாரதியின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் நிலை என்ன?

புதுமைப்பித்தன் (1906-1948), கு. அழகிரிசாமி (1903 -1976), கு.ப. ராஜகோபாலன் (1902 -1944), தி. ஜானகிராமன் (1921 -1982) முதலான தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் பலரின் கதைகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு சமீப காலங்களில் வெளியாகின்றன. இந்த எழுத்தாளர்கள் மறைந்து 30-லிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியான தொகுப்புகள் வருகின்றன. வரலாற்றில் இஃதொன்றும் நீண்ட காலமில்லைதான். ஆனால், இதன் பதிப் பாசிரியர்கள் இந்தக் கதைகள் வெளியான நூற்பதிப்புகள், இதழ்கள், அச்சில் வெளிவராத படைப்புகள் போன்றவற்றை அரும்பாடுபட்டே கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் மறைந்த பிற்பாடுதான் என்றில்லை, வாழ்கிற காலத்திலேயே தங்கள் எழுத்தை தாங்களே தேடுகிற சூழல்தான் இங்கே இருக்கிறது.

ஜெயகாந்தன் 1960-ல் ஒரு பத்திரிகை கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு குறுநாவல் எழுதினார். ‘கை விலங்கு'. அது பத்திரிகையில் வெட்டிக் குறைக்கப்பட்டு பாதியளவே வெளியானது. இதில் ஜெயகாந்தனுக்கு வருத்தம்தான். என்றாலும், பிற்பாடு அவர் எழுதியது முழுமையாக நூல் வடிவம் பெற்றபோது, அவர் அந்தப் பத்திரிகைக்கு நன்றி செலுத்துகிறார். ஏன்? ‘இப்போது நான் எழுதியது முழுக்கவும் புத்தகமாக வெளிவருவதே, அவர்கள் பழுதுபடாமல் பாதுகாத்துக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததனால்தானே' என்கிறார். அதாவது, பத்திரிகைக்குக் கொடுத்தபோது அவர் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவில்லை!

இன்னும் அச்சில் வெளியான தனது நூல்களையே கைவசம் வைத்துக்கொள்ளாத எழுத்தாளர்களும் தமிழில் உண்டு. வண்ணநிலவன் எழுதிய ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்று. 1981-ல் வெளியானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாவல் இரண்டாம் பதிப்பைக் கண்டபோது அதன் முன்னுரையில் வண்ண நிலவன், சைதை முரளி என்கிற நண்பருக்கு நன்றி செலுத்துகிறார். ஏன்? அவர்தான் முதல் பதிப்பின் பிரதியை ‘மிகுந்த சிரமத்துக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்தவர்’.

அறிவுலகின் கடமை

இந்தச் சம்பவங்கள் சுட்டுவதென்ன? தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் காலந்தோறும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை தொலைந்து போய்க்கொண்டும் இருக்கின்றன. ஆய்வாளர்கள் சோர்வின்றி அவற்றைத் தேடிய வண்ணம் இருக்கிறார்கள். ஏன்? நல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா?

உ.வே.சா. சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தபோது ‘ஏக்கழுத்தம்' (இறுமாப்பு) என்ற ஒரு சொல் வருகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பாடபேதம் பார்த்து அரும்பதங்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தவர் உ.வே.சா. அந்தச் சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை; தமிழ் நெடும் பரப்பில் தேடுகிறார். சிறுபஞ்சமூலத்திலும் நீதிநெறி விளக்கத்திலும் கண்டடைகிறார். ‘ஒரு பதத்தின் உண்மையான உருவத்தைக் கண்டுபிடித்த' அவரது மனநிலை எப்படி இருந்தது? ‘புதிய தேசத்தைக் கண்டு பிடித்தால்கூட இவ்வளவு சந்தோஷமிராது’ என்கிறார் உ.வே.சா. இதனால்தான் இங்கே ஆய்வாளர்கள் தமிழ் அறிவுலகத்தின் பாராமுகத்தைப் பொருட்படுத்தாமல் தங்களது தேடலைத் தொடர்கிறார்கள். ஏட்டுச் சுவடிக ளிலும், காகிதங்களிலும், கணினிகளிலும் புதிய புதிய தேசங்களைக் கண்டடைகிறார்கள். அவற்றைக்கொண்டு தமிழ் இலக்கிய உலகத்தை நிர்மாணிக்கிறார்கள்.

மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்;

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x