Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
ஜனநாயகம் என்பது குடிமைத்துவப் பிரக்ஞையை முன்னெடுப்பதற்கானது. ஆகவே, அது சாதி உட்பட அறிவுக்கு ஒவ்வாத அனைத்து அடையாளங்களையும் ஒழிக்க வேண்டும். எனினும், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் தேர்தல் ஜனநாயகம் என்பது சாதி மூலமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தல் மூலமாகவுமே இயங்குகிறது. ‘சிறப்பு’ வர்க்கத்தினரும் செல்வந்தர்களும் மட்டும் அதிகாரப் பகிர்வுகளில் அதிகபட்ச முன்னுரிமையைப் பெறுகிறார்கள்; சிறிய சமூகங்களோ அடையாளப் பிரதிநிதித்துவத்தையே பெற நேரிடுகிறது.
இந்த நிகழ்வு பிஹாருக்குக் குறிப்பாகப் பொருந்தும்; அங்கே ‘சிறப்பு’ வர்க்கத்தினர் மாநிலத்தின் நிறுவனங்களில் நேரடி செல்வாக்கு கொண்டுள்ளதுடன் மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதனால், ‘சிறப்பு’ வர்க்கத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று அர்த்தமாகாது. பிஹாரில் மேட்டுக்குடியினரின் சுழற்சி முறையொன்று செல்வாக்கு மிக்க புதிய குழுக்கள், ஏற்கெனவே செல்வாக்கு கொண்டிருந்தவர்களைப் பதிலீடு செய்ய அனுமதிக்கிறது. அங்கே அரசியல் அதிகாரத்தின் குறுகலான பிரமிடு போன்ற அமைப்பொன்று காணப்படுகிறது என்றும், வேறுபட்ட மேட்டுக்குடிப் பிரிவுகளை அது கொண்டிருக்கிறது என்றும் அர்த்தமாகிறது; ஆனால், இந்தப் பிரமிடு அமைப்பானது விளிம்பு நிலையில் உள்ள குழுக்களுக்குக் காலப்போக்கில் இடமளிக்காததாக ஆகிவிட்டது.
பிஹாரில் கிட்டத்தட்ட 205 சாதி குழுக்கள் இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே பிஹாரின் மக்கள்தொகையில் ஒட்டுமொத்தமாக 20%ஆக இருக்கும் காயஸ்தர்கள், பிராமணர்கள், பூமிஹார்கள், சத்திரியர்கள் அரசியலில் தங்களுக்கென்று ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டனர்; தங்களின் மேலாதிக்கத்தைச் சில தசாப்தங்கள் தக்கவைத்துக்கொண்டனர். காலனியாதிக்கக் காலத்திலும் இந்தக் குழுக்கள்தான் கல்விபெற்றவர்களாக இருந்தார்கள்; அரசுப் பணிகளிலும் இருந்தார்கள். அதன் பிறகு சுதந்திரப் போராட்டக் காலத்தில் அம்மாநிலத்தில் அரசியல் குழுக்களை முன்னெடுத்துச் சென்றனர்.
1952-ல் ஆரம்பித்து அடுத்த மூன்று தசாப்தங்களில் காங்கிரஸின் குடையின் கீழ் அவர்களுக்கு அதிக அளவிலான எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர். எண்ணிக்கைரீதியில் அதிகமாக இருந்த யாதவர்கள், குர்மீக்கள், கோயரிக்கள் போன்ற ‘இதர பிற்படுத்தப்பட்டோ’ருக்கும் (ஓபிசி) சாமர்கள், துஷாதுகள் போன்ற ‘பட்டியலினத்தோ’ருக்கும் அடையாள நிமித்தம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. காலனியாதிக்கக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் மாநில அதிகாரத்தில் தங்களின் பங்கை அடைவது பற்றிய விருப்பங்களை வளர்த்துக்கொண்டிருந்தனர். யாதவர்கள்-குர்மீக்கள்-கோயரிக்கள் ஆகியோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கங்கள் 1930-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டன.
பல்லாண்டுகளாக நிலத்தை உழுபவர்களாக இருந்து, நிலத்தின் உரிமையானவர்களாக ஆன இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் கணிசமானோர் கூடிய விரைவில் செல்வந்தர்களாக ஆனார்கள். பசுமைப் புரட்சி அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவந்து கொட்டியது; அரசின் திட்டங்களும் வங்கிக் கடன் போன்றவையும் அவர்கள் கிராமப்புறத் தொழில்முனைவோர் ஆவதற்கு உதவின. இவை எல்லாமே அவர்களுக்கு நல்ல கல்வியும் அரசு வேலையும் கிடைப்பதற்கும் பின்னாளில் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கும் வழிவகுத்தன. முற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மேட்டுக்குடி அரசியலர்களின் மேலாதிக்கம் காங்கிரஸில் காணப்பட்டதால் ‘இதர பிற்படுத்தப்பட்டோர்’ குழுக்களெல்லாம் ஆரம்பத்தில் காங்கிரஸ் அல்லாத அரசியல் குழுக்களான சோஷலிஸ்ட் கட்சிகளைச் சார்ந்து இயங்கின. 1980-களில் தொடங்கி இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மேட்டுக்குடிகள் மாநில அரசின் அதிகார அமைப்பில் இடம்பிடித்துக்கொண்டதன் மூலம், முற்பட்ட வகுப்பினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்த அரசியல் சூழலைப் பதிலீடுசெய்தார்கள். யாதவர்கள்-குர்மீக்கள்-கோயரிக்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்திய இந்தக் காலகட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோரில் சில குழுக்களுக்கே அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்தது. மீதமுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், அதாவது 90-க்கும் மேற்பட்ட சாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தில் இன்னமும் இடம் கிடைக்காத நிலைதான் நிலவுகிறது. மாநில அரசின் ஆதரவைப் பயன்படுத்திக்கொள்வதற்கான திறன் அவர்களிடம் இல்லை.
உள்ளுக்குள்ளேயே முரண்பாடுகள்
காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்த முற்பட்ட பிரிவினரின் மேட்டுக்குடியினர், 1980-களில் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவை நோக்கி நகர ஆரம்பித்தனர். இந்த நடைமுறை ராமஜென்மபூமி இயக்கத்தின்போது துரிதமடைந்தது. 2000-களில் இதர பிற்படுத்தப்பட்ட மேட்டுக்குடியினரின் ஆதரவு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே பிளவுபட்டது; இதர பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பக்கம் நிலவிய யாதவர்களின் ஆதிக்கத்துக்கும் இன்னொரு பக்கம் நிலவிய குர்மீ-கோயரிக்கள் ஆதிக்கத்துக்கும் இடையிலான போட்டியின் விளைவாக இந்தப் பிளவு ஏற்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவும் எண்ணிக்கைரீதியில் செல்வாக்கு குறைந்ததாலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் இந்தக் கட்சிகள் கொஞ்சம் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு வழி ஏற்பட்டது. தலித்துகளுக்கு மத்தியிலும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சாமர்கள், துஷாதுகள் காலப்போக்கில் மாநில அரசின் அதிகாரத்தில் பங்கு கிடைக்கப்பெற்று அவர்களுக்குள் அரசியல் மேட்டுக்குடியினர் உருவாக ஆரம்பித்தனர்; மற்ற தலித் சமூகங்களுக்கோ பங்கு கிடைக்கவில்லை. அடிப்படையாக, அரசுத் திட்டங்கள், கொள்கைகள் மூலமாகப் பல்வேறு வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறைகளெல்லாம் அரசியல் மேட்டுக்குடியினரின் கைகளிலேயே இருந்தன.
பிஹாரின் அரசியல் தலைமையானது மண்டல் தலைமுறையிலிருந்து புதிய அரசியல் தலைவர்களைக் கொண்ட தலைமுறைக்கு மாறுகிறது; ஏனெனில், லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார், முதல்வர் நிதீஷ் குமாரின் புகழ் மங்கிவருகிறது, ராம் விலாஸ் பாஸ்வான் காலமாகிவிட்டார்; அடையாளம் சார்ந்த அரசியலானது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கி, அவர்களை அணிதிரட்டுவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
எனினும், அதிகார அமைப்புகளில் பிரதிநிதித்துவம் என்பது 20-க்கும் மிகாமல் இருக்கும் குறிப்பிட்ட சாதிகளின் மேட்டுக்குடியினரோடு நின்றுவிடும் என்றால், எந்த உண்மையான மாற்றமும் இருக்காது. இந்தச் சூழல் நீடித்தால் அதிகாரத்தில் பங்குபெறும் வாய்ப்பும் திறனுமற்ற விளிம்பு நிலை சமூகங்களும் இன்னும் கல்வியும் செல்வமும் கிடைக்கப்பெறாத சமூகத்தினரும் சமூகத்தின் கண்ணில் புலப்படாத நிலையே நீடிக்கும்.
- பத்ரி நாராயண், இயக்குநர், ஜி.பி. பந்த் சமூக அறிவியல் மையம், அலஹாபாத்.
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT