Published : 28 Oct 2020 06:03 AM
Last Updated : 28 Oct 2020 06:03 AM
இன்று பிஹாரில் மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் தொடங்குகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றாலும், நிதீஷ் குமார் முதல்வராகத் தொடர்வாரா என்பது குறித்துக் கடுமையான சந்தேகங்களும் நிலவுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வெற்றிவாய்ப்பை இழந்தாலும் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி நிதீஷுக்கு எதிராக இருக்கிறது என்றால், 15% முற்பட்ட வகுப்பினரின் ஆதரவு பாஜகவின் பலமாக அமைந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்து, லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் நிதீஷை எதிர்த்துப் போட்டியிடுவது அவரை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. பாஜகவில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவர்கள் லோக் ஜனசக்தியின் வேட்பாளர்களாகியிருப்பது மேலும் குழப்பத்தை விளைவித்திருக்கிறது. தவிர, நிதீஷை ஆதரித்துவந்த முஸ்லிம் ஆதரவாளர்களும் இப்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக, இதுவரையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியில் இருந்தாலும் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த தேஜஸ்வி களத்தில் நாலா பக்கமும் சுழன்றடிக்கும் சூறாவளியாக மாறியிருக்கிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய மகா கூட்டணியில் பிளவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பது அவருக்கு மக்களிடம் செல்வாக்கையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. நிதீஷ் இத்தேர்தலில் சந்தித்திருக்கும் சவால்களிலேயே முதன்மையானது தேஜஸ்வியின் எதிர்பாராத இந்த விஸ்வரூபம்தான்.
விளையாட்டிலிருந்து அரசியலுக்கு
இளம் வயதிலிருந்தே தேஜஸ்விக்கு அரசியலில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே அவரது லட்சியம். ராஞ்சிக் கோப்பை போட்டிகளில் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக விளையாடியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளிலும் டெல்லி அணியின் சார்பாகப் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். தீவிரமான ஆர்வத்தோடு ஓர் ஆல்ரவுண்டர் ஆக கிரிக்கெட் ஆட்டத்தில் இறங்கினார் என்றாலும் தேஜஸ்வியின் விளையாட்டு விருப்பங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. இன்று அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு நடுவில் அவரை ஒரு தோல்வியடைந்த விளையாட்டு வீரர் என்று முத்திரை குத்துவதும் தொடரவே செய்கிறது.
2000-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே தேஜஸ்வியைத் தன்னுடன் பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்றார் லாலு. ஆனாலும் 2015 வரையில் அவரது அரசியல் பங்கேற்பு என்பது பேரணிகளின்போது அவரது அம்மா ராப்ரி தேவியுடன் சேர்ந்து நின்று கையசைப்பது மட்டுமாகத்தான் இருந்துவந்தது. 2015 தேர்தலில் நிதீஷ்-மகா கூட்டணி வெற்றிபெற்றுத் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் தேஜஸ்வி. அவர் அந்தப் பதவியில் இருந்த ஒன்றரை ஆண்டுகளில், லாலுவின் அரசியல் வாரிசாக அவர் தனது இடத்தை உறுதிசெய்துகொண்டார். லாலுவுக்கு நெருக்கமான அதிகாரிகள் அனைவரும் தேஜஸ்வியின் ஆலோசகர்களாக இருந்தார்கள். லாலுவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் அவரது இடத்துக்கு தேஜஸ்வி வந்துவிட்டார். அவரது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவுக்கு அரசியலில் விருப்பம் இருந்தபோதிலும் லாலுவின் தேர்வு தேஜஸ்விதான். ஆனால், அவர் பெரும்பாலும் டெல்லியில் முகாமிட்டிருந்தாரேயொழிய, பிஹார் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட அவர் செல்லவில்லை. 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சட்டமன்றத்துக்கும்கூட செல்லவில்லை. கட்சிக்காரர்களாலேயே அணுக முடியாத அரசியல் தலைவராக அவர் மாறிவிட்டார்.
மாறிய காட்சிகள்
இன்று அந்தக் காட்சிகள் ஏறக்குறைய முழுதாக மாறிவிட்டன. கட்சித் தொண்டர்கள் விரும்பினால், இப்போது அவரைக் காலை நேரத்தில் வீட்டிலேயே சந்திக்கலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் நடுவில் அமர்ந்து உணவருந்துகிறார். பிஹார் தலைநகர் பாட்னாவில் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் செல்கிறார். அவர்களின் குறைகளை அக்கறையோடு கேட்கிறார். சிவபெருமானை வழிபடும் படங்களாக வெளியிட்டு அரைகுறை இந்துத்துவ ஆதரவாளர்களைத் தனது பக்கம் இழுத்துப்போடுகிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பிஹாரை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்துவேன் என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்துதான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் நிதீஷ். ஆனால், கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் அலைக்கழிவு மாநில அரசின் மீதான கோபமாக மாறியிருக்கிறது. உழைக்கும் மக்களின் இந்த மனோநிலையை தேஜஸ்வி மிகச் சரியாகவே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார். அவர் தேர்தல் பிரச்சாரங்களில் கையிலெடுத்துக்கொண்டது இரண்டே இரண்டு விஷயங்களைத்தான். வேலைவாய்ப்புகள் இல்லை, கல்வியின் தரமும் சரியில்லை. இவ்விரண்டுமே, தேர்தல் களத்தில் உரிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற வாக்குறுதியையும் அளித்திருக்கிறார் தேஜஸ்வி. அதற்கு அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனாலும், அதை நோக்கி ஒரு அடியெடுத்து வைக்கட்டுமே என்றும் ஒரு சாரார் நினைக்கின்றனர். இதுவரையில், சமூகநீதிக்கான கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆர்ஜேடி இப்போது பொருளாதார நீதியைப் பற்றியும் பேசத் தொடங்கியிருப்பது ஒரு முக்கியப் பரிணாமமாகப் பார்க்கப்படுகிறது.
தனிநபர் தாக்குதல்கள்
தேஜஸ்வியின் மீதான நிதீஷின் கோபம் தனிப்பட்ட தாக்குதல்களாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டம். ஆண் குழந்தைக்காக எட்டு, ஒன்பது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பிஹாரின் மனோநிலை மாற வேண்டும் என்று அவர் பேசியது, தேஜஸ்வியைக் குறிவைத்தே என்பதில் சந்தேகம்கொள்ள எதுவுமில்லை. லாலு-ராப்ரியின் ஒன்பது குழந்தைகளில் தேஜஸ்வி எட்டாமவர். நிதீஷ் என்னை மட்டும் தாக்கவில்லை, பிரதமர் மோடியையும் சேர்த்தே தாக்கியிருக்கிறார், அவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர் என்று அதற்குப் பதில் சொல்லி நகர்ந்துவிட்டார் தேஜஸ்வி. ஆனால், பழுத்த அனுபவம் கொண்ட நிதீஷ் தனது வழக்கத்துக்கு மாறான வகையில், 31 வயது இளைஞர்மீது கோபத்தை வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. தனது இடம் கேள்விக்குறியாகிவிட்ட பதற்றமே அவரது இந்தத் தனிநபர் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பிஹாரின் அரசியல் களம் என்பது எப்போதுமே லோஹியாவின் தாக்கத்தோடு சமூகநீதி அரசியல் பேசுவதாகத்தான் இதுவரையில் இருந்துவந்திருக்கிறது. நிதீஷ் தோல்வியைச் சந்திக்க நேரிட்டால், இதுவரையிலான அந்த நட்பு முரணியக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஐக்கிய ஜனதா தளத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லையென்பதால், நிதீஷின் தேர்தல் தோல்வியானது அக்கட்சியின் இறுதி அத்தியாயமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால், ஆர்ஜேடியைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய ஓர் இளம் தலைவர் உருவாகிவிட்டார். இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் திட்டமிடலிலும் கட்சித் தொண்டர்களிடம் அவர் நிரூபித்தும்விட்டார். ஆனால், யாதவ், முஸ்லிம்களின் வாக்கு வங்கியை விஸ்தரிக்க முடியவில்லை. அதை வருங்காலத்தில் சாத்தியப்படுத்த முடியும் எனில், அவருக்கும் ஓர் அரசியல் எதிர்காலம் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT