Published : 23 Oct 2020 06:52 AM
Last Updated : 23 Oct 2020 06:52 AM
இந்தியத் தொல்லியல் துறையின் ‘பண்டித தீனதயாள் உபாத்யாயா’ தொல்லியல் நிறுவனத்தில் நடத்தப்பட்டுவரும் இரண்டாண்டு முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு இந்த ஆண்டு கடும் விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. இப்படிப்பில் சேர்வதற்கு இந்திய வரலாறு, மத்திய கால வரலாறு, மானுடவியல், செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பாரசீகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது விண்ணப்பிப்பதற்கான தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. செம்மொழிகளில் ஒன்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றால், அந்த வாய்ப்பு தமிழுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்பது மிக நியாயமான கேள்வி.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த மொழிப் பாகுபாட்டைக் கண்டித்தன. விண்ணப்பிக்கும் தகுதிப் பட்டியலில் தமிழையும் சேர்க்கச் சொல்லி தமிழக முதல்வர் பழனிசாமி இது குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். இதற்கிடையே இவ்விஷயத்தை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு எடுத்துக்கொண்டது. வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே சேர்க்கை அறிவிப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழ் படித்தோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடவில்லை. தமிழை ஏன் முதலிலேயே தகுதியாகச் சேர்க்கவில்லை, அந்த அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.
தொடரும் புறக்கணிப்பு
தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் சேர்க்கப்படவில்லை என்பதால் மட்டுமே தமிழகம் கொதித்து எழுந்துவிடவில்லை. வரலாறு, பண்பாடு சார்ந்து ஒன்றிய அரசு முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திலும் தொடர்ந்து தமிழும் தமிழகமும் பாகுபாட்டுடனேயே நடத்தப்பட்டுவருகின்றன என்பதால்தான். தொல்லியல் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு குறித்து விவாதம் எழுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வேறொரு அறிவிப்பு இதே விதமான எதிர்ப்பைச் சந்தித்தது. 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பண்பாட்டு மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கு ஒன்றிய அரசு அமைத்த வல்லுநர் குழுவில் தென்னிந்தியாவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை, 16 பேர் கொண்ட குழுவில் 6 சம்ஸ்கிருத வல்லுநர்கள் இடம்பெற்றிருக்க, மற்ற செம்மொழிகளின் சார்பில் யாருமே இல்லை. இது குறித்தும் தனது அதிருப்தியின்மையை வெளிப்படுத்தி தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தார். பலனில்லை.
வல்லுநர் குழுவின் மீதான எதிர்ப்பின் தொடர்ச்சியாகவே, தொல்லியல் பட்டயப் படிப்பு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஆனால், இரண்டாவதற்குத் தற்காலிகப் பலன் கிடைத்துவிட்டது. தற்காலிகப் பலன் என்பதற்கான காரணம், தமிழ் படித்து முதுநிலைப் பட்டம் பெற்ற ஒரு மாணவர், தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே பெறுகிறார். தொல்லியல் தொடர்பான எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற்றால் மட்டுமே அவர் நேர்முகத் தேர்வுக்கும் அதையடுத்து சேர்க்கைக்கும் தகுதிபெறுகிறார். தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பேர் தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் தமிழ் படித்தவர்கள் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
தொல்லியல் பேரார்வம்
தமிழ்நாட்டில் தொல்லியல் துறைசார்ந்து பெரும் விழிப்புணர்வு ஒன்று சமீபத்திய ஆண்டுகளில் உருவாகியிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் அரசியலில் பெற்றுவரும் முக்கியத்துவமும், தொல்லியல் துறை அதிகாரிகளின் தீவிர ஈடுபாடும் இதன் பின்னணியில் இருக்கின்றன. மிகச் சிறுபான்மையினராக இருந்துவந்த தொல்லியல் ஆர்வலர்கள், கரோனா ஊரடங்குக் காலத்தில் தினந்தோறும் காணொளி கருத்தரங்குகளில் பங்கேற்றுவருவதைப் பார்க்கும்போது இன்றைய தமிழுணர்வு தொல்லியலோடு நெருங்கிப் பிணைந்துவிட்டது என்றுதான் கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு தொல்லியல் துறை 1974 தொடங்கி நடத்திவந்த ஓராண்டு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுநிலை பட்டயப் படிப்பானது இந்த ஆண்டு முதல் இரண்டாண்டு பட்டயப் படிப்பாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் முன்னெடுப்புகளை மற்ற துறைகளும் பின்பற்றுகின்றன. அருங்காட்சியகத் துறை இணையவழியில் ஒரு வார கால கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் ஓலைச்சுவடிகள் படிப்பதையும் பராமரிப்பதையும் பற்றிக் காணொளிக் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது. அரசுத் துறைகளுக்கிடையிலான இந்த நல்லிணக்கம் தொடர வேண்டும். தமிழகத் தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பில் தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றோரும் சேரலாம். ஆனால், தமிழ் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் தொல்லியல் துறை நோக்கி வருகிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. காரணம், அவர்கள் இலக்கியங்களையும் இலக்கணங்களையும்தான் பெரும்பகுதி படிக்கிறார்களேயொழிய தொல்லியலை அல்ல. தொல்லியல் குறித்த அறிமுக அளவிலான பாடங்கள்கூட அவர்களுக்கு இல்லை.
தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு
தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் புலவர் பட்டங்கள் வழங்கப்பட்டபோது, அவர்களுக்கான பாடங்களில் ஒன்றாகக் கல்வெட்டியலும் இருந்தது. அதனால்தான், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பலரும் தமிழ் படித்தவர்களாக இருந்தார்கள். பின்பு இலக்கியப் படிப்புகள் பி.லிட், பி.ஏ ஆக மாற ஆரம்பித்தபோது, கல்வெட்டியல் பாடம் காணாமலே போய்விட்டது. இன்று தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இதழியல், சுற்றுலா குறித்த பாடங்களும் தனித்தாள்களாக இடம்பெறுகின்றன. தொல்லியலையும் அப்படியொரு தனித்தாளாக சேர்த்துக்கொள்ளலாம். அம்மாணவர்களுக்கு தொல்லியலில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில், அவர்கள் அத்துறை சார்ந்து மேலும் படிக்கலாம். தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் தமிழகத் தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பையும் படிக்கிறபட்சத்தில், தொல்லியல் துறை அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் பெறுகிறார்கள்.
தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் தொல்லியலையும் ஒரு தனித்தாளாகச் சேர்ப்பதற்கு உயர் கல்வித் துறையின் உத்தரவுகள் தேவையில்லை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒப்புதலோடு பாடத்திட்டக் குழுவே முடிவெடுத்துக்கொள்ளலாம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக வீ.அரசு பொறுப்பு வகித்தபோது, தொல்லியலையும் தமிழியல் மாணவர்களுக்கு ஒரு பாடமாக்கினார். இப்போது இருக்கும் புதிய நடைமுறைகளின்படி, பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தமிழியல், தமிழ் இலக்கிய மாணவர்களுக்குத் தொல்லியலை விருப்பப் பாடமாகப் பரிந்துரைப்பது இன்னும் எளிதாகிவிட்டது. பல்கலைக்கழகங்களில் இணைக்கப்பட்ட கல்லூரிகளும் கல்விக் குழுவின் வாயிலாக அதைச் செய்ய முடியும். எனவே, இப்போதைய தேவை தமிழ்ப் பேராசிரியர்களின் தொலைநோக்குப் பார்வையும் வரலாறு, தொல்லியல் துறைகளுடனான அவர்களது இணக்கமான உறவும் மட்டுமே.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT