Published : 20 Oct 2020 07:28 AM
Last Updated : 20 Oct 2020 07:28 AM
கரோனா நோய்த்தொற்று பரவும் வேகம், அதனால் ஏற்படக்கூடிய அபாயம், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய அவசியம், முகக்கவசம் அணிவதில் உள்ள முக்கியத்துவம், கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுதலின் மகாத்மியம் இவற்றிலெல்லாம் எல்லோருக்கும் போதுமான அளவுக்குப் புரிதல் ஏற்பட்டுவிட்டது. ஆயினும், எந்த ஒழுங்குமுறையானாலும், மக்களில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் பொருட்படுத்தாததைப் போலவே கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காற்றில் பறக்கவிடுவதையும் காண முடிகிறது.
ஹெல்மெட் போடுவதன் அவசியத்தை விளக்கியும், பிறகு போடாவிட்டால் அபராதம் என்று எச்சரித்தும் அதைக் கணிசமானோர் அலட்சியப்படுத்துகிறார்கள். அதற்காக பைக் – ஸ்கூட்டர்களுக்கு அரசு தடை விதித்துவிடவில்லை. காசிமேட்டிலும் கோயம்பேட்டிலும் தியாகராய நகரிலும் மக்கள் இடைவெளியில்லாமல் போகிறார்கள் என்பதற்காக அங்கெல்லாம் தடுப்புகளை வைத்து மக்கள் நடமாட்டத்தை அரசு நிறுத்தவில்லை; அப்படி நிறுத்துவது இனி அவசியமும் இல்லை.
பிழைப்பு என்னவாகும்?
ஆனால், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து சென்னைக்கு அன்றாடம் வந்துசெல்லும் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரைக் கடந்த 8 மாதங்களாக வாட்டி வதைப்பதை இன்னமும் ஏன் அரசு தொடர்கிறது என்று புலப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் ஆயிரம் ரயில் சேவைகள் திடீரென்று இல்லாமலாக்கப்பட்டுவிட்டால் அதை அன்றாடம் பயன்படுத்திவந்தவர்களின் நிலைமை என்னவாகும் என்று யாருமே யோசிப்பதாகத் தெரியவில்லை. ரயில்களையும், ரயில் நிலையங்களையும் சார்ந்து இயங்கிவந்த சில்லறை வியாபாரிகளை இங்கே கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்களை எண்ணிப்பாருங்கள். அவர்கள் பிழைப்பு எப்படி இருக்கும்?
கரோனாவைவிட வேலையிழப்பு, ஊதிய இழப்பு, வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு போன்றவற்றால் ஆயிரக் கணக்கான மக்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் செலவுக்குப் பணம் இல்லாமல் கணவன் -மனைவி இடையே அடிதடி சண்டை நடப்பது ஆயிரக் கணக்கான குடும்பங்களின் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. அடித்தட்டுக் குடும்பங்களில் பெரும்பாலான பெண்கள் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே தொங்குவதும், நகைகள் அடகுக் கடைக்குப் போய்விட்டதும், வீட்டில் இருப்பதை அனுசரித்துச் சமைப்பதால் குழந்தைகள் இளைத்து வாடி வலம்வருவதும் ஆட்சியாளர்கள் கண்களுக்கு எப்போது தெரியும் என்று புரியவில்லை.
ஏழைகளைக் கேலிசெய்யும் அரசு
அரசு அனுமதித்துள்ள மாநகரப் போக்குவரத்து என்பது ஏழைகளைக் கேலிசெய்யும் விதத்திலேயே இருக்கிறது. பெரும்பாலான பேருந்துகள் சொகுசுப் பேருந்துகள் என்று அறிவிக்கப்பட்டுக் கூடுதல் கட்டணத்திலேயே இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகளின் இயக்கமும் முன்புபோலத் தொடர்ச்சியாக இல்லை. இது ஒருபுறம் இருக்க, பேருந்து சேவையே பல இடங்களில் தடைபட்டிருக்கிறது. சென்னையையே எடுத்துக்கொண்டால், புறநகரில் நடப்பது தலைநகருக்குத் தெரியவில்லை என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: திருநின்றவூர் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய பிறகு பட்டாபிராமுடன் 71-இ பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம், அதற்குப் பிறகு பேருந்து வருவதற்கு வழியே இல்லை என்பதால் அல்ல. மக்கள் அலைந்து திரிந்து கூடுதலாகச் செலவிட்டு வரட்டுமே என்ற மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கரிசனம்தான். இந்த இடையூறைக் கடப்பதற்குத் தினந்தோறும் கூடுதலாக 40 ரூபாயைச் செலவிட நேர்கிறது. ஆவடி - திருவள்ளூர் பேருந்துகளைப் போல 71-இ சேவையையும் தொடரலாமே என்ற எண்ணம் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏன் தோன்றவில்லை? ஏனென்றால், அவர்கள் யாருக்குமே இன்று பேருந்து சேவை தேவை இல்லை என்பதாலா?
பொருளாதார நெருக்கடி
கரோனா நேரடியாக, சுகாதாரரீதியாக உண்டாக்கிக்கொண்டிருக்கும் விளைவுகளைக் காட்டிலும், மறைமுகமாகப் பொருளாதாரரீதியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் மோசமாக இருக்கும். இதை அடுத்த ஆண்டில் நாம் உணருவோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசு நகர்ப்புற வாழ்வில் மிக முக்கியமான அம்சமான போக்குவரத்துக் கட்டமைப்பை மீண்டும் அதன் பழைய உத்வேகத்துக்குக் கொண்டுவருவது முக்கியம். கூட்ட நெரிசலைக் குறைக்க வேண்டுமானால், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையையும் நடைகளையும் (டிரிப்ஸ்) அதிகரிக்கலாம்; பேருந்துகளின் சேவையை அதிகரிக்கலாம். மாறாக, பொதுப் போக்குவரத்தை முடக்குவது ஏழைகளை முடக்குவதுதான்.
சம்பாதிப்பதில் சரிபாதியைப் போக்குவரத்துக்குக் கொடுக்க முடியாமல் பல இடங்களில் வியர்க்க விறுவிறுக்க சாமானிய மக்கள் நடந்து செல்லும் பரிதவிப்பைப் பார்க்க முடிகிறது. ‘மாநில அரசு அனுமதி தந்தால் சேவையைத் தொடங்கத் தயார்’ என்று ரயில்வே வாரியத் தலைவர் பல முறை கூறிவிட்டார். கோடீஸ்வர அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இந்த மாநிலத்தில் ஏழைகளும் உண்டு என்பதை சற்றே நினைவுபடுத்திக்கொண்டு, புறநகர் மின்சார ரயில் சேவையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கட்டும்!
- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vrangachari57@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT