Published : 28 May 2014 12:00 AM
Last Updated : 28 May 2014 12:00 AM
நான் அபெக்ஸ் ப்ளாஸாவில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை நோக்கி என் அவெஞ்சரைத் திருப்பியதும் அங்கிருந்த காவல்காரர் “தம்பி, எங்கே போகணும்” என்று கேட்டார். “லேண்ட்மார்க்” என்றேன். “அதை மூடி பத்து நாளுக்கு மேலாகுது. ஸ்பென்ஸர் போங்க தம்பி” என்றார். கஜினி படத்தில் அசின் தலையில் ஒரு பெரிய இரும்புக் கம்பியை வைத்து வில்லன் அடிப்பாரே, அதைப் போல அடிவாங்கியது மாதிரி இருந்தது.
1999-ல் சென்னைக்கு வந் தேன். வந்த சில நாட்களிலேயே அபெக்ஸ் ப்ளாஸாவில் இருந்த இணைய மையத்துக்கு வந்தபோது, இந்தப் புத்தகக் கடையைக் கண்டு பிடித்தேன். முதன்முதலாக உள்ளே நுழைந்தபோது, பெரும் தயக்கமாக இருந்தது. என்ன புத்தகம் வேண்டு மென யாரும் கேட்காததே ஆச்சரிய மாக இருந்தது. முதல் பத்துப் பதினைந்து தடவைகளுக்கு இவ்வளவு பெரிய புத்தகக் கடையா என்ற ஆச்சரியம் நீங்கவில்லை. புத்தகங்களை எடுத்துப் பார்த்து, அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் வெளிநாடுகளில்தான் புத்தகக் கடைகள் இருக்கும் என்று அப்போதுவரை புத்தகங்களில்தான் படித்திருந்தேன். இந்தக் கடையைத்தான் முதலில் அப்படி வசதிகளோடு பார்த்தேன். பிறகு வாராவாரம் என் ஞாயிற்றுக்கிழமை சாயங் காலங்களை இங்கேதான் செலவழித்தேன்.
என் நண்பர்களிடமும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பேன். ஒரு நண்பர் ஒரு முறை நான் வாங்கிவந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, ‘‘எனக்கும் வேலை கிடைக்கும். முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன், லேண்ட்மார்க் போய் புத்தகம் வாங்குவேன்’’ என்று சொன்னார். பல முறை என் நண்பர்களைச் சந்திக்கும் இடமாக இந்த அபெக்ஸ் பிளாஸா கடை இருந்திருக்கிறது. பல ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்கள் போன் செய்யும்போது, லேண்ட்மார்க்கில் இருக்கிறேன் என்று பெருமை யோடு சொல்வேன். “இந்த வாரமுமா? இப்படியா ஞாயிற்றுக் கிழமையைச் செல வழிப்பீர்கள்?” என்று அலுத்துக்கொள்வார்கள். சோம்ஸ்கியோடும் ராமச்சந்திர குஹாவோடும், கேனன் டாயிலோடும் மார்க்குவெஸோடும் நான் அங்கே ஆத்மார்த்தமாக உரையாடிக்கொண்டிருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? பல பருவ இதழ்கள், பல எழுத்தாளர்கள் இங்கேதான் எனக்கு அறிமுகமானார்கள். மதுரை மாவட்ட மைய நூலகம் என் மனக்குகையில் ஒரு விளக்கை ஏற்றி இருளைப் போக்கியது என்றால், இந்த லேண்ட்மார்க் ஒரு தீப்பந்தத்தையே கொளுத்தி, வெளிச்சம் தந்தது.
அது என்னவோ, ஸ்பென்ஸரிலும் சிட்டி சென்டரிலும் இருக்கும் லேண்ட் மார்க்கோடு ஏற்படாத நெருக்கம் இந்த லேண்ட்மார்க்கோடு ஏற்பட்டது. பிறகு, இதே லேண்ட்மார்க்கில், நான் மொழிபெயர்த்த புத்தகங்களும் விற்பனைக்கு வந்தன. பெரும் மகிழ்ச்சியைத் தந்த தருணங்கள் அவை.
நூலகங்களும் புத்தகசாலைகளும் மனிதனின் வாழ்வையே மாற்றியமைக்கின்றன. புத்தகசாலைக்குள் நுழையும்போது, சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் நம்மோடு பேசுவதற்குக் காத்துக்கொண்டு நிற்பதைப் போன்ற உணர்வே ஏற்படு கிறது. அது வேறு எந்தப் புத்தகக் கடையையும்விட, லேண்ட்மார்க்குக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற நாடுகளி்ல் இருக்கும் சிறந்த புத்தகக் கடைகளுக்குப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஜெனீவாவின் ஆஃப் த செல்ஃப், பயோ (Payot), கொழும்பு நகரின் விஜிதயாபா, எம்.டி, குணசேன என அந்தக் கடைகளையெல்லாம் லேண்ட்மார்க்கோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். அப்போதும் அபெக்ஸ் பிளாஸா லேண்ட்மார்க்தான் சிறந்த கடையாக எனக்குத் தோன்றியது. இந்தியாவின் பிற நகரங்களிலும் இவ்வளவு சிறந்த புத்தகக் கடை இல்லை என்றே நினைக்கிறேன்.
இனி, புத்தகங்களை வாங்கவோ பார்க்கவோ, சிட்டி சென்டர் லேண்ட்மார்க், ஆழ்வார்பேட்டை க்ராஸ்வேர்ட் என்று செல்ல வேண்டியிருக்கும். இனி நுங்கம் பாக்கம் பக்கமாகச் செல்லும்போதெல்லாம், காலி செய்துவிட்டுப்போன நண் பனின் வீட்டைப் பார்ப்பதுபோல அந்த இடத்தைப் பார்த்துவிட்டுப் போகலாம், அவ்வளவுதான்.
கே. முரளிதரன்-https://www.facebook.com/tex.willer.581730
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT