Last Updated : 14 Oct, 2020 06:43 AM

1  

Published : 14 Oct 2020 06:43 AM
Last Updated : 14 Oct 2020 06:43 AM

அமெரிக்காவில் சமூகநீதி தோற்குமிடம்!

சமூகநீதி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு முதலான சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் கடந்த நூறு ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பவை. இந்தியாவில் கடந்த நாற்பதாண்டுகளில் வேகம் பெற்றவை. எங்கெல்லாம் பிறப்பு எல்லா உயிர்க்கும் சமமாக பார்க்கப்படுவது இல்லையோ அங்கெல்லாம் இப்படியான சொற்றொடர்களுக்கு அவசியம் இருக்கிறது. உலகின் ஆகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவிலும்கூட இவற்றுக்கான அவசியம் இருக்கிறது. அங்கே சாதிகள் இல்லைதான். ஆனால் இனத்தால், நிறத்தால் வேற்றுமைகள் பாராட்டப்படுகின்றன. அவற்றை அந்த நாகரிகச் சமூகத்தால் இன்றளவும் களைய முடியவில்லை. அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் ‘உடன்பாட்டு நடவடிக்கை’ (affirmative action). கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கறுப்பினத்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கு உடன்பாட்டு நடவடிக்கை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதன் வீச்சும் பயன்பாடும் பலவீனமாகவே இருக்கிறது.

அமெரிக்காவின் இனவேற்றுமை

இரண்டு சமீபத்திய எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். முதலாவது, அதன் நிற வேற்றுமை பற்றியது. இரண்டாவது, உடன்பாட்டு நடவடிக்கை பற்றியது. மே இறுதியில் அந்தச் சம்பவம் நடந்தது. ஒரு வெள்ளைக் காவலரின் முழங்காலின் கீழ், புறங்கையில் விலங்கு பூட்டப்பட்ட ஒரு கறுப்பினத்தவரின் குரல்வளை நெரிபட்டது. 8 நிமிடங்கள் 46 நொடிகளுக்குப் பிறகு ஜார்ஜ் பிளாய்டின் மூச்சு அடங்கியது. ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter) என்கிற கோஷம் ஓர் இயக்கமாக உருவெடுத்தது. அமெரிக்காவைத் தாண்டியும் ஒலித்தது.

அடுத்த சம்பவம், அமெரிக்காவுக்கு உள்ளேகூட அதிகம் விவாதிக்கப்படவில்லை. இது ஆகஸ்ட் மத்தியில் நடந்தது. ட்ரம்ப் அரசின் சட்டத் துறை, யேல் பல்கலைக்கழகத்தைக் குற்றஞ்சாட்டியது. யேல் கடைப்பிடிக்கும் உடன்பாட்டு நடவடிக்கை கறுப்பினத்தவர்களுக்கும் லத்தீன் - அமெரிக்கர்களுக்கும் சாதகமாக இருக்கிறது; வெள்ளையினத்தவர்களுக்கும் ஆசிய - அமெரிக்கர்களுக்கும் பாதகமாக இருக்கிறது. இதுதான் குற்றச்சாட்டு. அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகும் உத்தேசமும் அரசுக்கு இருக்கிறது. உடன்பாட்டு நடவடிக்கையை ஏன் அரசே எதிர்க்கிறது? இந்த நடவடிக்கை எப்படி அமலாகிறது? இந்தக் கேள்விகளுக்கான விடையை அமெரிக்காவின் இனவேற்றுமையிலிருந்து தொடங்க வேண்டும்.

இனவேற்றுமை அமெரிக்காவின் வரலாறு நெடுகிலும் பிணைந்து கிடக்கிறது. 1492-ல் அமெரிக்க மண்ணில் கால் பதித்தார் கொலம்பஸ். ஐரோப்பிய வெள்ளையர்கள், அந்தப் பூமியை ஆக்கிரமித்தனர்; அங்கு வசித்த பூர்வகுடிகளைக் கீழடக்கினர்; ஆண்டைகள் ஆயினர். அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அழைத்து வந்தனர். அவர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர். அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர். இந்த அடிமை வணிகம் முந்நூறு ஆண்டு காலத்துக்கும் மேல் நீடித்தது. 1865-ல் ஒருமாதிரி முடிவுக்கு வந்தது. ‘ஜிம் க்ரோ’ என்றழைக்கப்பட்ட சட்டங்கள் அதைச் சாத்தியமாக்கின. அப்போதும் கறுப்பர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருந்தனர். கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான பேருந்துகளும் பேருந்துத் தரிப்பிடங்களும் தனித்தனியானவை. இன்னும் ரயில்கள், வாழிடங்கள், குடிநீர்க் குழாய்கள், உணவகங்கள் எல்லாமே தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. இந்தத் தீண்டாமையை 1964-ல் அரங்கேறிய பொது உரிமைச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வந்தது.

உடன்பாட்டு நடவடிக்கை

அறுபதுகளின் தொடக்கத்தில் கென்னடி அதிபராக இருந்தார். அரசாங்க ஒப்பந்தப் பணிகளில் தொழிலாளர்களை அமர்த்தும்போது நிறம், இனம், சமயம், பிறந்த தேசம் போன்றவற்றைக் கணக்கில் கொள்ளலாகாது என்று ஆணை பிறப்பித்தார். பின்னர், இது கல்வி நிலையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. அதுதான், ‘உடன்பாட்டு நடவடிக்கை’. வரலாற்றுரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினருக்குக் கல்வி கற்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கக் கல்லூரிகள் சுயேச்சையானவை. கல்லூரி அனுமதிக்குப் பள்ளியிறுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை முதலான துறைகளில் அவர்களது பங்களிப்பு, விண்ணப்பத்துடன் அவர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரை, ‘சாட்’ போன்ற தேர்வில் பெற்ற தரம் முதலான பல அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும். இவற்றுடன் விண்ணப்பதாரர் சிறுபான்மை இனத்தவராக இருந்தால், அதுவும் கவனத்தில் கொள்ளப்படும். இவை தவிர, கறுப்பினத்தவருக்கு இடஒதுக்கீடு எதுமில்லை. இடஒதுக்கீட்டை அமெரிக்கச் சட்டம் அனுமதிக்கவில்லை. உடன்பாட்டு நடவடிக்கை ஒரு சலுகை மட்டுமே; இந்தச் சலுகையை மேற்கொள்வது கல்லூரி நிர்வாகத்தின் விருப்பம் சார்ந்தது. எட்டு மாநிலங்களின் அரசுக் கல்லூரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. உடன்பாட்டு நடவடிக்கை பலவீனமானது என்றாலும், ஓரளவுக்குப் பலன் இருந்தது. அறுபதுகளில் கல்லூரி மாணவர்களில் கறுப்பர்களின் வீதம் மிகவும் குறைவாக இருந்தது.

1976-ல் 10% ஆகவும், 2016-ல் 14% ஆகவுமானது. 2016-ல் கல்லூரி மாணவர்களில் வெள்ளையர்கள் 56% ஆகவும், லத்தீன் அமெரிக்கர்கள் 19% ஆகவும் ஆசியர்கள் 6% ஆகவும் இருந்தனர். ஆசியர்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவரும் (49.5%), வெள்ளையர்களில் மூன்றில் ஒருவரும் (30%), கறுப்பர்களில் ஐந்தில் ஒருவரும் (17%), லத்தீன் அமெரிக்கர்களில் பத்தில் ஒருவராலும்தான் (11.4%) கல்லூரிக்குள் நுழைய முடிகிறது. லத்தீன் அமெரிக்கர்கள் அதிகமும் உடல் உழைப்பைக் கோரும் பணிகளுக்கும், ஆசியர்கள் வெள்ளைக் காலர் உத்தியோகங்களுக்கும் புலம் பெயர்ந்தவர்கள் ஆகும். இது அவரவர் பிள்ளைகளின் கல்வியிலும் பிரதிபலிக்கிறது.

இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை

குடிமக்கள் அனைவரும் சமம் என்கிறது அமெரிக்கச் சட்டம். ஆகவே, சமமான குடிமக்களிடையே கறுப்பர்களுக்கும், லத்தீன் அமெரிக்கர்களுக்கும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று கருதுகிறது அமெரிக்க நீதிமன்றம். ஒரு நெகிழ்வான சலுகையாக உடன்பாட்டு நடவடிக்கை இருந்துவருகிறது. இதிலும் ட்ரம்ப் அரசாங்கம் கை வைக்கிறது. ஏன்? கறுப்பர்களிடத்திலோ லத்தீன் அமெரிக்கர்களிடத்திலோ ட்ரம்பின் வாக்கு வங்கி இல்லை; அவரது வங்கி வெள்ளையர்களிடத்தில் இருக்கிறது. அதை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் யேல் மீதான வழக்கு. இதில் வெள்ளையர்களுடன் ஏன் ஆசியர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்? ஆசியர்கள் சிறுபான்மையினர். ஆனால், கல்வியில் பின்தங்கியவர்களல்லர். எனினும், தமது அரசு வெள்ளையர்களுக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை எனும் தோற்றம் ட்ரம்புக்குத் தேவைப்பட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் உலகின் தலைசிறந்த கல்வி நிலையங்கள் உள்ளன. எனினும், பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு அந்தக் கல்லூரிகளின் நெடிய படிக்கட்டுகளில் ஏறுவது சிரமமாகவே இருக்கிறது. அமெரிக்கச் சட்டம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இருக்கிற சலுகைகளைத் தட்டிப்பறிக்கவும் இப்போதைய அரசு தயங்கவில்லை. சமீபத்தில் ‘நியூ யார்க்கர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் இப்படி ஒரு வாசகம் இருந்தது: ‘பெரும்பாலான வெள்ளையர்கள் பிறந்து வளர்ந்து பயணிக்கும் ஒரு ரயிலில் ஏறுவதற்கு லட்சக் கணக்கான கறுப்பர்கள் காத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு முன்னால் நீண்ட வரிசை இருக்கிறது.’

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x