Published : 07 Sep 2015 09:27 AM
Last Updated : 07 Sep 2015 09:27 AM
அந்த வீடு ஒன்றும், அப்படி வசதியானது இல்லை. சிற்றோடுகள் வேய்ந்த பழமையான கூரை. அதில் சல்லடையாக ஓட்டைகள். சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட கோரைப் பாய், டைனமோ பொருத்திய பழைய சைக்கிள், சில பிளாஸ்டிக் நாற்காலிகள், பழைய டி.வி-யைத் தவிர. ஆனாலும், கார்ட்டூனிஸ்ட் அனந்தராமனின் வீடு நம்மை வசீகரிக்கிறது.
தஞ்சையில் 1927-ல் பிறந்த அனந்தராமன், யுவான் சுவாங்கும், பாஹியானும் உலகைச் சுற்றியதுபோல 16 வயதிலேயே மூட்டையைத் தூக்கிக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்.
இந்த நீண்ட பயணத்தில் ஆளுமைகள் பலரை நேரில் பார்த்து அவர்களைக் கேலிச்சித்திரமாகவும், கோட்டோவியமாகவும் வரைந்து, அவர்களிடமே கையெழுத்தும் பெற்றவர். அவரது, ஒவ்வொரு படமும் ஒரு கதையைச் சொல்கிறது.
“12 வயதிலேயே பார்ப்பவர்களையெல்லாம் கேலிச்சித்திரங்களாக வரையத் தொடங்கிவிட்டேன். அதில், ஆசிரியர்களும் தப்பவில்லை. 16 வயதில் விடுதலைப் போராட்டத் தலைவர்களை நேரில் சந்தித்து வரைய வேண்டும் எனப் புறப்பட்டுச் சென்றேன். எத்தனையோ தலைவர்கள். எவ்வளவோ அனுபவங்கள்.”
காந்தி படத்தைக் கையில் எடுத்தவர், “இது எப்போது வரைந்தது தெரியுமா?” என்று கேட்கிறார்.
1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்து - முஸ்லிம் வகுப்பு மோதலால் ரத்த ஆறு ஓடிய நவகாளியில் அமைதிப் பயணம் மேற்கொண்ட காந்தியுடன், அவரது பேரன் துஸார் காந்தி நடத்திய ‘அமிர்த பஜார்’ என்ற பெங்காலி பத்திரிகைக்காகச் சென்றேன். காந்தியுடன் 20 நாட்கள் இருந்தேன். அப்போது நான் வரைந்த ஓவியத்தைக் காட்டி காந்தியிடம் கையெழுத்து கேட்டேன். தனது பின்பக்க உருவத்தைப் பார்த்த காந்தி, “என் முகத்தைப் பார்க்க விரும்பவில்லையா?” என்றார். நான், “உங்களுக்குப் பின்னால் இந்தியா என்ன ஆகும் என்று நினைத்து வரைந்தேன்” என்றேன். “இதற்கு என்ன தலைப்பிடுவாய்?” என்றார். “பாபுஜி எங்கே போகிறீர்கள்?” என எழுதுவேன் என்றேன். சிரித்துக்கொண்டார்.
ராஜாஜியை வரைந்து, அவரிடம் கையெழுத்து கேட்டபோது மறுத்துவிட்டார். மிகப் பெரும் போராட்டத்துக்குப் பிறகே கையெழுத்துப் போடச் சம்மதித்தார். ஆனால், அதில் தனிப்பட்டது, பிரசுரத்துக்கல்ல என்று எழுதினார். ஆனால், பின்னர் அவரிடமே அனுமதி பெற்று, எனது தொகுப்பு நூலில் பிரசுரித்தேன். அதைப் பார்த்த ராஜாஜி, “நான் எழுதியதையாவது எடுத்திருக்கலாமே” என்றார்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த அட்லி, இரண்டாவது முறையாக 1966-ல் இந்தியா வந்தபோது, சென்னை ராஜ்பவனில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து வரைந்த ஓவியத்தில் கையெழுத்து பெற்ற பின், அவருடன் பேசிக்கொண்டே மாடிப்படி நோக்கி வந்தேன். அப்போது, “வயதான எனக்கு படியிறங்க உதவ முடியுமா?” என்றார். “தாராளமாக” என்றேன். எனது தோளில் சாய்ந்தபடியே படியிறங்கிய அட்லி, நீங்களோ மெலிந்திருக்கிறீர்கள், கனத்த உருவமான என்னைச் சுமப்பதில் சிரமம் இல்லையா? என்றார். “அதற்கென்ன? எங்களை நீங்கள் 150 ஆண்டுகள் சுமக்கவில்லையா?” என நான் கூறியவுடன், அட்லி சிரித்துக்கொண்டார்.
“‘சுதேசமித்திரன்’, ‘கல்கி’, ‘ஃபிரீ இண்டியா’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, ‘ஹிட்டாவாடா’இப்படி எவ்வளவோ பத்திரிகைகளில் என் ஓவியங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்கிறார்.
ஒபாமாவிடமிருந்து ஒரு கடிதம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமவுக்கு, தான் வரைந்த கேலிச்சித்திரங்கள், கோட்டோவியங்களுடன் கூடிய ‘நான் சந்தித்த மனிதர்கள்’ (MEN I HAVE MET) என்ற ஆங்கில நூலை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் மூலம் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் அனந்த ராமன்.
அந்த நூலைப் பெற்றுக்கொண்ட பராக் ஒபாமா, அதற்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம் ஆகஸ்ட் 21 அன்று அனந்த ராமனை வந்தடைந்தது.
“அன்புள்ள அனந்த்,
உங்களுடைய அன்பிற்கினிய பரிசுக்கு நன்றி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தது மகிழ்ச்சி தருகிறது. உங்களது பெருந்தன்மையால் நான் மனம் நெகிழ்வுற்றேன்.
நாம், வேறுபட்ட கலாச்சாரங்கள், சமூகங்களிலிருந்து வந்துள்ளபோதிலும், நாடுகளும் தனிமனிதர்களும் ஒன்றுபட்டுச் செயல்படும்போது மேலும் பலமானவர்களாக முடியும் என்று நம்புகிறேன். எல்லைகளைக் கடந்த கலாச்சாரப் பரிமாற்றத்தால் நமது குறிக்கோள்களை எட்ட முடியும் என்பதோடு, அனைவருக்கும் அமைதியும், வளமும் நிறைந்த உலகத்தையும் நோக்கிச் செல்ல முடியும்.
மீண்டும் தங்களது சிந்தனையார்ந்த செயலுக்கு நன்றி கூறுகிறேன். எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஒபாமா.
“ஓவியங்களும் உறவுப் பாலம்தான், என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு வழக்கம்போல் சிரிக்கிறார் அனந்தராமன்.
- அனந்தராமன்
சி. கதிரவன்,
தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT