Published : 04 Oct 2020 07:29 AM
Last Updated : 04 Oct 2020 07:29 AM
இந்துக் கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியலர்கள் இப்படிப் பேசுவது புதிது இல்லை; நீதிமன்றங்களும் இதே தொனியில் பேசத் தொடங்குவது கொஞ்சம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஏனென்றால், ஏற்கெனவே இந்துக் கோயில்கள் இந்துக்கள் வசம்தான் இருக்கின்றன. நடைமுறை ரீதியில் மட்டும் அல்ல; சட்டரீதியிலும் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு, ‘இந்து அறநிலையத் துறை பராமரிப்பிலிருந்து கோயில்களை விடுவித்து இந்துக்களிடமே அவற்றை ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரியது. நீதிமன்றம் சரியாகவே இதைத் தள்ளுபடிசெய்ததோடு, 1925 குருத்வாரா சட்டம் சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிட வழிவகுப்பதையும், 1995 வக்பு வாரியச் சட்டம் இஸ்லாமியர்களின் தர்ம அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்த வழிவகுப்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
இதே சமயத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மற்றொரு வழக்கில் வேறு குரலில் பேச முற்பட்டது. பழனி முருகன் கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு அது. சட்டப்படி, அறநிலையத் துறை வழிபாட்டுக்கு அப்பாற்பட்ட கோயில் நிர்வாகப் பணிகளைக் கவனித்துவருவதற்கு எவ்விதத் தடையுமில்லை. ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதற்குத் தடை விதித்ததோடு மட்டும் அல்லாமல், ‘இந்துக் கோயில்கள் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் நிர்வாகத்தில் செயல்பட்டுவருவது தவறு; இதனால், கோயில்களின் புனிதம் கெட்டுப்போகிறது; விரைவில் கோயில்களை இந்து மதத்தில் நம்பிக்கையிருக்கும் நேர்மையானோர் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது’ என்று இந்த வழக்கோடு தொடர்பற்ற ஓர் அறிவுரையையும் கூறினார். இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இப்போது இந்தத் தீர்ப்புக்குத் தடை விதித்துள்ளது என்றாலும், நீதிபதியின் கருத்துகளை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.
வரலாற்றை அறிதல்
கிறித்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அம்மதத்தினரிடமே இருப்பதுபோல், இந்துக்களின் வசமே இந்துக் கோயில்கள் இருக்க வேண்டும் என்று இன்று பொதுத் தளத்தில் ஒலிக்கும் குரல் ஏதோ இந்துக் கோயில்கள் எல்லாம் இந்துக்கள் அல்லாதோரிடம் இருப்பதான ஒரு தொனியையும், இந்து அறநிலையத் துறைக்கு நம் கோயில்கள் மீது அக்கறை இல்லாத தொனியையும் தருகின்றன. வரலாற்றையும் சட்டத்தையும் அறிந்தவர்கள் இதை முற்றிலுமாக அபத்தம் என்றே கருதுவார்கள்.
அடிப்படையில், இந்து மதத்துக்கும் இஸ்லாம், கிறித்தவ மதங்களுக்கும் உள்ள வேறுபாட்டை இப்படிப் பேசுபவர்கள் உணர வேண்டும். இஸ்லாம், கிறித்தவ மதங்கள் நிறுவப்பட்ட மதங்கள். அவை நிறுவனமயமாக்கப்பட்டதன் ஒரு பகுதியாகவே அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் அந்த மதங்களின் கைகளில் உள்ளன. அந்த மதங்களைச் சார்ந்தோரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அந்த மத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக, அந்த மதங்களில் சேருவதற்கும் தொடர்ச்சியான அருளைப் பெறுவதற்கும் குருமார்களின் கட்டுப்பாடுகள் உண்டு. இறை மறுப்பாளர்களுக்கு அங்கு இடமில்லை. மாறாக, இந்து மதத்தின் பெருமையே அது மக்களின் நம்பிக்கையால் மட்டுமே இயங்கக்கூடிய மதமாக இருப்பதே. இதனால்தான், நாத்திகர்களைக்கூட இந்து மதம் வெளியே வைக்கவில்லை; அவர்களையும் தம்மில் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இந்து மதக் கோயில்களை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அறங்காவல் துறை உருவாக்கப்பட்டதற்குப் பின் நீண்ட வரலாறு உண்டு. ஒரு வகையில், அது இந்துக் கோயில்கள் ஜனநாயகமாக்கப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியும்கூட.
தர்மகர்த்தாக்கள் அனுபவம்
இந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பிடித்த கிழக்கிந்திய கம்பெனி 1789-ம் வருடம், வருவாய் வாரியத்தை (போர்டு ஆஃப் ரெவின்யூ) உருவாக்கியது. அதன் கீழ் ஏழாவது ஒழுங்குமுறை விதிகள் 1817-ல் உருவாக்கப்பட்டு, இந்துக் கோயில்கள் நிர்வாகமானது இந்த வருவாய் வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 1839 வரை இந்த முறைமையே நீடித்தது. அப்போதெல்லாம் திருப்பதி கோயிலின் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையைக் கிழக்கிந்திய கம்பெனி தன் வருமானத்தில் ஒரு பகுதியாக வருடா வருடம் எடுத்துக்கொண்டிருந்தது.
ஒரு கிறித்தவப் பின்னணி நாட்டைச் சேர்ந்தவர்கள் இதர மதக் காரியங்களை நிர்வகிப்பது கூடாது என்று 1858-ல் கிறித்தவ அமைப்புகள் விக்டோரியா மகாராணியிடம் முறையிட்டன. விளைவாக, இத்தகு தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. விளைவாக, உள்ளூர் குழுக்களிடம் கோயில் நிர்வாகங்கள் சென்றன. தர்மகர்த்தாக்கள் உருவானார்கள். அவர்களுடைய செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டும் நீதிமன்றங்கள் வழி நிர்வாக அமைப்பு (scheme decree) சீரமைக்கப்பட்டது.
உள்ளபடி இந்தத் தர்மகர்த்தாக்கள் முறைமை பெரும் ஊழல் முறைமையாகவே இருந்தது. பல நூறு கோடிகள் மதிப்புள்ள கோயில் நிலங்களும் சொத்துகளும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், மடைமாற்றப்படுவதும் நடந்ததோடு, கோயில்களுக்கு உண்டான சம்பிரதாயங்களும்கூட (அனுஷ்டானங்கள்) முறையாகக் கடைப்பிடிக்கப்படாத சூழல் இருந்தது. இப்படியான நிர்வாகத்தில் ஆதிக்கச் சாதியினரே முக்கியப் பங்கு வகித்தார்கள் என்பதையும், சுதந்திர இந்தியாவில் இன்றும் நாம் கேள்விப்படும் கண்டதேவிபோல பல ஊர்க் கோயில்களிலும் தீண்டாமைக் கொடுமைகளை எல்லாம் சகஜமாக அனுசரித்த அமைப்பு அது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சீர்திருத்தங்களின் அணிவகுப்பு
சென்னை மாகாணத்தில் 1925-ல் பதவி வகித்த நீதிக் கட்சி அரசானது, இந்து அறநிலைய மசோதாவை உருவாக்கியது ஒரு முக்கியமான சீர்திருத்த முன்னெடுப்பு. அதேபோல சுதந்திரத்துக்குப் பின் 1951-ல் கொண்டுவரப்பட்ட இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம். மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு 1956-ல் நடந்த பின்னர் கேரள மாநிலம் அதுவரை மன்னராட்சிக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள் நிர்வாகத்தை அரசின் பொறுப்புக்குக் கொண்டுவந்தது. 1959-ல் புதிய இந்து அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்டு, கோயில் நிர்வாகங்கள் அறநிலைய வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான இரு விஷயங்கள்... ஒன்று, அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சமயம் சார்ந்த சடங்குகள் - சம்பிரதாயங்கள் நடத்துவதில் அரசு தலையிடுவது இல்லை. எந்த அரசாக இருந்தாலும் சமயத்தின் அடிப்படையான சம்பிரதாயச் சடங்குகளில் சட்டப்படி தலையிட முடியாது. இரண்டாவது, கோயில்கள் நிர்வாகத்தைக் கையில் வைத்திருப்பதால் கோயில்களின் வருமானத்தை அரசு எடுத்துக்கொண்டு லாபம் காணவில்லை; மாறாக, மக்களுடைய வரிப் பணத்திலிருந்து கோயில்களை நிர்வகிக்க அரசு செலவிடுகிறது என்பதாகும்.
ஓர் உதாரணம், தமிழ்நாட்டில் தற்போது சுமார் 44,000 கோயில்களை அறநிலையத் துறை நிர்வகித்துவருகிறது. சமீபத்திய தகவல்கள்படி, இவற்றில் 300 பெரிய கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டுகிறது; 650 கோயில்களின் வருமானம் ரூ.2 லட்சம் - ரூ.10 லட்சம் எனும் வரையறையில் இருக்கிறது; ஏனைய ஆகப் பெரும்பாலான - அதாவது 35,000 கோயில்களின் வருமானம் - ரூ.10 ஆயிரத்துக்குள்தான் இருக்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், 33,655 மனைகளும் உள்ளன என்றாலும், இவை யாவற்றின் வழி வரும் வருமானமானது, இத்தனை ஆயிரம் கோயில்களையும் நிர்வகிக்கவும், இந்தக் கோயில்களில் பணியாற்றும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் போதுமானதாக இல்லை. ஒரு லட்சம் ரூபாய் கோயில் பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட்டு, அதிலிருந்து வரும் வட்டியின் மூலம் அக்கோயில்களின் நிர்வாகச் செலவைச் சமாளிக்கும் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதே, ஏன்? வருமானமே இல்லாத கோயில்களாக இருப்பினும் அவற்றிலும் ஒரு வேளையேனும் விளக்கேற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்; வருமானமே பல கோயில்களுக்கு இல்லாததுதான்!
இவ்வளவையும் ஏன் அரசு ஏற்கிறது என்றால், பெரும்பான்மையினரான இந்துக்களின் மீதான அக்கறையும், அதன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் விழைவும்தான்.
இந்துக்களே நிர்வகிக்கிறார்கள்
இந்துக் கோயில்களின் நிர்வாகத்தில் இந்துக்கள் அல்லாதவர்களின் குறுக்கீடு கூடாது என்பதை எல்லா விதங்களிலும் அரசு உறுதிசெய்கிறது. இதன் விளைவாகத்தான் இந்து அறநிலை வாரியத்தின் ஆணையர்கூட இந்து மதத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்டத்திலேயே விதிவிலக்குப் பிரிவு (16(5)) உண்டு. மேலும், இந்து மதத்தின் உண்மையான பலம் என்பது அது எல்லா சாதியினருக்கும் சமமான இடம் அளிப்பதிலேயே இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பதால்தான் நிர்வாகத்தில் கோயில் ஊழியர்கள் நியமனம் வழி பல சாதியினரின் பங்கேற்புக்கும் அது வழிவகுத்திருப்பதோடு, கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களாகத் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் இடம்பெறுவதையும் சாத்தியம் ஆக்குகிறது.
இந்துக் கோயில்கள் நிர்வாகத்தை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோருபவர்கள் அப்படியென்றால், இன்று கோயில்களை நிர்வகிப்பவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கூற வேண்டும்.
ஊழலை ஒழிக்கும் வழி
நிச்சயமாக, கோயில்கள் நிர்வாகத்திலும் ஊழல் மலிந்திருக்கிறது. கோயில் சொத்துகளிலிருந்து கணிசமான வருமானத்தை இடைத்தரகர்கள் சுரண்டுகிறார்கள். நீதிமன்றங்களில் அறநிலையத் துறைக்கு எதிராகத் தொடுக்கப்படும் பெரும்பான்மையான வழக்குகள் ஏல உரிமை, வாடகை/ குத்தகை உயர்த்துதல், கோயில் சொத்துக்களிலிருந்து வெளியேற்றம் மற்றும் ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகள் என்பதும் உண்மை. ஆனால், இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று, எந்தத் துறை இன்று ஊழலுக்கு அப்பாற்பட்ட துறை என்று இருக்கிறது?
நிச்சயமாக, நம்முடைய கோயில்களைச் சூழ்ந்திருக்கும் ஊழலிலிருந்து அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அது மேலும் கூடுதலான ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் வழியாகவே சாத்தியம். அரசின் சில முயற்சிகளை இங்கே சுட்டலாம். கோயில் உண்டியல் வசூல் எண்ணிக்கையை வெளிப்படையாக நடத்துவதுடன் அதில் பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதித்திருப்பதால் இன்று ஒளிவுமறைவற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்து அறநிலையச் சட்டத்தின் 34-வது பிரிவின்படி அரசு ஒப்புதல் இல்லாமல் கோயில் நிலங்களை விற்பதோ, நீண்ட கால குத்தகைக்கு விடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. கோயில் மனைகளில் நிரந்தரமாகக் கூடாரமிட்டிருப்பவர்களை வெளியேற்றும் வகையில், நகர்ப்புறக் குத்தகைக்காரர் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் குடித்தனக்காரர்கள் வெளியேறாமல் வழக்கு போடுவதைத் தடுக்கும் விதமாக வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்தும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமானால், இந்து அறநிலையத் துறை ஆணையர்களே கோயில் சொத்துகளிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்ற உத்தரவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்ல முயற்சிகள். இப்படியான நடவடிக்கைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
மத உரிமையை அடிப்படை உரிமை ஆக்கியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டமானது, அதே சட்டத்தின் 25(2)வது பிரிவில், மதம் சார்பான நடவடிக்கைகளில் பொருளாதாரம், நிதி, அரசியல் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தடை விதிப்பதற்கும் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவதோடு, புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை மறந்திடக் கூடாது. இந்து மத நிறுவனங்களில் சமூக நலம் மற்றும் சீர்திருத்தங்கள் செய்வதோடு, அவற்றை அனைவருக்கும் திறந்துவிடுவதன் மூலம் பொதுத் தன்மையை உருவாக்குவது இந்து மதத்தின் மீதான உண்மையான அக்கறையாளர்களின் வெளிப்பாடாக இருக்க முடியும். அதற்குக் கோயில்கள் அரசின் நிர்வாகத்தில் இருப்பதே சரியான வழி!
- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT