Published : 08 Sep 2015 09:11 AM
Last Updated : 08 Sep 2015 09:11 AM
மதுவால் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ஒரு மாயை என்பதைப் பார்த்தோம். சொல்லப்போனால், எந்த ஓர் அரசும் மனமுவந்து மதுவை விற்பனை செய்வதில்லை. சில நிர்ப்பந்தங்களால் மதுவை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதே உண்மை. அப்படியெனில், மதுவிலக்கு கொண்டுவருவதற்கு யாரெல்லாம் தடையாக இருக்க முடியும்?
மது ஆலை அதிபர்கள்
தமிழகத்தில் 11 மதுபான ஆலைகளும், 8 பீர் ஆலைகளும் இயங்குகின்றன. இவர்களில் பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். மேற்கண்ட நிறுவனங்களிடம் கடந்த 2001-2002-ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் சுமார் 1.5 கோடி ‘ஹாட்’ வகை மதுபானப் பெட்டிகளையும், சுமார் 64 லட்சம் பீர் பெட்டிகளையும் கொள்முதல் செய்தது. இந்தக் கொள்முதல் 2014-15-ல் ‘ஹாட்’ மதுபானங்கள் 5.5 கோடி பெட்டிகளாகவும், பீர் 2.5 கோடிப் பெட்டிகளாகவும் உயர்ந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு வேண்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மதுபான ஆலையில் மட்டும் அதிகபட்சமாகக் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 11,432 கோடி மதிப்புக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறைத்து மதிப்பிட்டாலும்கூட இந்த ஆலைகளின் கடந்த 10 ஆண்டு லாபம் மட்டும் பல 100 கோடிகளைத் தாண்டும்.
அரசு அதிகாரிகள்
அடுத்ததாக தமிழ்நாடு வாணிபக் கழகம், கலால் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளாக இருக்கலாம். கொள்முதல் தொடங்கி விநியோகம் வரை முறைகேடுகள் அதிகம் புழங்கும் துறையாக இருக்கிறது டாஸ்மாக். எந்த மதுபான ஆலை கமிஷன் அதிகம் அளிக்கிறதோ அந்த ஆலையிடம் அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்த வகையில் மட்டும் மாதத்துக்குச் சராசரியாக ரூ.100 கோடி லஞ்சப் பணம் புழங்குகிறதாம்.
இது தவிர, ஏ, பி, சி, டி கிரேடு டாஸ்மாக் கடைகள், மாவட்ட மேலாளருக்கு முறையே ரூ. 10,000, ரூ.7,000, ரூ.4,000, ரூ.2,000 வீதம் மாதம்தோறும் லஞ்சம் கொடுக்க வேண்டுமாம்; தவிர, முதுநிலை மண்டல மேலாளருக்கு ரூ.1,000, மாவட்டக் கலால் உதவி ஆணையர், தாலுகா கலால் அதிகாரிக்குத் தலா ரூ.500 கொடுக்க வேண்டும் என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். தவிர, காவல் துறைக்கான செலவு, மதுபானப் பெட்டிகள் ஏற்று, இறக்கு சுமைக் கூலி, கடையின் கூடுதல் மின் கட்டணம் ஆகிய செலவுகள் தனி. இப்படியாக ஒரு கடைக்குச் சராசரியாக மாதம் ரூ.15,000 வரை செலவு ஏற்படுகிறது. மொத்தம் 6,826 கடைகள். இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக கணக்கில் வராத பணம் புழங்குகிறதாம்!
கீழ் நிலை அரசியல் பிரமுகர்கள்
மதுக் கடைகளின் மொத்த பார்களையும் நடத்துவது இவர்கள்தான். அரசியல் கட்சிகளின் மாவட்டச் செயலாளர் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை பலர் இதில் அடக்கம். மொத்தமுள்ள 6,826 மதுக்கடைகளில் அதிகாரபூர்வமாக 1,050 கடைகளில் பார் கிடையாது. சுமார் 3,200 கடைகளின் பார்கள் மட்டுமே முறையாக ஏலம் எடுக்கப்படுகின்றன. சுமார் 2,600 பார்கள் சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. 24 மணி நேர விற்பனை, கூடுதல் விலைக்கு விற்பனை, போலி மதுபானங்கள் விற்பனை எனக் கொழிக்கின்றன இந்த பார்கள். தமிழகத்தில் ஒரு நாளின் சராசரி மதுவிற்பனை ரூ.60 கோடி. ஒரு கடையின் சராசரி விற்பனை ரூ.87,899. சட்ட விரோத பார்களின் கடைகள் மூலம் தினசரி மது விற்பனை ரூ.22.80 கோடிக்கு நடக்கிறது. இதன் அடிப்படையில் தினசரி அரசுக்குக் கட்ட வேண்டிய 2.5% கட்டணத்தைக் கணக்கிட்டால், மாதம்தோறும் இந்த பார்கள் ரூ.17.16 கோடி சட்டவிரோதமாகச் சம்பாதிக்கின்றன. ஆண்டுக்கு ரூ.206 கோடி.
இப்போது சொல்லுங்கள், உண்மையில் யாரெல்லாம் மதுவிலக்குக்குத் தடையாக இருக்க முடியும்?
- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
தெளிவோம்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT