Published : 07 Sep 2015 09:21 AM
Last Updated : 07 Sep 2015 09:21 AM
சன்னி, ஷியா, அரேபியர்கள், துருக்கியர்கள், குர்து இனத்தவர் மற்றும் இஸ்ரேலியர்களின் எதிர்காலம் பற்றிய எனது ஆரூடம் இதுதான்: நீண்டகாலமாகத் தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் மோதல்களை அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லையென்றால், ஒருவரை ஒருவர் அழித்தொழிப்பதற்கு முன்பே இயற்கைத் தாய் அவர்கள் அனைவரையும் அழித்துவிடுவாள். ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதத்தின்போது நீங்கள் தவறவிட்ட சில செய்திக் குறிப்புகளைத் தருகிறேன்.
ஈரானில் பாரசீக வளைகுடாவுக்கு அடுத்துள்ள பண்டார் மஹ்ஷார் நகரில் வெப்ப அளவு 163 டிகிரிக்கு உயர்ந்ததாக ஜூலை 31-ல் ‘யூ.எஸ்.ஏ. டுடே’ இதழ் செய்தி வெளியிட்டது. ‘ஏற்கெனவே பூமியில் வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒன்றான மத்தியக் கிழக்குப் பகுதியை வேக வைக்கும் அளவுக்கு வெப்ப அலை தொடர்ந்து வீசுகிறது’ என்கிறது அந்தச் செய்தி. “நான் பார்த்ததிலேயே நம்பவே முடியாத வெப்ப நிலை அளவீடு அது” என்கிறார் ‘அக்குவெதர்’ வானிலை நிபுணர் ஆண்டனி சக்லியானி.
வியர்வையில் நனையும் மக்கள்
இராக்கில், சில நாட்களுக்கு முன்னர், போதுமான குளிர்சாதன வசதியைக் கொடுக்க முடியாததால் ஒரு அரசே பதவி நீக்கம் செய்யப்பட்டது. 120 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவிய வாரங்களில், நாள் ஒன்றுக்குச் சில மணி நேரமே குளிர்சாதனத் துக்கான மின்சாரத்தை அரசு வழங்க முடிந் ததால் கோபமடைந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று துணை அதிபர்களைப் பதவியிலிருந்து நீக்கியதுடன், துணைப் பிரதமர் அலுவலகத்தையும் மூட உத்தரவிட்டார் இராக் பிதமர் ஹைதர் அலி அபாதி.
ஆகஸ்ட் 1-ல் ‘டைம்’ இதழின் செய்தியாளர் ஆன் பர்னார்டு குறிப்பிட்டிருப்பதைப் போல, இராக்கில் வெப்பப் பிரச்சினை ஐஎஸ் பயங்கரவாதிகளுடனான போரையே மிஞ்சிவிட்டது. வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நான்கு நாட்கள் வார இறுதி விடுமுறையை இராக் பிரதமர் அறிவித்தார். அத்துடன், குளிர்சாதன வசதிகளுக்காக அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த 24 மணி நேர மின்சார வசதியை நிறுத்த உத்தரவிட்டார்.
“ஒரு வெள்ளிக் கிழமையன்று மாலை, தொழி லாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாக்தாத் நகர மையத்தில் போராட்டம் நடத்தினர். மின் பற்றாக்குறையைக் கண் டித்தும் அதற்குக் காரணமான ஊழலைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி போராடினர். சிலர் தங்கள் மேலாடைகளைக் களைந்துவிட்டு தெருவில் படுத்து உறங்கினர். அது, அமைதியான சமூகத்திடமிருந்து வந்த உறுதியான செய்தி; வழக்கத்துக்கு மாறான போராட்டம். ஏனெனில், எந்த முக்கிய அரசியல் கட்சியும் இப்போராட்டத்தை நடத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று ஆன் பர்னார்டு எழுதியிருந்தார்.
அழிந்துவரும் ஏரி
2014 பிப்ரவரி 19-ல் ஈரானிலிருந்து ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ இவ்வாறு செய்தி வெளியிட்டது: ஈரானின் புதிய அதிபர் ஹாஸன் ரவுஹானியின் தலைமையில் எடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை முடிவு, அணுசக்தி விஷயத்தில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடனான பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்பதைப் பற்றியது அல்ல, அந்நாட்டின் மிகப் பெரிய ஏரி கரைந்துபோகாமல் காப்பாற்றுவது எப்படி என்பதைப் பற்றியதுதான்.
உலகின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றான ஒரவுமியா ஏரி தனது அளவில் 80%-ஐக் கடந்த பத்தாண்டுகளில் இழந்து சுருங்கிவிட்டது. பருவநிலை மாற்றம், சுற்றியுள்ள நிலங்களுக்கு அதீதமான நீர்ப் பாசனம், ஏரிக்கு நீர் வரத்தைத் தரும் ஆறுகளில் கட்டப்பட்ட அணைக்கட்டுகள் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
“ஒரவுமியா ஏரி வற்றிவிட்டது. எனது வேலையும் பறிபோய்விட்டது. என் குழந்தைகளும் சென்றுவிட்டனர். சுற்றுலாப் பயணிகளும் போய்விட்டார்கள்” என்று, ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்த தனது தேநீர்க் கடையின் அழுக்குத் தளத்தில் நின்றபடிப் புலம்புகிறார் 58 வயதான மொஸாஃபர் செராகி.
வாஷிங்டனில் ‘சென்டர் ஃபார் கிளைமேட் அண்ட் செக்யூரிட்டி’ எனும் முக்கியமான அமைப்பை நடத்திவரும் பிரான்செஸ்கோ ஃபெமியா மற்றும் கைட்லின் வெர்ரெல் ஆகிய இருவரும் இப்பிரச்சினையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் சமீபத்தில் கூறிய ஒரு விஷயத்தை இவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்: “பாகிஸ்தானில் இந்த ஆண்டு, பயங்கரவாதச் சம்பவங்களை விடவும் வெப்ப அலைகளின் பாதிப்பில்தான் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதமும் கால நிலை மாற்றப் பிரச்சினையும் ஒன்றுக்கொன்று போட்டியிடக் கூடாது என்பதை நாம் வலியுறுத்தலாம். ஆனால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காகச் செலவழிக்கப்பட்ட நிதியைவிட, பருவநிலைப் பிரச்சினைக்குச் செலவழிக்கப்பட்ட நிதி அதிகம் என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது” என்று மைக்கேல் குகல்மேன் கூறியிருக்கிறார்.
“பருவநிலை மாற்றத்தின் விளைவாக, மத்தியத் தரைக்கடல் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் 1971 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், குளிர்காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு குறைந்திருப்பதற்கான உறுதியான சான்று கிடைத்திருப்பதாக 2011-ல் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய கடல்சார் மற்றும் வளி மண்டல மேலாண்மை அமைப்பு (என்.ஓ.ஏ.ஏ.) தெரி விக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதிகளில் குளிர்காலத் தட்பவெப்ப நிலையே கடுமையாக வறண்டுபோயிருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக் கிறது” என்றும் பிரான்செஸ்கோ ஃபெமியா மற்றும் கைட்லின் வெர்ரெல் இருவரும் கூறியிருக்கிறார்கள்.
நடவடிக்கைகள் போதாது
இறுதியாக அவர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்: “இதுபோன்ற மோசமான நிகழ்வுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்துக்கு அழுத்தம் தருகின்றன. பொறுப்புள்ள அரசுகள் இந்த அழுத்தத்தை உணர்ந்து சமூக ஒப்பந்தத்தைப் பலப் படுத்தும் முயற்சியில் இறங்கவிருக்கின்றன என்றும் பொறுப்பற்ற அரசுகள் அதைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் தெரியவந்திருக்கிறது. ஆனால் மொத்தமாகப் பார்க் கப்போனால், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்பதே உண்மை.”
சிரியாவை எடுத்துக்கொள்ளுங்கள்: அந்நாட்டின் நவீன வரலாற்றில், கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வறட்சி, அந்நாட்டில் நடந்துவரும் புரட்சியைவிடவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. லட்சக்கணக்கான விவசாயிகளும் கால் நடை மேய்ப்பர்களும் தங்கள் நிலங்களை விட்டு விட்டு, நகரங்களுக்குச் சென்றுவிட்டார்கள். நகரங் களிலோ பஷார் அல் அஸாதின் அரசு அவர்களைக் கைவிட்டுவிட்டது. இது புரட்சியை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டிலிருந்து நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல் யார் என்று சன்னி, ஷியா பிரிவினர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், இயற்கை அன்னை ஒன்றும் சும்மாயில்லை. அவள் அரசியல் செய்வதில்லை. அவள் செய்வதெல்லாம் இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல்தான். தவறான வழியில் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால், அனைவரையும் அவள் வீழ்த்திவிடுவாள்.
அவர்களைக் காக்கப்போகும் ஒரே இஸம், ஷியா இஸமோ இஸ்லாம் இஸமோ அல்ல; சுற்றுச்சூழல் இஸம்தான். ஷியா காற்று என்றோ சன்னி நீர் என்றோ எதுவும் இல்லை; எல்லாமே பொதுதான். சுற்றுச்சூழலைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் அவர்கள் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல் படவில்லை என்றால், மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு அவர்களுக்குக் காத்திருக்கிறது!
© நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: வெ. சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT