Published : 30 Sep 2020 02:50 PM
Last Updated : 30 Sep 2020 02:50 PM
அரசியல் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் எப்போதுமே பரபரப்புக்குத் தீனி போடுபவை. அதுவும் நேற்றுவரை ஒருவரையொருவர் சாடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று சந்தித்துப் பேசினால் அரசியல் மாற்றம் தொடர்பான ஊகங்கள் கொடிகட்டிப் பறக்கும்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கும், சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்துக்கும் இடையிலான சந்திப்பு அப்படியான ஊகங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறது. மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு நீண்ட இந்தச் சந்திப்பு பலரையும் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது.
பகையாளிகளான பங்காளிகள்
பாஜக, சிவசேனா இரண்டுமே இந்துத்துவா கட்சிகள்தான். கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது உரசிக்கொண்டாலும், இரு கட்சிகளும் கூட்டணியைத் தொடரவே செய்தன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய சிவசேனா, அதன் பின்னர் பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் மோதி வருகிறது. கரோனா பரவலை உத்தவ் தாக்கரே அரசு கையாண்ட விதம், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சர்ச்சைகள், நடிகை கங்கணா ரணாவத்துக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையிலான மோதல் எனப் பல்வேறு பிரச்சினைகள் இரு தரப்புக்கும் இடையிலான பகை முடிச்சை இன்னும் இறுக்கியிருக்கின்றன.
சிவசேனாவின் முக்கியத் தலைவரும், அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’ இதழின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் தான், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதை முன்னின்று நடத்தியவர். ‘சாம்னா’ இதழில் பாஜகவைச் சரமாரியாக விமர்சித்து வந்தவர் அவர். கடந்த சில மாதங்களாக, ஒருவரையொருவர் சந்திப்பதைக்கூட ராவத்தும் ஃபட்னாவிஸும் விரும்பவில்லை. அந்த அளவுக்குப் பகை முற்றியிருந்தது.
பேட்டிக்கான சந்திப்பா?
இப்படியான சூழலில் இந்தச் சந்திப்பு சலசலப்புகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிவசேனா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட விளக்கம், மேலும் கேள்விகளை எழுப்பியது. ‘சாம்னா’ நாளிதழுக்காக ஃபட்னாவிஸைப் பேட்டியெடுப்பது தொடர்பாகவே இருவரும் சந்தித்துப் பேசியதாகக் காரணம் சொல்லப்பட்டது.
இதுகுறித்து ட்வீட் செய்த ராவத், “ஃபட்னாவிஸுடன் சில முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினேன். அவர் முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல. பிஹார் தேர்தலில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும்கூட” என்று கூறினார். அதேசமயம், “எங்கள் இருவரின் கொள்கை வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாங்கள் எதிரிகள் அல்ல” என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். செய்தியாளர் சந்திப்பிலும் இதையே தெரிவித்தார்.
“ஃபட்னாவிஸை மட்டுமல்ல ராகுல் காந்தி, அமித் ஷா எனப் பல தலைவர்களைப் பேட்டி எடுக்கவே விரும்புகிறேன்” என்று அவர் சொல்லிக் கொண்டாலும் இது வெறும் பத்திரிகை சார்ந்த சந்திப்பு என்பதை நம்ப யாருமே தயாராக இல்லை.
கூட்டணிக்குள் குழப்பங்கள்
கடந்த சில காலமாகவே ‘மஹா விகாஸ் அகாடி’ கூட்டணியில் நிறைய உள் முரண்கள். கூட்டணி சார்பாக ஒட்டப்படும் போஸ்டர்களில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்தான் இடம்பெறுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் போஸ்டர்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதுவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோரின் படங்கள் சிவசேனாவின் போஸ்டர்களில் இடம்பெறுவதில்லை எனும் அதிருப்தி காங்கிரஸ் கட்சியினரிடம் உண்டு.
இந்தச் சந்திப்பு குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், “ஒரு பேட்டிக்கான நேரத்தை முடிவு செய்வதற்கு இவ்வளவு நேரம் தேவைப்படுமா என்ன? பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து காங்கிரஸ் பெரிய அளவில் போராட்டங்களை நடத்திவருகிறது. இந்தச் சமயத்தில் இப்படி இருவரும் சந்தித்துப் பேசுவது கேள்விக்குரியது.
மக்களவையில் இந்த மசோதாக்களைச் சிவசேனா ஆதரித்து வாக்களித்தது. மாநிலங்களவையில் வாக்களிக்காமலேயே வெளியேறிவிட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். சிவசேனாவுடனான உறவைக் காங்கிரஸ் நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது என்றும் சஞ்சய் நிருபம் தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்தச் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸுக்கும் கடும் அதிருப்திதான். இந்தச் சந்திப்பு நிகழ்ந்த மறுநாளே உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சரத் பவார். 40 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அழுத்தத்தில் சிவசேனா
சிவசேனாவும் பாஜகவும் கைகோக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஒரு வருடத்துக்கு முதல்வர் பதவியில் உத்தவ் தாக்கரே தொடரலாம் என்றும், மீதம் உள்ள மூன்று வருடங்களுக்கு ஃபட்னாவிஸ் அந்தப் பதவியில் அமர வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். இதையடுத்து, சிவசேனாவுக்கான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
அக்கட்சியைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக எதிர்கொள்ளும் எல்லாமே பிரச்சினையாகவே இருக்கின்றன. சுஷாந்த் மரணம் தொடர்பான சர்ச்சையின் கரம், உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே வரை நீண்டது. பாஜக மூத்த தலைவர் நாராயண ரானேயின் மகன் நிதீஷ் ரானே பகிரங்கமாக ஆதித்ய தாக்கரேவைக் குற்றம் சாட்டினார். அதேபோல, உத்தவ் தாக்கரேவை இழிவுபடுத்தும் வகையிலான கார்ட்டூனை ரீ-ட்வீட் செய்த காரணத்துக்காக ஒரு கடற்படை அதிகாரி தாக்கப்பட்டபோது, இது ரவுடி ராஜ்ஜியம் என்று ஃபட்னாவிஸ் விமர்சித்தார்.
கங்கணா ரணாவத்துக்குச் சொந்தமான கட்டிடம் சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டது என்ற காரணத்துக்காக இடிக்கப்பட்டபோது சிவசேனா அரசை ஃபட்னாவிஸ் கடுமையாகச் சாடினார். “தாவூத் இப்ராஹிமின் வீட்டை இடிக்க வேண்டிய அரசு, கங்கணாவின் வீட்டை இடிக்கிறது” என்று இடித்துரைத்தார். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு இடையில் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
ஊகங்கள் உண்மையாகுமா?
பாஜகவில் சமீபத்தில் தேசிய அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் ஃபட்னாவிஸின் பெயர் இல்லை என்பதால், மாநில அரசியலில் அவருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகிறது என்றும் கணிப்புகள் உருவாகியிருக்கின்றன. “இரண்டு முக்கியத் தலைவர்கள் சந்தித்துப் பேசினால் அரசியலைப் பற்றிப் பேசாமல் டீ, பிஸ்கட் பற்றியா பேசிக் கொண்டிருப்பார்கள்?” என்று பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியது பல்வேறு விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது.
டிசம்பர் மாதத்துக்குள் இந்தக் கூட்டணி உடைந்து, உத்தவ் தாக்கரே அரசு வீழ்ந்துவிடும். பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கைகோத்துவிடும் என்றெல்லாம் ஹேஷ்யங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அடுத்தடுத்த நகர்வுகளில் அவை உண்மையானவையா அல்லது வெறும் ஊகங்கள்தானா என்பது தெரிந்துவிடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT