Published : 12 Sep 2015 10:10 AM
Last Updated : 12 Sep 2015 10:10 AM

எழுத்துச் சுதந்திரத்தின் அபாயம்

பிரபல மலையாள எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான எம்.எம். பஷீர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்தியாவில் சமீப காலமாக எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் என்றில்லாமல், இந்தியா முழுக்கவே இந்த அச்சுறுத்தல் நீள்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் எதிரிகளால் குறிவைக்கப்படுபவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்கி போன்றவர்கள் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் தற்போது பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் எம்.எம். பஷீர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார். பிரபல மலையாள நாளிதழான ‘மாத்ருபூமி’யில் ராமாயணம் குறித்து அவர் எழுதிவந்த தொடர்தான் இதற்குக் காரணம்.

எம்.எம். பஷீர்

எம்.எம். பஷீர் கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாள மொழிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் முனைவர் பட்ட ஆய்வான குமரன் ஆசான் கவிதைகள் பின்னர் புத்தகமாக வெளிவந்து புகழ்பெற்றது. மேலும், ஆரம்ப கால மலையாளச் சிறுகதைகள், சிவியும் தஸ்தாயேஸ்கியும், நம் மகாகவிகள், மலையாளச் சிறுகதைகளின் வரலாறு போன்றவை இவரின் மிக முக்கியமான புத்தகங்கள். இந்தியத் தத்துவங்கள் குறித்து அதிகமும் ஆராய்ந்தார். அது குறித்தும் எழுதியிருக்கிறார். இந்நிலையில், ராமாயண மாதத்தை ஒட்டி பிரபல மலையாள நாளிதழில் ராமாயணம் குறித்துத் தொடர் எழுத முடிவு செய்தார். இது குறித்து ஆராய்ந்து, மொத்தம் ஏழு தொடர்கள் எழுத நாளிதழுக்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராமாயணம் குறித்து ஐந்து தொடர்களை எழுதினார். அவர் எழுதத் தொடங்கிய காலம் முதலே அவருக்குத் தொடர்ந்து அநாமதேய மிரட்டல்கள் வந்தன. மேலும், ‘ஹனுமன் சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவருக்கு எதிராகச் சுவரொட்டிகளை அடித்து ஒட்டினர். ஊர்வலம் நடத்தினர். இந்தத் தொடரை வெளியிடக் கூடாது என்று நாளிதழ் நிர்வாகத்துக்கும் மிரட்டல் விடப்பட்டது. இதன் விளைவாக நாளிதழில் இவரின் தொடர் நிறுத்தப்பட்டது.

இந்துத்துவாவும் கருத்துச் சுதந்திரமும்

பிரபல ஐரோப்பிய எழுத்தாளரான வென்டி டோனிகரின் புத்தகங்களான இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு மற்றும் இந்துயிசம் ஆகியவை டெல்லியைச் சேர்ந்த சிறு மதவாதக் குழு அளித்த நெருக்கடி காரணமாக அதனை வெளியிட்ட பென்குயின் பதிப்பகம் கடந்த ஆண்டு அதனைத் திரும்பப்பெற்றது. இதன் தொடர்ச்சியில், சில ஆண்டுகளாகக் கருத்துச் சுதந்திரம் சார்ந்து ஏராளமான சோக நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில்தான், எம்.எம். பஷீர் ராமாயணம் குறித்து எழுதக் கூடாது என்று மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே தாமஸ் மேத்யூ மற்றும் வீரான் குட்டி ஆகியோர் இது குறித்து எழுதியிருக்கின்றனர். கேரள வரலாற்றில் இப்படியாக மத அடையாளம் சார்ந்து ஓர் எழுத்தாளர் மிரட்டப்படுவது இதுவே முதல் முறை.

ராமாயணமும் கேரளமும்

இந்தியாவில் ராமர் என்பது அரசியல் குறியீடாக மாறிப்போன நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்தியா இன்னும் முழுமையாக மாறவில்லை. ராமரை இங்குள்ள பல கவிஞர்கள் காவியமாகப் படைத்திருக்கின்றனர். இதில் கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் முக்கியமானவர்கள். பஷீரின் ராமாயணம் குறித்த ஆய்வுகள் இந்த வகையைச் சேர்ந்தவை. அதாவது, எழுத்தச்சன் சார்ந்த தொடர்ச்சி. அதற்காக வால்மீகி ராமாயணத்தையும் பயன்படுத்திக்கொண்டார். மேலும், ராமாயணத்தைப் பொறுத்தவரை கேரளாவுக்கெனத் தனி மரபு உண்டு. அங்கு ஆண்டுதோறும் ராமாயண மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வீடுகளில் ராமாயணம் பாடப்படும். இங்கு குறிப்பிடத்தக்க விஷயம், வட கேரளாவின் மாப்ளா முஸ்லிம்களுக்காக மாப்ளா ராமாயணம் என்ற தனி ராமாயண நூலும் உண்டு. இந்நிலையில், சமீபகாலமாக கேரளாவில் எழுச்சி பெற்றுவரும் மதவாதக் குழுக்களின் போக்குகளும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தக் குறுங்குழுக்கள் அவரை எழுதக் கூடாது என்று மிரட்டியது ஜனநாயக விரோதச் செயல்.

பஷீரும் ராமாயணமும்

ராமாயண சாராம்சம் என்ற தலைப்பில் ராமர் குறித்த பஷீரின் முதல் தொடர் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வெளிவந்தது. அது ராமரின் கோபம் குறித்த ஒன்றாக இருந்தது. ராமன் சீதை விஷயத்தில் கோபம்கொண்டதைக் குவியப்படுத்தி எழுதியிருந்தார். இரண்டாம் தொடர், ராமனின் மனிதாபிமான குணாதிசயங்கள் குறித்ததாக இருந்தது. இந்த விஷயத்தில் பஷீர், மறைந்த சோசலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவைப் பின்பற்றினார். அவரின் ராமர் குறித்த எழுத்துகளை மேற்கோள் காட்டினார். மேலும், சீதையை மீட்கக் காட்டுக்குச் சென்றது, சீதையின் அக்னிப் பரீட்சை, ராவணனை எதிர்கொண்ட வரலாறு அனைத்தையும் தனக்கு உரித்தான நுட்பமான மொழியில், இலக்கியரீதியாக, கவித்துவமான மனோபாவத்தோடு எழுதியிருந்தார். எழுத்துக்கு எல்லை நிர்ணயிப்பதும், அதற்கு அடையாளத்தை வரைவதும் அதிகாரமயத்தை நோக்கிய செயல்பாடு. இந்நிலையில், எழுத்தாளர்களின் சாதி மற்றும் மத அடையாளம் சார்ந்து எழுத்துகளை வரையறுப்பது, அவர்களை அதற்குள் திணிப்பது என்பது அறத்தை மீறிய செயல். இந்த அளவுகோலின் அடிப்படையில் பார்த்தால், ஐரோப்பிய அறிவுஜீவிகள் எவரும் இந்திய வரலாற்றைப் பற்றி எழுதியிருக்கவே முடியாது. பண்டைய இந்தியா மற்றும் வேதங்கள் குறித்து அற்புதமான ஆய்வுகளை நிகழ்த்திய வென்டி டோனிகர் தன் ஆய்வுகளை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது. பிரபல உருதுக் கவிஞர்களான ரஷ்கான், தாஜ் மற்றும் மௌலான ஹசரத் மொகானி ஆகியோர் கிருஷ்ணரைப் பற்றி அற்புதமான கவிதைகளை அளித்திருக்கின்றனர். மேலும், யேசு சபை பாதிரியா ரான காமில் புல்கி ராமாயணம் குறித்த அவரின் எழுத்துகளால் புகழ்பெற்றார். இந்தியாவில் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட அனைவருமே இஸ்லாமியர்கள் அல்ல. இந்நிலையில் குறிப்பிட்ட அடையாளத்தைக் கொண்டவர்கள் தான் அது குறித்த விஷயங்களை எழுத முடியும் என்று யாரும் உத்தரவு பிறப்பிப்பது முறையல்ல.

எச். பீர்முஹம்மது, எழுத்தாளர்,

தொடர்புக்கு: peer_mohammedwr@outlook.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x