Published : 14 Sep 2015 10:11 AM
Last Updated : 14 Sep 2015 10:11 AM

மெல்லத் தமிழன் இனி 2 - மது ஒழிப்பைப் பள்ளிகளிலிருந்து தொடங்குவோம்!

மதுவால் ஒருதலைமுறையே சீரழிந்துவிட்டது. பெரும் வணிகத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். பள்ளிகளுக்குக்கூட மாணவர்கள் மது அருந்திவிட்டுச் செல்கிறார்கள். இந்த அழிவிலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பது இன்றைய அவசரத் தேவை.

தமிழகம் இன்றைக்கு இருக்கும் இக்கட்டான சூழலில், உண்மையில் மது ஒழிப்பைத் தொடங்க வேண்டிய இடம் பள்ளிகள்தான். மது வெறுப்பை விதைக்க வேண்டிய நிலம் மாணவர்களின் உள்ளங்கள்தான். அதுதான் வருமுன் காப்பதாக அமையும். பதின் பருவத்தினரைப் பொறுத்தவரை மது என்பது ஓர் ஈர்ப்பு. அருந்தித்தான் பார்ப்போமே என்ற ஒரு சாகச மனநிலை. அதேசமயம் குடிநோய் என்பது மது அருந்துவது மட்டும் அல்ல. மது அருந்த வேண்டும் என்கிற எண்ணம்தான் குடிநோய்க்கான ஆணி வேர். எனவே, பச்சை மரத்தில் அந்த எண்ணம் பதிந்துபோனால், அதை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. எனவே, மது ஒழிப்புப் பணியை மாணவர்களிடமிருந்து தொடங்குவதுதான் முக்கியமானது.

இன்றைக்கு அடித்தட்டுக் குடும்பங்கள் தொடங்கி, வசதியான குடும்பங்கள் வரை மதுவின் கொடுமைகளை மாணவர்கள் அறிந்தே யிருக்கின்றனர். பள்ளிகளில் தூங்கி வழியும் மாணவர்களில் கணிசமான பேர், ‘இரவெல்லாம் வீட்டில் சண்டை, தூங்கவில்லை’ என்கிறார்கள். வன்முறைக்கு உள்ளாகும் மாணவர்களும் ஏராளம். அவர்களுக்கு அப்பா ஏன் அடிக்கிறார், அப்பா ஏன் சண்டை போடுகிறார், அப்பா வாசலில் வாந்தி எடுத்துவிட்டுப் புரள்கிறார் என்று புரியவில்லை. அம்மாவிடம் கேள்வி கேட்டால் அதற்கும் சேர்த்து இரண்டு அடி விழும் என்று மவுனமாகிவிடுகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. ஆனால், நாம்தான் அவற்றை எல்லாம் கேட்பதே இல்லை. வீட்டுப் பாடத்தையும் மதிப்பெண்ணைத் தாண்டியும் பள்ளிகள் எதையும் யோசிப்பதே இல்லை.

மது அருந்துவது பாவம், அது ஒரு குற்றச்செயல், அது அருவருக்கத் தக்கது, மது உயிருக்குக் கேடு இவற்றை எல்லாம் மாணவர்களிடையே சில நிமிடங்களாவது போதியுங்கள். யோகா உட்பட எவ்வளவோ விஷயங்களைப் பாடத்திட்டங்களாக வைக்கும் அரசுகள் இதையும் ஒரு பாடமாக வைக்க முன் வர வேண்டும். அந்தப் பாடத்தில் மதுவால் ஏற்படும் உடல், மன, குடும்ப, சமூக, பொருளாதார நலக் கேடுகளை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும். பாடங்களுக்கு அப்பாற்பட்டும் இதுபோன்ற விஷயங்களை விவாதத்துக்கு உட்படுத்தும் களங்களைப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

பெரியவர்களாகிய நம்மைவிடப் பெரும் மாற்றங்களை மலரச் செய்யும் வல்லமையைப் பெற்றவர்கள் குழந்தைகள். ஆண்டிபட்டி அருகே பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் கொல்லப்படவிருந்த ஒரு பெண் சிசுவைக் காப்பாற்ற கெஞ்சிக் கூத்தாடி, அடிவாங்கி, கடைசியாக அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான் சிறுவன் கணேசபெருமாள். இரவெல்லாம் எங்கேயோ வைத்து அந்தப் பிஞ்சை பொத்திக் காத்தவன், விடிந்ததும் தனது பள்ளி ஆசிரியரையும் காவல் துறையினரையும் வரவழைத்து, குழந்தையைக் காப்பாற்றினான். அந்த ஒரு குழந்தையை மட்டுமல்ல, பொம்மநாயக்கன்பட்டியில் இன்று நூற்றுக்கணக்கில் பெண் குழந்தைகள் விளையாடுகின்றன என்றால், காரணம் அந்த மாணவன் செய்த மகத்துவம். ஒடிசாவில் மனித உரிமைக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் வீதிகள் தோறும் மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள். ராஜஸ்தானில் குழந்தைத் திருமணங்களை நிறுத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். தென் தமிழகத்தில் ‘குழந்தைகள் பாராளுமன்றம்’ மூலம் எத்தனையோ நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் குன்னூர் - பெட்டட்டி கிராமத்திலும், தர்மபுரி - பேபினமருதஹள்ளி கிராமத்திலும் மது ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்கிறார்கள் பள்ளிக் குழந்தைகள். பேபினமருதஹள்ளி கிராமத்தில் 100 % மது ஒழிப்பைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் குழந்தைகள். வாருங்கள், மதுவை முளையிலேயே கிள்ளி எறிவோம்.

தெளிவோம்…

- டி.எல்.சஞ்சீவிகுமார்

- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x