Published : 21 Sep 2020 04:09 PM
Last Updated : 21 Sep 2020 04:09 PM
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் மசோதாக்களின் காரணமாக மையம் கொண்டிருக்கும் அரசியல் புயல், பல மாநிலங்களில் சுழன்றடிக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமிருந்து எழுந்திருக்கும் எதிர்க் குரல்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன.
இந்த மசோதாக்கள் ஜூன் 5-ல் அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். தற்போது அந்த அவசரச் சட்டங்கள் மசோதாக்களாக மாற்றப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆவேசமாகப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். இது விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியிருப்பதில் ஆச்சரியமில்லை.
மனம் மாறிய கூட்டாளிகள்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியது. இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்படும் சூழலை உருவாக்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளத்தின் இந்த முடிவு, மிக முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹரியாணா அரசில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜேஜேபி) இவ்விஷயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. தொடக்கத்தில் இந்த மசோதாக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இரு கட்சிகளும் கொண்டிருந்தன. எனினும், விவசாயிகள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைக் கண்ட பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றன.
பஞ்சாப் மாநில விவசாயிகளின் சார்பாக, மத்திய அரசிடம் தொடர்ந்து பேசிவந்த சிரோமணி அகாலி தளம் கட்சி, மத்திய அரசின் மனதை மாற்ற முடியாது எனத் தெளிவானவுடன் வேறு வழியின்றி அமைச்சரவையிலிருந்து வெளியேறியது. மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஹர்சிம்ரத் கவுர், “நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு அதிகாரிகள் உருவாக்கிய இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை அல்ல” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.
அவரது கணவரும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், “இந்த மசோதாக்களைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிவந்தோம். ஆனால், மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை” என்று விமர்சித்துள்ளார். ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியும் மத்திய அரசு மனம் மாறாதது, சிரோமணி அகாலி தளம் கட்சியினரை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஹரியாணாவில் கசப்புணர்வு
இந்த விவகாரத்தின் காரணமாக, ஹரியாணாவின் ஜேஜேபி கட்சிக்குள்ளும் பூசல்கள் எழுந்திருக்கின்றன. செப்டம்பர் 10-ல் குருஷேத்திரம் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். இது அம்மாநில விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “கரோனா பரவல் சமயத்தில் இப்படிக் கூட்டமாகப் போராட்டம் நடத்துவது சரியல்ல” என்று பாஜக தலைவர்கள் சமாளிக்கப் பார்த்தனர். ஆனால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சியினரால் அதை எளிதாகக் கடந்துவர முடியவில்லை.
துணை முதல்வராகப் பதவி வகிக்கும் துஷ்யந்த் சவுதாலா அது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஜேஜேபி கட்சியினர் மத்தியிலேயே அழுத்தம் உருவானது. ஆனால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் துஷ்யந்த் சவுதாலா ஒதுங்கிக்கொண்டது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் பாஜகவுடனான உறவைத் தொடர வேண்டுமா எனும் கேள்விகளும் கட்சிக்குள் எழுந்துள்ளன.
தடியடி சம்பவமே நடக்கவில்லை என்று மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் மறுத்ததைத் தொடர்ந்து ஜேஜேபி கட்சியினர் இன்னும் கோபமடைந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் துஷ்யந்த் சவுதாலா.
கூட்டணி முறியுமா?
இத்தனைக்குப் பிறகும் பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொள்வதில் சிரோமணி அகாலி தளமோ, ஜேஜேபியோ ஆர்வம் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வேளாண் மசோதாக்களால் அதிருப்தியடைந்திருக்கும் சிரோமணி அகாலி தளத்தின் உயர்மட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள், கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், கட்சித் தலைமை பொறுமை காக்கிறது. கட்சியின் உயர்மட்டக் குழு விரைவில் கூடும் என்றும், அப்போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் பக்கம் சாய்வதற்கு சிரோமணி அகாலி தளம் தயாராக இல்லை. இதை வைத்து காங்கிரஸ் ஆதாயமடைவதை ஜேஜேபியும் விரும்பவில்லை. பஞ்சாபில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் சிரோமணி அகாலி தளமும் ஆம் ஆத்மி கட்சியும், இவ்விவகாரத்தில் அம்மாநில காங்கிரஸ் அரசையும் கடுமையாக விமர்சிக்கின்றன. விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் கமிட்டியை (ஏபிஎம்சி) கலைப்பது எனும் வாக்குறுதியைக் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கைகளில் தெரிவித்ததாக அக்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இதை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மறுத்திருக்கிறார். இப்படி மாநில அரசியலில் வெவ்வேறு கோணங்களில் விவகாரங்கள் வெடித்திருக்கின்றன.
ஒருவேளை கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறும்பட்சத்தில், ஜேஜேபி கட்சியின் நகர்வுகளும் கவனிக்கப்படும். 2019 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜக- ஜேஜேபி கூட்டணி அரசு அமைவதற்கு, சிரோமணி அகாலி தளம்தான் முக்கியக் காரணியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பும் இணக்கமும்
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இந்த மசோதாக்களைக் கடுமையாக எதிர்க்கின்றன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் மசோதாக்களை ஆதரிக்கின்றன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா, இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
ஒருபுறம் தனது அதிகாரபூர்வ இதழான சாம்னாவில் இந்த மசோதாக்களை அக்கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்திருக்கிறது. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரண் மஞ்ச், பாரதிய மஸ்தூர் சங்கம் போன்ற அமைப்புகளே இந்த மசோதாக்களை எதிர்க்கின்றன.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த மசோதாக்கள் என்ன விளைவை ஏற்படுத்தும் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக பாஜகவையே அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் இந்த மசோதாக்களை ஆதரிக்கிறது.
மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி முதல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரை பல்வேறு நடவடிக்கைகளை ஆதரித்த வரலாறு கொண்ட பிஜு ஜனதா தளம், வேளாண் மசோதாக்கள் விஷயத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாடும் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. மக்களவையில் இந்த மசோதாக்களை ஆதரித்து பிஜு ஜனதா தளம் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தாலும் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். தனது மிக முக்கியமான வாக்கு வங்கியாக இருக்கும் விவசாயிகளின் ஆதரவை இழக்க நேரும் என்று அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் சற்று தாமதமாக உணர்ந்துகொண்டதாலேயே இந்தத் திடீர் மாற்றம் என்று சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட தமிழகத்தை ஆளும் அதிமுகவிலும் இந்த மசோதாக்களை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற குழப்பம் நீடிக்கிறது. அதனால்தான் முதல்வர் மசோதாக்களை ஆதரிப்பதாக அறிவித்த பிறகும் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மசோதாக்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விலாவாரியாகப் பட்டியல் இட்டிருக்கிறார். எனினும் கட்சித் தலைமையிலிருந்து கட்டளை வந்ததால் மசோதாவை ஆதரித்து வாக்களித்ததாகத் தெரிவித்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தியாவில், விவசாயம் தொடர்பாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் பெரும் அரசியல் விவகாரமாக வெடிப்பதில் ஆச்சரியமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT