Published : 02 Sep 2015 09:16 AM
Last Updated : 02 Sep 2015 09:16 AM
மேடையில் ஏறிய பின் எந்தத் தலைப்பு கொடுத்தாலும், விளாசுவதில் அண்ணா வல்லவர். அந்தக் கணத்தில் புத்தியில் எது வந்து விழுகிறதோ அது வாயில் பேச்சாக மாறும். கரைகள் தொட பாயும் வெள்ளம் அவர் பேச்சு. ஜீவாவும் அப்படி ஓர் அற்புதமான பேச்சுக் கலைஞர். அவர் பேச்சு ஒரு காட்டாறு. சாதுர்யப் பேச்சையே சரளமாக்கிக்கொண்டவர் கருணாநிதி. இது எழுதிக்கொடுப்பதைப் பேசும் கிளித்தலைவர்களின் காலம். எல்லோருக்குமே தயாரிக்கப்பட்ட உரைகள்தான் மூலதனம் என்றாகிவிட்ட சூழலில், பேச்சில் உயிரைக் கொண்டுவர குரல் கலை தேவைப்படுகிறது. நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அதில் தேர்ந்தவர். அவர் செங்கோட்டையில் நின்று சுதந்திர தின உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் முறுக்கேறுகின்றன. வெளிநாடுகளில் நின்று முதலீட்டு ஈர்ப்பு உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் பெட்டியைத் தேடுகின்றன. சமீபத்திய ‘மன் கீ பாத்’ வானொலி உரையும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டுவரும் முடிவை அரசு ஏன் கைவிடுகிறது என்று இந்நாட்டு விவசாயிகளுக்காக அவர் வாசித்த துயர்மிகு உரையைக் கேட்டபோது, கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
வெளிப்புறத் தோற்றம் எந்தளவுக்கு உண்மை?
மோடி முகாரியில் பாடுகிறார். பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று வெற்றிக் குரல் எழுப்புகின்றன எதிர்க் கட்சிகள். அரசின் முடிவு தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை உருவாக்கும் என்று பேசுகின்றன பெருநிறுவனங்களாதரவு ஊடகங்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?
மோடி அரசுக்கு மக்களவைப் பெரும்பான்மையைத் தாண்டி மாநிலங்களவைப் பெரும்பான்மையும் தேவைப்படுகிறது. அதற்கு மகாராஷ்டிரம், பிஹார், உத்தரப் பிரதேசம் எனத் தொடர்ந்து வரும் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதற்கு வெற்றி தேவைப்படுகிறது. அரசாங்கம் நிலத்தைக் கையில் எடுத்ததுப் பெரும் எதிர்ப்பை உருவாக்கிவிட்ட நிலையில், தேர்தல்களுக்கு அஞ்சி பின்வாங்குகிறது. தவிர, முந்தைய சட்டத்திலுள்ள ‘சில ஓட்டைகள்’ சமீபத்திய மறுவாசிப்பில் கண்டறியப்பட்டிருக்கின்றன. இந்த ஓட்டைகளைக் கொண்டே பல காரியங்களைத் தள்ளலாம். இந்தப் பின்னணியில்தான் அரசு பின்வாங்கியிருக்கிறது என்பது பொதுவான புரிதல்.
பின்வாங்கல் சரி; ஆனால், இது ஒதுங்கலா? வாய்ப்பே இல்லை. ஏனென்றால், பெருநிறுவனங்கள் லாபி மூன்று சட்டங்களில் ‘சீர்திருத்தம்’ வேண்டும் என்று மோடி அரசிடம் உடனடியாக எதிர்பார்க்கிறது. 1. நிலம் கையகப்படுத்தல் சட்டம், 2. தொழிலாளர் சட்டம், 3. பொதுச் சரக்குச் சேவை வரிச் சட்டம். இவை மூன்றையும் மோடி அரசால் முழுமையாகக் கைவிடவே முடியாது.
அரசின் இரு வியூகங்கள்
1. பொதுவில் பேசப்படுவதைப் போல, மோடி மாநிலத் தேர்தல்களைக் குறிவைப்பது வெறுமனே அந்த வெற்றியினூடே கிடைக்கும் மாநிலங்களவை இடங்களுக்காக மட்டும் அல்ல. நினைக்கும் எதையும் நடத்தி முடிக்கும் ஆகப் பெரும்பான்மை அதிகாரத்துக்காகவும். முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, இப்போது நாட்டின் 29 மாநிலங்களில், 12 மாநிலங்கள் மூன்றில் ஒரு பகுதி (34.8%) இந்தியா பாஜக கூட்டணி கையில் இருக்கிறது. அடுத்து வரும் பிஹார், மேற்கு வங்கம், அசாம், உத்தரப் பிரதேச தேர்தல்கள் மேலும் ஒரு பகுதி (32.95%) இந்தியாவுக்கானது. இந்தத் தேர்தல்களின் வெற்றிகள் மக்களவை, மாநிலங்களவைப் பெரும்பான்மையைத் தாண்டி, நாட்டின் ஆகப் பெரும்பாலான பகுதியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மோடி கையில் குவிக்க வல்லவை. இந்த வியூகத்துக்கு இந்தப் பின்வாங்கல் அவசியமானது.
2. நிலம் கையகப்படுத்தலை மாநிலங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளும் அர்விந்த் பனகாரியாவின் ஆலோசனை. எப்படியும் மாநில அரசுகள் உதவி இல்லாமல், நிலம் கையகப்படுத்தலை மேற்கொள்ள முடியாது. பொறுப்பை அவர்களிடமே நேரடியாகக் கையளித்துவிட்டால் என்ன? அதாவது, மத்தியில் இருக்கும் பாஜக கூட்டணி, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கைவிட்டுவிடும்; மாறாக, மாநிலங்களில் இருக்கும் பாஜக கூட்டணி / அதே போன்ற நிலைப்பாடு கொண்ட அரசுகள் மூலம் நிலம் கையகப்படுத்தலை மேற்கொள்ளலாம். இன்னும் வேகமாக.
முன்பைவிடவும் ஆபத்து - ஆந்திரம் ஓர் உதாரணம்
பொதுவாகவே, இப்படியான விஷயங்களில் நம்முடைய மாநில அரசுகளுக்கென்று தனிப் பொருளாதாரக் கொள்கைகள் என்று ஏதும் கிடையாது. பெருநிறுவனங்களோடு கைகோப்பதில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கொள்கையளவில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன? மேலும், அதிரடியாக இறங்குவதில் மாநில அரசுகள் மத்திய அரசைக் காட்டிலும் வேகமானவை; எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவை. ஆந்திர உதாரணம் இதை நிரூபிக்கிறது. ஆந்திரத்தின் புதிய தலைநகரமான ‘அமராவதி’யை 54,000 ஏக்கர் நிலத்தில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கும் சந்திரபாபு நாயுடு அரசு, விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்குவதில் இப்போது புதிய வழியைக் காட்டியிருக்கிறது. பணத்தாசையைக் காட்டி நிலத்தைப் பறிப்பது.
ஆந்திர அரசு புதிய தலைநகரத்துக்காகத் திட்டமிட்டிருக்கும் பிராந்தியத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் செழிப்பானவை; கிருஷ்ணா, கோதாவரியால் வளம் பெறுபவை. தன் வசமுள்ள 20,000 ஏக்கர் போக, மீதமுள்ள 34,000 ஏக்கருக்காகப் பல கிராமங்களைக் கபளீகரிக்கிறது ஆந்திர அரசு. இதற்காக அது முன்வைக்கும், ‘நிலம் ஒருங்கிணைத்தல் திட்ட’ப்படி, ஒரு ஏக்கர் நிலம் தரும் ஒரு விவசாயியிக்கு, தலைநகரம் அமைக்கப்பட்ட பின் 1,000 சதுர கஜம் குடியிருப்பு மனை, 200 - 450 சதுர கஜம் வணிக மனை வழங்கப்படும்; மாதம் ரூ. 2,500 - 4,166 வழங்கப்படும். இன்னும் ரூ. 1.5 லட்சம் விவசாயக் கடன் தள்ளுபடி; வேலையுறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு என்று கவர்ச்சிகர அறிவிப்புகள் மூலம் நிலங்களைப் பெற்றிருக்கிறது அரசு.
2015 ஜனவரி 2 அன்று ‘நிலம் ஒருங்கிணைத்தல் திட்ட’த்தை ஆந்திர அரசு அறிவித்தது; பிப்.28 அன்று, அதாவது அடுத்த 58 நாட்களுக்குள் 33,000 ஏக்கர் நிலம் அரசின் கைகளுக்கு வந்துவிட்டது என்று சொல்கிறார் ஆந்திர நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் பி.நாராயணா. “அரசு கேட்கும்போது எதிர்த்து எப்படி நிற்க முடியும்? கிருஷ்ணா நதிப் படுகை கிராமங்கள் இதெல்லாம். பத்தடி ஆழத்தில் தண்ணீர் பெருகும் நிலம். 28 கிராமங்கள் கதை முடிந்துபோயிற்று. இதோடு முடியவில்லை. தலைநகரம் உருவான பிறகு, ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் எல்லா கிராமங்களையும் வளைத்துவிடுவார்கள். அவ்வளவுதான்” என்கிறார்கள் ஆந்திர விவசாயிகள்.
காலனியாதிக்க அரசாங்கங்களைப் போல, அரசின் நிர்வாகத் தலைநகரம் என்ற பெயரில் ஏன் எல்லாத் துறைகளுக்கான தலைமைய கங்களையும் அதிகாரங்களையும் ஒரே இடத்தில் குவிக்கத் திட்டமிட வேண்டும்? அப்படியே மையத் தலைநகரமாக அமைக்கப்பட்டாலும் ஏன் 54,000 ஏக்கர் அளவுக்கு விரிவான பரப்பில் திட்டமிட வேண்டும்? இப்படிப்பட்ட திட்டங்களுக்கு ஏன் விவசாயம் செழிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? இப்படியான விரிவான நகரம் மேலும் மேலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சூறையாடி விரிந்துகொண்டே செல்லுமே, விவசாயம் என்னவாகும்? யாராலும் கேட்க முடியவில்லை ஆந்திர அரசை. இப்போது பெருநிறுவனங்கள் சந்திரபாபு நாயுடு முன்னுதாரணத்தைத்தான் கவனிக்கச் சொல்கின்றன மோடியை.
பல்லாயிரமாண்டு நிலவுடைமையாதிக்க நாட்டில், நிலம் என்பது எவ்வளவு பெரிய அதிகாரம் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆகையால்தான் நம் தலைக்கு மேலே இப்போது வானத்தில் அவர்கள் வட்டமிடுகிறார்கள்.
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT