Published : 19 Sep 2020 08:27 AM
Last Updated : 19 Sep 2020 08:27 AM
கி.ரா.வுக்கு 98-வது பிறந்த நாள் கொண்டாட்டம். அதையொட்டி கண்மணி குணசேகரனுக்கு கி.ரா.வின் பெயரில் விருது வழங்கி கௌரவித்தது ‘விஜயா’ பதிப்பகம். வாழ்த்துரையாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர். கி.ரா, கண்மணி குணசேகரன் இருவரது அகராதிப் பணிகளின் முக்கியத்துவத்தையும் விளக்கிப் பேசிய நாஞ்சில் நாடன், வட்டார வழக்கு என்று வரையறுக்கும் அதிகாரத்தைக் குறித்து எழுப்பிய கேள்வி முக்கியமானது. தனது உரையில், சில ஆண்டுகளுக்கு முந்தைய மேடைப் பேச்சு ஒன்றையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார் இப்படி:
“திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப் பேசினேன், ‘புதுமைப்பித்தன் குறித்துப் பேசுகிறீர்கள். திருநெல்வேலியில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லையா? எந்தப் பேருந்து நிலையம், சந்திக்குச் சென்றாலும் எவனாவது ஒருவன் கையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான். அவர்கள் செய்ததைவிட குறைவான பணிகளையா புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்’ என்றேன்.”
கி.ரா.வின் பிறந்த நாள் செப்டம்பர் 16 அன்று. அதற்கு முதல் நாள்தான் அண்ணாவின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் அண்ணாவும் அம்பேத்கரும் எம்ஜிஆரும் கையைத் தூக்கியபடி நிற்கிறார்கள். நிச்சயமாக இவர்களில் யாரோ ஒருவரை அல்லது எல்லோரையுமே சேர்த்துத்தான் அவர் தமது பேச்சில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்கள் மேடையேறிவிட்டாலே உணர்ச்சிவயமாகிவிடுவார்கள் என்பதையெல்லாம் ஜெயகாந்தன் காலத்திலிருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி நெல்லையிலும் நடந்திருக்கலாம். ஆனால், அதை மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைவுகூர்ந்து பேசும்போது முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் அவ்வாறு அவர் தொடர்ந்து பேசிவருகிறார் என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
புதுமைப்பித்தனின் இலக்கிய, இதழியல் பங்களிப்புகள் போற்றப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவருக்கு திருநெல்வேலியின் மையமான ஓரிடத்தில் சிலை நிறுவப்பட வேண்டும். திருநெல்வேலியில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சிலை வைக்கத் தகுதியான பேராளுமைதான் அவர். ஆனால், அண்ணாவும் அம்பேத்கரும் எம்ஜிஆரும் இந்தச் சமூகத்துக்குச் செய்திருக்கும் அரசியல் பங்களிப்புகள் இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தரம் நிர்ணயிக்கக்கூடியவை அல்ல என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அண்ணாவின் அறிவாளுமையை எந்த விதத்தில் நாம் குறைத்து மதிப்பிட முடியும்? குறிப்பாக அவருடைய கூட்டாட்சி சிந்தனை மட்டுமே இந்திய அளவில் கூட்டாட்சியின் வலுவான முன்னோடிகளில் ஒருவராக அவரை நிறுவிவிடும். நவீன இலக்கியவாதி என்றபோதும் சங்க இலக்கியத்தின் நயங்களைப் பாராட்டுவதை தனது வழக்கமாகக் கொண்டிருப்பவர் நாஞ்சில் நாடன். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்திருந்த தமிழ் வாசிப்பை சங்க இலக்கியங்களை நோக்கி மடைமாற்றியவர் அண்ணா என்பது அவருக்குத் தெரியாததா என்ன?
எம்ஜிஆரையும்கூட ஒரு நடிகராகவும் தமிழறியாதவராகவும் மதிப்பிடும் போக்கு இன்றைய எழுத்தாளர்களிடம் நிலவுகிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது மட்டுமே நினைவில் கொள்ளப்படுகிறது. அவரது ஆட்சிக் காலத்தில்தான் பெரியாருக்கு மட்டுமின்றி பாரதிக்கும் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சுத்தானந்த பாரதியார் போன்ற தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்பட்டது. அவரது ஆட்சியில்தான் மாவட்டந்தோறும் நூலகத் துறைக்குத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். நூலகத் துறை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் அளிக்கப்பட்டன. தவிர, தமிழக அரசின் அனைத்து ஆணைகள், கடிதங்கள், செய்திக் குறிப்புகளிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிடும் முறையையும் அவரே அறிமுகப்படுத்தினார். எம்ஜிஆரை எழுத்தாளர் இல்லையென்று சொல்லலாம்; தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கினையும் வரலாறு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
அண்ணா, எம்ஜிஆர் தவிர சிலைகளில் கை நீட்டியவண்ணம் இருக்கும் மற்றொரு தலைவர் அம்பேத்கர்தான். அம்பேத்கரின் ஆளுமை இன்றைக்கு இந்தியாவைத் தாண்டியது. அரசியலராக மட்டும் அல்ல; ஓர் அறிஞராகவும் அவருடைய உயரம் எவ்வளவு! எல்லாவற்றுக்கும் மேல் மூவருமே இன்றைக்கும் ஒரு பெருந்திரள் மக்கள் தங்களுடைய குரலாக எண்ணும் பெரும் மக்கள் தலைவர்கள். அவர்கள் மீது ஏன் இந்தக் காழ்ப்பு? ‘சிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என வாழ்பவர் நாஞ்சில் நாடன். அவருக்கு சாதியம்சார் மதிப்பீடுகள் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால், தன்னையோ தன் துறையையோ மேலாகவும், ஏனையோரைக் கீழாகவும் பார்க்கும் மனோபாவத்தை எப்படிப் பார்ப்பது? இலக்கிய ஆளுமைகளின் மீதான மதிப்பு, அரசியலர்களின் மீதான இழிவாகவும் வெறுப்பாகவும் வெளிப்படுவதை எந்த வகையில் எடுத்துக்கொள்வது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT