Published : 29 Sep 2015 10:36 AM
Last Updated : 29 Sep 2015 10:36 AM

பூமியைக் காப்பாற்றுங்கள்!

உலகின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதில் துருவப்பனி மண்டலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

பூமி என்னவாகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இப்போதே பல சுற்றுச்சூழல் சீர்கேடுகள் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டன. துருவங்களில் உள்ள நிரந்தர உறைபனிப்பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு, தண்ணீர் அவற்றின் வழியாகக் கீழே இறங்கித் தரையை அடைகிறது. அதன் காரணமாகத் தரையில் நங்கூரமிட்டதைப் போல அமர்ந்திருந்த பனிப்பாறைகள் மிதக்கத் தொடங்கி, கடலை நோக்கி நகர்கின்றன. வாயு மண்டலத்தின் வெப்பநிலை உயர்ந்துவருவதால் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கிவிட்டன. உலகின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதில் துருவப்பனி மண்டலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன. வெள்ளை நிறப்பனி மண்டலங்கள் சூரியனின் வெப்பக்கதிர்களைப் பிரதிபலித்து விண்வெளிக்கு அனுப்பிவருகின்றன. பனிப்பரப்பு குறைந்து கடல்பரப்பு அதிகமாவதால் இவ்விதமாகத் திருப்பியனுப்பப்பட வேண்டிய வெப்பம் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகிறது. இதனால் வளிமண்டல வெப்பம் உயர்வதும், பனிப்படலங்கள் உருகுவதும் ஒன்றுக்கொன்று காரணகாரியங்களாகி ஒரு ‘சுழல் செயல்பாடாக’அமைகின்றன.

காரண காரியச் சுழல்

துருவப்பனிப் பரப்பினடியில் மீத்தேன் போன்ற ஏராளமான வாயுக்கள் சிக்கியுள்ளன. பனிமலைகள் உருகும்போது அவை வெளிப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கும். இத்தகைய பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் நிறையும்போது அதன் வெப்பநிலை உயர்ந்து, தாவரங்கள் அழிவது அதிகமாகிறது. உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயருமானால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து சிதையும். இதுவும் ஒரு காரண காரியச் சுழலாகும்.

அலாவுதீனின் மந்திர விளக்கைப் பயன்படுத்தி பசுங்குடில் வாயுக்கள் உருவாவதை இந்தக் கணம் முதலே தடுத்துவிட்டாலும்கூட, இக்கணம் வரை கலந்துவிட்ட வாயுக்களின் விளைவாக வளி மண்டல வெப்பநிலை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 2 செல்சியஸ் டிகிரி உயர்ந்தே தீரும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இப்போது சராசரியாக நூறாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வழக்கமுடைய வெள்ளம், வறட்சி போன்றவை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத் தொடங்கும். இப்போதே இங்கிலாந்தின் தென்பகுதியில் வெப்பநிலை உயர்வை உணர்ந்த வனவிலங்குகள் வட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. நிலைமை முற்றினால் வெப்ப மண்டல உயிரினங்களான முதலைகளும் நீர் யானைகளும் துருவப் பகுதிகளுக்கு வசிக்கப் போகலாம்.

பூமத்திய ரேகைப் பகுதியிலுள்ள கடல் நீர் சூடாகி ஆவியாகத் தொடங்கும். தொழில்புரட்சி தொடங்கிய பின் நிலக்கரியும் பெட்ரோலியப் பொருட்களும் அதிக அளவில் எரிக்கப்பட்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேருவது அதிகமாகிவருகிறது. அவற்றில் கிட்டத்தட்ட பாதியளவை மண்ணும் கடலும் தாவரங்களும் உட்கவர்ந்துகொள்கின்றன. ஆனால், வெப்பநிலை அளவுக்கு மீறுமானால் அந்த வாயுக்கள் சில விநாடிகளுக்குள் பீறிட்டெழுந்து வளிமண்டலத்தில் கலந்துவிடும். 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு நிகழ்வு ஏற்பட்டு, பூமியிலிருந்த உயிரினங்களில் பாதிக்குமேல் அழிந்துவிட்டன.

பேரழிவு உண்டாகும்

வளிமண்டல வெப்பநிலை உயர்ந்தால் துருவங்களிலும் இமயமலை, ஆல்ப்ஸ் மலை போன்ற இடங்களிலும் உள்ள பனிக்கட்டிகள் உருகி ஆறுகள் மூலமாகக் கடலை அடையும். கடல் மட்டம் பல மீட்டர்கள் உயர்ந்து பல தீவுகளையும் கடலோர நாடுகளையும் மூழ்கடித்துவிடும். இப்போதே மாலத்தீவுகளின் அரசு மணலையும் கற்களையும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கடற்கரையை உயர்த்திக் கட்டிவருகிறது.

கிரீன்லாந்திலும் தென் துருவத்தின் மேற்குப் பகுதிகளிலும் உள்ள பனிமலைகள் இப்போது கடலடித் தரையைத் தொட்டவாறு அமர்ந்துள்ளன. அவற்றின் நிறையும் பருமனும் மெல்ல மெல்லக் குறைந்துவருகின்றன. அவை பிளந்து சரிந்து விழுமானால், உலகெங்கிலும் பல மீட்டர் உயரத்துக்குச் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவையுண்டாக்கும். துருவங்களிலுள்ள பனிமலைகள் முழுவதும் உருகிவிடுமானால், உலகளாவிய கடல்பரப்பு கிட்டத்தட்ட 5 மீட்டர் வரை உயர்ந்துவிடும்.

பனி உருகிக் கடலில் கலக்கும்போது கடல் நீரின் அமிலத்தன்மை அதிகமாகி சிப்பி, நத்தை போன்ற ஒட்டுண்ணிகளின் ஓடுகள் அரிக்கப்பட்டு அவை அழியும். மீன்களின் முக்கிய உணவான ‘பிளாங்டன்கள்’மறையும். அந்த மீன்களை உண்டு வாழும் திமிங்கிலம், ஸீல், வால்ரஸ் போன்றவை பாதிக்கப்படும்.

வளிமண்டல வெப்பநிலை உயர்ந்தால் கடல்பரப்பில் நீர் சூடாகி வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் பாயும். துருவங்களிலிருந்து குளிர்ந்த நீர் கடலடித் தரைக்கு இறங்கி நிலநடுக்கோட்டை நோக்கி ஓடும். இதன் காரணமாகக் கடல் பரப்புக்கு மேலே வெப்பவாயுச் சலனம் ஏற்பட்டுச் சூறாவளிகளும் சுனாமிகளும் தோன்றும். அவற்றின் விளைவாகப் பூமியின் சுழற்சி வேகம் கூட மட்டுப்படலாம். கோடைக் காலங்களும் குளிர்காலங்களும் நீட்சியடையும். அதன் விளைவாக என்னென்ன தீமைகள் விளையும் என்பதை விஞ்ஞானிகளால்கூட ஊகிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் நடவடிக்கை

மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவைக் குறைப்பது முதல் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுவரை பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

சென்னையில் கார் தொழிற்சாலைகள் அமைந்ததும் நடுத்தர வருமானக்காரர்கள் கூட கார்களை வாங்கி ஓட்டுவதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. நம் நாட்டின் பெருநகரங்கள் எல்லாவற்றிலும் கார்களும் பஸ்களும் லாரிகளும் நீராவி இன்ஜின்களும் கரிமவாயுக்கள் கலந்த புகையை ஏராளமாக வெளிவிடுகின்றன. மேலை நாடுகளில் அனுசரிக்கப்படும் வாகனப் பராமரிப்பு உத்திகள் இந்தியாவில் இன்னமும் முழு அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது இன்ஜின்களை ஓடவிடுவது, திடீர் திடீரென்று வேகத்தைக் கூட்டி சீறிப்பாய்வது போன்றவற்றால் எரிபொருள் வீணாவதுடன் காற்றும் மாசுபடுகிறது. அதைச் சுவாசிக்கிற மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகளும் இதயக் கோளாறுகளும் உண்டாகின்றன.

ஒவ்வொரு தனி மனிதரும் உலகின் சூழலில் தோன்றத் தொடங்கியிருக்கிற சீரழிவைத் தடுத்து நிறுத்தச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மரக்கன்றை நட்டு நீருற்றிப் பராமரிப்பது அவற்றில் ஒன்று. வீட்டில் சேரும் குப்பைகளில் மக்கக் கூடியவற்றைப் பிரித்தெடுத்து உரக் குழிகளில் இட்டுத் தொழு உரமாக மாற்றலாம். கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மறு சுழற்சி செய்கிற அமைப்புகளிடம் சேர்ப்பித்துவிடுவது நல்லது. வீட்டில் சேரும் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தோட்டங்களிலும் கழிப்பறைகளிலும் பயன்படுத்த முடியும். மக்களே, சகாக்களே… ஏதாவது செய்யுங்கள். பூமியைக் காப்பாற்றுங்கள்!

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x