Published : 16 Sep 2020 03:28 PM
Last Updated : 16 Sep 2020 03:28 PM
அரசியல் களத்தில் அன்றாடச் செயல்பாடுகள் மூலம் கவனம் ஈர்ப்பவர்களைவிடவும், பிரளயங்களுக்கு நடுவிலும் அமைதியாக இருக்கும் தலைவர்கள் மீது கவனம் குவிவது இயல்பு. அந்த வகையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் சமீபகாலமாகச் சுரத்தின்றி காணப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
மோடி தலைமையிலான மத்திய அரசையும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசையும் கடுமையாக விமர்சித்து, தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளத் தற்போது அபரிமிதமான வாய்ப்புகள் இருந்தும், அவற்றை அகிலேஷ் தவறவிடுவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2022-ல் நடக்கவிருக்கும் உபி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வலிமையைப் பெறும் முயற்சி அவரிடம் இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
நம்பிக்கை தந்த இளைஞர்
நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றபோது அகிலேஷுக்கு வயது 38 தான். சமாஜ்வாதி கட்சிக்கு நவீன முகம் கொடுக்கும் வகையில் செயல்பட்டதன் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக அவர் கருதப்பட்டார். ஆனாலும், வாரிசு அரசியல் தலைவர்களுக்கே உரிய அழுத்தத்தையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. குடும்பத்துக்குள்ளேயே தந்தை, சித்தப்பாவின் ஆதிக்கம், அகிலேஷின் அரசியல் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது முலாயம் சிங்குக்கும் அகிலேஷுக்கும் இடையிலான மோதல்கள், வாக்காளர்களிடம் சமாஜ்வாதி கட்சி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்தன. பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளர் என யாரும் முன்னிலைப்படுத்தப்படாத சூழலிலும் அக்கட்சியிடம் ஆட்சியை இழந்து நின்றார் அகிலேஷ். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி அந்தத் தேர்தலில் கைகொடுக்கவில்லை என்பதுடன், ‘உத்தர பிரதேசத்தின் பையன்கள்’ என்று அழைக்கப்பட்ட ராகுல் – அகிலேஷ் ஜோடிக்குப் பெருத்த பின்னடைவும் ஏற்பட்டது. அதன் பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியும் அகிலேஷுக்குக் கைகொடுக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் அகிலேஷ் பிடிமானத்தை மெல்ல மெல்ல இழந்துவருவதாகக் கருதப்படுகிறது.
அணைந்துவரும் நெருப்பு
2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில், சுரங்க ஊழல் தொடர்பாக முந்தைய சுரங்கத் துறை அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை தொடங்கியபோது அகிலேஷ் யாதவ் கொந்தளித்தார். நிலக்கரித் துறை அகிலேஷ் வசம் இருந்தது எனும் முறையில் அவர் மீதும் விசாரணை நடத்தப்படும் சூழலும் உருவானது. அப்போதே அகிலேஷ் மீது அழுத்தங்கள் உருவாகின. ஆனால், தனது எதிர்ப்பை அவர் அழுத்தமாகப் பதிவுசெய்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், என்.ஆர்.சி-க்கும் எதிராக 2019 இறுதியிலும், 2020 தொடக்கத்திலும் நடந்த போராட்டங்களில் அகிலேஷ் கலந்துகொண்டு பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார். அதுதான், கள அரசியலில் அவரது கடைசி சண்டமாருதம். அதன் பின்னர் நேரடி அரசியல் களத்தில் அகிலேஷை அதிகம் காண முடியவில்லை.
2020 பிப்ரவரியில், “சமாஜ்வாதத்தை விட (சோஷலிஸம்) ராமராஜ்ஜியம்தான் நாட்டுக்குத் தேவை” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதை விமர்சித்த அகிலேஷ், “இது அரசமைப்புச் சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது. யோகி ஆதித்யநாத் ஏழைகளின் பக்கம் அல்ல; பணக்கார முதலாளிகள் பக்கம் நிற்கிறார்” என்று விமர்சித்தார்.
எனினும், என்கவுன்ட்டர்கள், துப்பாக்கிக் கலாச்சாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு விஷயங்களில் யோகி ஆதித்யநாத்தின் அரசை விமர்சிப்பதில் அகிலேஷ் யாதவின் குரலில் போதிய அழுத்தம் இல்லை. 2020 பிப்ரவரியில் உத்தர பிரதேசத்துக்குப் பிரதமர் மோடி வருகை தந்தபோது சமாஜ்வாதி கட்சித் தொண்டர் ஒருவர் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அகிலேஷை போனில் தொடர்புகொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், இனிமேல் இப்படியான சம்பவங்களில் சமாஜ்வாதி தொண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் என்றே ஆற்றல் மிக்க இளம் தலைவர்கள் பார்ப்பார்கள். ஆனால், அகிலேஷ் ஏனோ அடக்கியே வாசிக்கிறார்.
களையிழந்த கள அரசியல்
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட விதம், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த சிரமங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாவது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள். ஆனால், அகிலேஷிடமிருந்து ஆக்ரோஷமான அரசியல் வெளிப்பாட்டைப் பார்க்க முடியவில்லை. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை முதல், பெருந்தொற்று சமயத்தில் நீட் – ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி போன்ற விவகாரங்களை மிகப் பெரிய அரசியல் அஸ்திரங்களாகப் பயன்படுத்தும் ஆர்வமும் அகிலேஷிடம் இல்லை.
இத்தனைக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவிக்க அகிலேஷ் தவறவில்லைதான். நீட் தேர்வு அழுத்தத்தின் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைப் பற்றி ட்வீட் செய்த அகிலேஷ், “இது ஒரு கொலை” என்றே குறிப்பிட்டார். கட்சியினரை உற்சாகப்படுத்த இணைய வழிக் கூட்டங்களை நடத்துவது, கட்சிப் பொறுப்புகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களிலும் அகிலேஷ் கவனம் செலுத்துகிறார்தான். ஆனால், இதெல்லாம் நிச்சயம் போதாது.
பெருந்தொற்று சமயம்தான் என்றாலும், இப்படி சமூக வலைதளங்களுடனேயே தனது அரசியல் களத்தைக் குறுக்கிக்கொள்வது ஓர் இளம் தலைவருக்கு அழகல்ல என்பதே விமர்சகர்களின் கருத்து.
பிற பிரச்சினைகள்
உத்தரப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைப் பொறுத்தவரை யாதவ் சமூகத்தினர் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சமாஜ்வாதி கட்சிக்கான ஆதரவுத் தளத்தில் இந்தச் சமூகத்தினருக்கு முக்கியப் பங்கு உண்டு. இதனால் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் யாதவ் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கே கிடைத்தன. 2022 தேர்தலில் யாதவ் அல்லாத பிற சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வது அகிலேஷுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே, “ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்” என்று சமாஜ்வாதி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் லாதன் ராம் நிஷாத் பேசியது அகிலேஷுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியது. முன்னேறிய வகுப்பினரைக் கவரும் நோக்கில், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படும் பரசுராமருக்குப் பிரம்மாண்டமான சிலையை அமைக்கப்போவதாக சமாஜ்வாதி கட்சி கூறிவரும் நிலையில், லாதன் ராம் நிஷாதின் இந்தப் பேச்சு பாஜகவினரை உற்சாகம் கொள்ளச் செய்தது. பாஜகவினரின் தொடர் விமர்சனங்களையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து லாதன் ராம் நிஷாதை நீக்க வேண்டிவந்தது. கட்சியில் யாதவ் சமூகத்தினரே முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதும், பிற சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்குப் பெரிய அளவில் பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் அகிலேஷ் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சினை.
தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா?
மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட முலாயம் சிங், துணிச்சலுக்குப் பெயர் போனவர். 1960-களில் ராம் மனோகர் லோகியாவின் நம்பிக்கை பெற்ற இளம் தலைவராக உருவானவர் முலாயம் சிங். 1967 தேர்தலில் லோகியாவின் ஆசியுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலில் எம்எல்ஏ ஆனவர். முன்னாள் பிரதமரும் ஜனதாவின் முக்கியத் தலைவருமான சரண் சிங்கின் அன்பையும் பெற்றார்.
அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் சவாலில் சரண் சிங்கின் மகன் அஜித் சிங்கை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், சமரசமின்றி செயல்பட்டார். 1989-ல் உத்தரப் பிரதேச முதல்வர் பதவியைப் பிடிக்க அவர் பல்வேறு சவால்களைக் கடந்து வர வேண்டியிருந்தது.
அதேபோல், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் மிசாவில் கைதுசெய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வெளிவந்தவுடன் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். இந்த அனுபவங்களைத் தன்னைச் செதுக்குவதற்கான கருவிகளைக் கையாண்டு உத்தரப் பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் முக்கியமான ஆளுமையாக உயர்ந்தார். யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும், முஸ்லிம்களையும் இணைத்து வாக்கு வங்கியை உருவாக்கினார்.
அப்படிப்பட்ட தலைவரின் மகனான அகிலேஷ் யாதவும் தன்னளவில் துணிச்சலாகச் செயல்பட்டவர்தான். தனது சித்தப்பா ஷிவ்பால் சிங் மூலம் கட்சிக்குள் பிரச்சினைகள் எழுந்தபோது அதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார் அகிலேஷ். 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தந்தை – சித்தப்பாவின் விருப்பத்துக்கு எதிராக, வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து அதிரடி காட்டினார். அந்தத் தேர்தலில் தோல்வி கிடைத்தாலும், அரசியல் சமரில் சமரசங்களுக்கு இடமில்லை எனும் அகிலேஷ் உறுதியாக வெளிப்படுத்தினார்.
அதுபோன்ற ஒரு துணிச்சலை மீண்டும் அகிலேஷ் வெளிப்படுத்துவதைப் பொறுத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT