Last Updated : 15 Sep, 2020 07:47 AM

20  

Published : 15 Sep 2020 07:47 AM
Last Updated : 15 Sep 2020 07:47 AM

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா சூர்யாவின் அறிக்கை?

ஒவ்வொரு முறை மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) நெருங்கும்போதும் தமிழ்நாட்டில் கொதிநிலை உருவாகிறது. அத்தேர்வு தொடர்பான விமர்சனங்களும் விவாதங்களும் உச்சம் தொடுகின்றன. இத்தேர்வைத் தொடர்ந்து எதிர்த்துக் குரல் எழுப்பிவருபவர்களில் ஒருவரான திரை நட்சத்திரமும், சமூகச் செயல்பாட்டாளருமான சூர்யா விடுத்த சமீபத்திய அறிக்கை சமூக வலைதளங்களில் இப்போது பற்றிக்கொண்டு எரிகிறது. இத்தேர்வு ஏற்படுத்திய மன அழுத்தத்தின் விளைவாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டில் லட்சோப லட்ச மக்களைக் கடுமையான துயரத்தில் தள்ளியதைப் போலவே சூர்யாவையும் பாதித்திருப்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. கூடவே, தனது வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில், நீதிமன்றங்கள் தற்போது செயல்படும் விதம் குறித்து சூர்யா வெளியிட்டிருந்த கருத்து இன்னொரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது; ‘நீட் தேர்வு’க்கு எதிராக ஒரு சமூகமாக ஒன்றிணைந்து நாம் குரல் எழுப்புவோம் என்று அறைகூவல் விடுத்த சூர்யா நீதிமன்றங்கள் செயல்பாடு தொடர்பில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.”

தொலைக்காட்சியில் சூர்யாவின் அறிக்கையைப் பார்த்து அறிந்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உடனடியாகத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அறிக்கையில் உள்ள, ‘உயிருக்குப் பயந்து’ எனும் இரு வார்த்தைகள் நீதிபதிகளின் நேர்மையையும் ஈடுபாட்டையும் புறந்தள்ளுவதாகவும், தவறான கோணத்தை அளிப்பதால் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஆபத்து இருப்பதாகவும், ஆகையால் சூர்யா மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யாவை அர்த்தப்படுத்தல்

கொள்ளைநோய் காரணமாக நீட் தேர்வை இந்தாண்டு தள்ளிப்போட வேண்டும் என்று ஐந்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தன. இந்த மனுக்களை விசாரணை ஏதுமின்றி நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர். தமிழக அரசும் தேர்வுகளைத் தள்ளிப்போட வேண்டும் என்று கோரியது. ஆனாலும், ஒன்றிய அரசு விடாப்பிடியாகத் தேர்வுகளை நடத்தித்தான் தீருவது என்று நடத்தியது. கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்களின் உடல்நலன் தொடர்பிலான கவலை மக்களைச் சூழ்ந்தது. நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் பொருட்டு ‘அகரம் அறக்கட்டளை’ எனும் அமைப்பையே நடத்திவரும் சூர்யாவையும் அந்தக் கவலை சூழ்ந்தது இயல்பானது. இந்தப் பின்னணியிலிருந்தே அவருடைய அறிக்கையில் இடம்பெறும் வாசகங்களை அணுக வேண்டியிருக்கிறது.

நீதிமன்றங்களே காணொளி மூலம் விசாரணைகளை நடத்தும் சூழலில், இத்தேர்வின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான இளம் மாணவர்கள் தொற்றுநோய் அபாயத்துக்குள் சிக்குவதைக் குறிப்பிடும் வகையிலேயே சூர்யா தன் அறிக்கையில் நீதிமன்றத்தை உதாரணப்படுத்துகிறார். ‘உயிருக்குப் பயந்து’ எனும் இரு வார்த்தைகள் உண்மையில் இங்கே நீதிபதிகளைக் குறிப்பிடுபவையாக அல்ல; மாறாக, நீதிமன்றச் சூழலையே குறிப்பிடுவதாக அமைகிறது.

நீதிமன்றம் என்று குறிப்பிடப்படும்போது, அதில் செயல்படும் ஊழியர்கள், வாதாடும் வழக்கறிஞர்கள், வழக்குக்காக வந்து செல்லும் வழக்காடிகள் இவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கருதித்தான் நீதிமன்றங்கள் சில காலம் மூடப்பட்டிருந்ததுடன், பின்னர் நேரடி விசாரணைக்கு மாற்றாகக் காணொளி விசாரணை முறைக்கு மாறின என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கரோனாவுக்குப் பிறகான கடந்த ஐந்து மாதங்களில் ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான நீதிமன்ற ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்; கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்; சில வழக்கறிஞர்கள் உயிரிழந்ததுடன், பலரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆக, இவ்வளவு பேர் உயிர் பாதுகாப்பையும் எண்ணித்தான் நீதிமன்றங்கள் புதிய செயல்பாட்டு முறையைத் தீர்மானித்தன.

இப்படி முடிவெடுக்கும்போது தலைமை நீதிபதி பல மட்டங்களில் கலந்தாலோசனை நடத்தி, இதர நீதிபதிகளின் ஒப்புதலுடனேயே பல முடிவுகளையும் எடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தையே எடுத்துக்கொண்டால் இதுவரை தலைமைப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து மட்டும் 45-க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் செயல்படுவதற்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதைப் பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. யாரேனும் ஒரு தொற்றுக்குள்ளான வழக்காடி நீதிமன்ற வளாகத்தில் நடமாடினால் அதன் நிமித்தம் எவ்வளவு பேருக்குத் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது என்பது தொடங்கி நேரடி விசாரணைக்கு வழக்காடிகள் வருவது என்றால், அவர்கள் பயணிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் வரை பல பிரச்சினைகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உயிர் மீதுமான அக்கறை

ஆக, ஒவ்வொரு உயிர் மீதும் இவ்வளவு அக்கறை கொண்டு நீதிமன்றங்கள் செயல்படுவது தொடர்பில் யோசித்து முடிவெடுத்த நீதிமன்றம், தேர்வுகள் - மாணவர்கள் விஷயத்தில் மட்டும் இப்படி முடிவெடுக்கலாமா; பல லட்சம் மாணவர்களும் பெற்றோர்களும் இதன் நிமித்தம் உயிர் அச்சத்துக்கு ஆளாக மாட்டார்களா என்பதையே சூர்யாவின் அந்த இரு வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. இதில் நீதிபதிகளையோ நீதிமன்றத்தையோ அவதூறுக்குள்ளாவது எங்கே வந்தது?

இந்நாட்டில் நீதிபதிகளும்கூட நீதிமன்றங்கள் செயல்பாட்டில் காட்டிய அதே அக்கறையை மாணவர்களுக்குக் காட்டத் தவறிவிட்டனரே என்று ஒரு குடிநபர் ஆதங்கப்படுவதானது, உண்மையில் இந்நாட்டு மக்கள் நீதிமன்றத்தையே தங்கள் கடைசி நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது; அது நீதிமன்றத்துக்குப் பெருமைதான். இந்த ஆதங்கத்தை நீதிபதி சுப்ரமணியம் புரிந்துகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.

என்னவாகும் விவகாரம்?

தார்மீக நோக்கில், நீதிமன்றங்கள் மீதான விமர்சனமேயானாலும், இது எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாது என்பது வெளிப்படை. மேலதிகம் சட்ட நோக்கில் இதில் வேறு ஒரு பிரச்சினையும் இருக்கிறது. ‘நீட் தேர்வு’ தொடர்பிலான வழக்குகள், சீராய்வு மனுக்களில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆகையால், சூர்யாவின் அறிக்கை நீதிமன்றம் மீதான அவதூறு என்று எடுத்துக்கொண்டாலுமேகூட அது உச்ச நீதிமன்றத்தோடு தொடர்புடையது. ஆக, இந்த விஷயத்தில் அவதூறு நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உள்ளது. உயர் நீதிமன்றங்கள் விரும்பினாலும் அரசமைப்புச் சட்டம் 215-வது பிரிவின் கீழ் தங்களது சிறப்பு நடவடிக்கையாகத் தங்களது நீதிமன்றங்களின் மீது சுமத்தப்படும் அவதூறுகளைத்தான் விசாரிக்க முடியுமே ஒழிய உச்ச நீதிமன்ற வரையறைக்குள் வரும் அவதூறுகளை விசாரிக்க முடியாது என்பதை விதூஷா ஓபராய் 2017 வழக்கு திட்டவட்டமாக்குகிறது.

ஆக, இந்த விவகாரம் என்னவாகும்? சூர்யாவின் அறிக்கை ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு; அதனால், நீதிமன்றத்தின் கௌரவம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று கருதப்படும் வாய்ப்புகளே அதிகம். தலைமை நீதிபதி சரியான முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x