Published : 03 Sep 2020 08:29 AM
Last Updated : 03 Sep 2020 08:29 AM
காஷ்மீரின் உரிமைகளை மீட்டெடுக்கும் குரலோடு, அதன் முக்கியமான ஆறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா. கசப்பான இறந்த காலம் - கடினமான எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் இருப்பதாகக் கருதும் அவர், தன்னுடைய எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
1953, ஆகஸ்ட் 9 – 2019, ஆகஸ்ட் 5 இரண்டும் ஜம்மு - காஷ்மீரின் விதியை மறுவரையறுத்த இரு நாட்கள். இரண்டுக்கும் ஒப்புமை ஏதாவது உண்டா?
மாநிலத்தின் தன்னாட்சிக்கு விழுந்த முதல் இடி என்று 1953, ஆகஸ்ட் 9 சம்பவங்களைச் சொல்லலாம். கலகம் ஒன்று நடைபெறுவதற்கான திட்டமிருப்பதாகவும் அதற்காகச் சிலர் முயன்றுவருவதாகவும் கல்லூரியில்கூட வதந்திகள் இருந்தன. அந்தக் கலகமும் நடந்தேறியது. காஷ்மீரில் சர்வாதிகார மன்னராட்சியை எதிர்த்து நாங்கள் போராடியபோது, நல்ல நண்பராக எங்களுடன் நின்றவர் இந்தியாவின் பிரதமராக என் தந்தைக்குத் துரோகம் இழைத்தார்; நேருவைத்தான் குறிப்பிடுகிறேன். எனது தந்தை கைதுசெய்யப்பட்டு, உத்தம்பூர் மாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எமது பிரதம மந்திரிகளும் முதலமைச்சர்களும் மக்களுக்குத் துரோகம் இழைத்திருக்கின்றனர். 370-வது சட்டப் பிரிவு அரித்தழிக்கப்பட்டதும் எமது மக்களாலேயே நிகழ்த்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் டெல்லி இருந்தது. ஆனால், அவர்கள் அதை நிறைவேற்றுவதற்கான கருவிகளாகக் காஷ்மீரிகளான நாங்களே இருந்தோம்.
ஆக, கடந்த கால வரலாற்றோடு ஒப்பிடுகையில், 2019 ஆகஸ்ட் 5 சம்பவங்களில் ஒரு வேறுபாடு என்னவென்றால், இந்த முறை எங்கள் மக்களுக்குத் துரோகம் இழைக்க எங்களில் ஒருவரையே கண்டுபிடிக்க டெல்லியில் உள்ளவர்களால் முடியவில்லை. உள்ளபடி, மக்கள் ஜனநாயகக் கட்சியினரை இதற்குப் பயன்படுத்த அவர்கள் முயன்றார்கள்; ஆனால், அது பலிக்கவில்லை. அதனால்தான், அந்தக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இன்று அவர்களிடம் அவதிப்படுகிறார். சட்டமன்றத்தின் ஆதரவோ, முதலமைச்சரின் ஆதரவோ கிடைக்காது என்று அறிந்துகொண்டதன் விளைவாகவே, நாடாளுமன்றத்துக்கு இதை எடுத்துச் சென்று, தங்கள் ஆளுநரை வைத்து ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அகற்றினார்கள். டெல்லியை இன்று நிர்வகிப்பவர்கள் இந்நாட்டின் அரசமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒருநாள் அவர்களுக்கு முழு வாய்ப்புகளும் கிடைக்கும்போது இந்த அரசமைப்பைக் கங்கையிலோ யமுனையிலோ தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் உச்சகட்டத்தில் இருந்த 1996-ல், டெல்லியின் வலியுறுத்தலை அடுத்து, நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வந்தீர்கள். அந்த முடிவுக்காக இன்று நீங்கள் வருந்துகிறீர்களா?
அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் நாங்கள் உத்தரவாதங்களைக் கோரினோம். நாடாளுமன்றத்தில் அவரும் அறிவித்தார். காஷ்மீருக்கான உச்ச தன்னாட்சி எதுவோ, அதை அளிக்க விரும்புவதாக அறிவித்தார். அப்படியான தன்னாட்சிக்கு வானமே எல்லை என்றும் கூறினார். ஆனால், காஷ்மீருக்கு விடுதலை அளிக்க முடியாது என்றும் கூறினார். நாங்கள் விடுதலை கேட்கவில்லை; எங்கள் மக்களுக்கான உரிமைகளைத் திரும்பக் கேட்கிறோம் என்று கோரினோம். அவர் வாக்குறுதி அளித்தார். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே நான் தேர்தலில் போட்டியிட்டேன். சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை டெல்லி என்னிடம் தூதராக அனுப்பியபோது, நான் லண்டனில் இருந்தேன். அதற்கு முன்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னைப் பார்க்க வந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் திரும்பி வருவதாகச் சொன்னேன். ஆனால், பிரதமருடன் முதலில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். நாம் பேசுவதை அவர் கேட்க வேண்டும் என்றேன். நானும் எனது மூத்த சகாக்களும் பிரதமரைச் சந்தித்தோம். இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் எல்லோரும் எங்கள் மாநிலத்தில் இருக்கிறோம், அதனாலேயே இந்தியாவை ஷேக் அப்துல்லா தேர்ந்தெடுத்த காரணத்தையும் சொன்னோம். மதச்சார்பற்ற இந்தியாவிலும், காந்தியின் இந்தியாவிலும் ஜம்மு - காஷ்மீர் உயிர்த்துத் தழைக்கும் என்று என்னுடைய தந்தை ஷேக் அப்துல்லா நம்பினார்.
ஆனால், இப்படியான ஒரு பிரதிபலன் இன்று காஷ்மீரிகளுக்குக் கிடைக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்ததில்லை. எங்களது தன்னாட்சி அதிகாரத்தின் அளவை அதிகரிப்பார்கள் என்றுதான் கருதியிருந்தேன். இந்தியாவுக்காகவும் மூவர்ணக் கொடிக்காகவும் எங்கள் மக்கள், எங்கள் அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் இறந்துள்ளனர். 2019, ஆகஸ்ட் 5 சம்பவங்களை அவர்களெல்லாம் கனவிலும் நினைத்திருப்பார்களா? அன்றைக்கு 1996-ல் இங்கே யார் இருந்தார்கள்? பாஜக எங்கே இருந்தது? பகலில் ராணுவமும் இரவில் பிறரும் காஷ்மீரை ஆண்ட காலம் அது.
2019 ஆகஸ்ட் 5 நடவடிக்கையின் தொடர்ச்சியாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்?
ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன். ஏதோ இந்த இடத்தைக் கொள்ளையடித்தவனைப் போல, தீவிரவாதிபோல நடத்தப்பட்டேன்.
நீங்கள் அளித்த முந்தைய நேர்காணல் ஒன்றில், ‘வெளிநாட்டில் இருந்த உங்கள் மகளிடம் பேசுவதற்குக்கூட அதிகாரிகள் பல வாரங்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறியிருந்தீர்கள்…
எனது வாழ்வில் இரண்டு தருணங்கள்தான் மிகவும் சிரமமானவை. எனது சகோதரி சுரையாவுக்குத் திருமணம் நடந்தபோது எனது தந்தை டெல்லியிலிருந்து வந்து பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு பத்திரத்தில் அவரிடம் அவர்கள் அதற்கு முன்னர் கையெழுத்து கோரினார்கள். “உங்கள் பத்திரத்தைப் பற்றி எனக்கென்ன கவலை!” என்று என் தந்தை கூறிவிட்டார். அன்று அழுதேன். இரண்டாவது தருணமென்றால், என்னைத் தடுப்புக் காவலில் பூட்டி கொடூரமான சட்டத்தை என் மேல் ஏவியபோது. எனது மகள் என்னைப் பார்க்க வந்தார். அப்போது அவரை அனுமதிக்கவில்லை. அவர் வாசலிலேயே மயங்கி விழுந்தார். அவரைச் சில நாட்கள் மருத்துவர்கள் கவனிப்பில் வைக்க வேண்டியிருந்தது. இது மிகவும் துயரகரமானது. இவை அனைத்தையும் நான் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. நான் கடவுளை நம்புகிறவன். தினமும் பிரார்த்திக்கிறேன். கடவுள் என்னிடம் பேசுகிறார். எனக்குப் பலத்தையும் மனோ தைரியத்தையும் குர்ஆன் கொடுக்கிறது.
தடுப்புக்காவலில் இருந்தபோது உங்களின் அரசியல் வாழ்க்கைக்கு இதுதான் முற்றுப்புள்ளி என்பதுபோன்ற எண்ணம் எப்போதாவது தோன்றியதா?
இல்லை. அப்படி நினைக்கவேயில்லை. நான் நம்பிக்கையாளன்.
காஷ்மீரில் இனிமேலும் எவரொருவரும் டெல்லியை நம்ப மாட்டார்கள் என்று உங்கள் நேர்காணல்கள் ஒன்றில் கூறியிருக்கிறீர்கள். இந்தத் தனிமைப்படலுக்கு யாரைக் குற்றஞ்சாட்டுவீர்கள்?
நிறைய துரோகங்கள் காஷ்மீர் மக்களுக்கு ஏற்கெனவே இழைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் மீண்டும் நம்பிக்கையை உருவாக்குவதற்குத்தான் தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தோம். அது நடக்கவேயில்லை. காஷ்மீரிலுள்ள ஒரு தெருவில் சென்று இந்தியர்களைப் பற்றிய அபிப்ராயத்தைக் கேளுங்கள். காஷ்மீரில் மட்டுமல்ல; ஜம்மு, லடாக் மக்களிடமும் போய் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். இது ஒன்றியப் பிரதேசமானால் சொர்க்கமாக இருக்கும் என்று நினைத்தவர்கள் உண்டு. ஆனால், இன்று தங்கள் நிலம் பறிபோய்விடும் எனும் அச்சம் அவர்களைச் சூழ்ந்துவிட்டது. புதிதாக ஏற்பட்டிருக்கும் அந்நியத்தன்மைக்குக் காரணம், நமது மகத்தான பிரதமர்தான். நாங்கள் பிரதமரை 2019 ஆகஸ்ட் 3 அன்று சந்தித்தோம்; இதுவரை காணாத அளவில் வானிலும் தரையிலும் படைகளின் தென்படல் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பேசினோம். முழுவதுமாகப் பிரதமர் மௌனம் காத்தார். ஆனால், உள்துறை அமைச்சர் மூலம் எல்லாவற்றையும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கச் செய்தார்.
பிராந்தியத்தில் இருக்கும் பெரிய கட்சிகள் இணைந்து கையெழுத்திட்டிருக்கும் ‘குப்கர் பிரகடனம்’ தெளிவான உத்தியைக் கொண்ட இலக்கொன்றைப் பற்றிய அறிவிப்பு என்று நினைக்கலாமா?
2019 ஆகஸ்ட் 4 போன்றே, அனைத்துக் கட்சிகளும் இப்போதும் சந்தித்துக் கூடிப் பேச நினைத்தன. அது அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், மெகபூபா முப்தி உள்ளிட்டவர்களுடன் நாங்கள் பேச முடிந்தது. முப்தி சீக்கிரம் விடுவிக்கப்பட்டு நாங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுபோவோம் என்று நினைக்கிறேன். எங்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்.
1953-க்கு முந்தைய காஷ்மீர் சூழலை மீட்டெடுக்கும் இலக்குக்கு மாறாக, 2019-க்கு முந்தைய காஷ்மீர் சூழலை மீட்டெடுக்கும் இலக்குக்கு நீங்கள் மாறியுள்ளீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது?
தேசிய மாநாட்டுக் கட்சி, 1953-க்கு முந்தைய நிலை தொடர்பிலான உறுதிப்பாட்டில் உள்ளது. குப்கர் பிரகடனம் 2019, ஆகஸ்ட் 4-ம் தேதியின் நிலைப்பாட்டில் உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் போராட்டம் தொடரும்.
ஷேக் அப்துல்லாவின் பெயர் கொண்ட விருதுகள் ஜம்மு-காஷ்மீர் காவல் துறை விருதுகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்காட்டியிலும் 1931 ஜூலை மாதம் 13 தொடர்பில் ஒரு தகவலும் இல்லையே?
ஸ்ரீநகர் விமான நிலையத்தின் பெயரைக் கமுக்கமாக பாஜக மாற்றிவிட்டது. ஷேக் சாகிப்பின் பெயரை அகற்றியுள்ளனர். அடையாளங்களை அகற்றுவதன் வழியாக ஷேக் அப்துல்லா போன்றவர்களைக் காஷ்மீர் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். ஜூலை 13-ம் தேதியையும் தியாகங்களையும் மறந்துவிட முடியுமா? ஆனால், வரலாறு அத்துடன் முடிந்துவிடுமா என்ன?
© தி இந்து, தமிழில் சுருக்கமாக: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT