Published : 02 Sep 2020 08:11 AM
Last Updated : 02 Sep 2020 08:11 AM
ஒரு குழுவோ ஒரு மையமோ, ‘இதுதான் தமிழ்ப் பண்பாடு’ என்று அடையாளம் சொல்வதை நாம் ஏற்க மாட்டோம். பண்பாட்டுக்குள்ளேயும் எத்தனையோ உள்பண்பாடுகள் உண்டு. பொதுப் பண்பாடாக ஒன்றைக் கட்டிச் சோடித்துவிட்டால் மற்றவை உள்பண்பாடுகளாகி, தாங்களாகவே தணிந்து பின்னுக்குச் சென்றுவிடுகின்றன.
திமிறிக்கொண்டிருக்கும் இரண்டு குதிரைகளை இடமும் வலமுமாகப் பிடித்தபடி கம்பீரமாக வரும் ரோமாபுரி வீரனை நினைவுபடுத்திக்கொண்டு ஒரு தெய்வம். சாளுவன் என்று பெயர். கிட்டத்தட்ட இரண்டு ஆள் உயரத்துக்கு மண்ணாலான இந்தச் சிலை அய்யனாருக்கு முன்பாக நிற்கிறது. காலில் சிலம்பு, அதற்கு மேல் வீரகண்டயம், மார்பில் மணிகள் கோத்த ஆரம். சரப் பதக்கங்களோடு உட்கழுத்துச் சரடு. திரட்சியான உதடுகள், வாளிப்பில் பூரித்துப் படர்ந்த முகம். வெட்டரிவாள் மீசை. புடை பரந்த கண்கள். மதர்ப்பு தெறிக்கும் வில் வளைவான புருவங்கள். இடப்பக்கம் திரும்பிய நாயக்கர் காலத்து சாய் கொண்டை. வலது கையில் அரிவாள். வெண்ணாறு என்றும், கோரையாறு என்றும் கிளை பிரிந்த காவிரியைத் தன் கிழக்கிலும் மேற்கிலும் வைத்துக்கொண்டு, பதின்மூன்று அடி நீளத்தில் கரவாரம் தரிக்கும் இந்த மண் சிலை வெட்ட வெளியில் நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.
போட்டிப் பொலிவு
சில கிராமங்களில் அய்யனாருக்கு முன்பு அரிவாளோடும் சுக்குமத்தடியோடும் நிற்கும் மற்றொரு தெய்வத்துக்கு பெத்தான் என்று பெயர். இதற்கு அருகிலேயே ஏழுதலை பெத்தான் என்று ஒரு விளக்கு மாடத்தின் புடையைச் சுற்றி மீசையோடு ஏழு சிரசுகளாக இருக்கும் இன்னொரு தெய்வம். நான்கு தலை பிரம்மாவையும், ஐந்து தலை சிவனையும், ஆறு முகத்தோடு இருக்கும் முருகனையும், பத்து தலை இதிகாசப் பாத்திரமான ராவணனையும்தானே நமக்குத் தெரியும்! அய்யனார் கோயில்களில் தூண்டில் வீரன் உண்டு. வீரனும் சூரனும் உண்டு. முத்தாளு ராவுத்தர் உண்டு. சாம்பான் என்று கையில் அரிவாளோடு இன்னொரு தெய்வம்.
சமூகப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தங்கள் கலாச்சார அடையாளங்களை அழுத்தமாக்கிக்கொள்ளும் காலம் இது. கிராமங்களில் அய்யனார் கோயில் திருப்பணி நடந்தால், இந்தத் தெய்வங்கள் எல்லாம் அவரவர்கள் இடங்களில் போட்டிப் பொலிவோடு இப்போது மிளிரத் தொடங்கியிருப்பது இயற்கைதானே!
வீரன், சாளுவன், சாம்பான், பெத்தான் ஆகிய தெய்வங்களை எல்லோரும் வணங்குகிறார்கள். ஆனாலும், தலித்துகளில் இரண்டு பெரும் பிரிவுகள் இவர்களைத் தங்கள் தெய்வங்களாகவே வைத்துப் படையலிடுகிறார்கள். காவிரிக்கரை கிராமங்கள் சிலவற்றில் வீரனுக்கும் சாம்பானுக்கும் தலித்துகளே பரம்பரைப் பூசாரிகளாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்குக் காது குத்தும்போதும் வேண்டுதலுக்காகவும் இந்தத் தெய்வங்களுக்குக் கிடா வெட்டி பூசை போடுவது உண்டு. வெட்டிய ஆடுகளை அங்கேயே சமைத்துப் படையலிட்டுப் பிறகு உண்பது வழக்கம். கிடா வெட்டும்போது அய்யனார் பார்க்காதவாறு அவருக்கு முன் ஒரு திரையை விரித்துப் பிடித்துக்கொள்வார்கள். காவிரிக் கரையில் அவருக்குப் பிராமண தெய்வம் என்று ஒரு பெயர்.
ஆவணி ஞாயிறு
எத்தனையோ பிராமணக் குடும்பங்களுக்கும் அய்யனார் குலதெய்வம். குழந்தைகளுக்கு அவரவர்கள் குலதெய்வ அய்யனார் கோயிலில்தான் முதல் முடி எடுப்பார்கள். ‘‘குழந்தைக்கு இரண்டாவது முடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடுப்போம்” என்று ஒரு நண்பர் கூறினார். ஏழுமலையானே ஆனாலும் உள்ளூர் அய்யனாருக்கு அடுத்த இடம்தான் அவருக்கு.
இந்த அய்யனார் எப்படி கிடாவெட்டி பூசைபோடும் தெய்வங்களோடு ஒரே கோயிலில் சேர்ந்து இருக்கிறார் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக விளக்கம் இருக்கக்கூடும். அந்த விளக்கத்தில், இது சமூகத்தின் சாதியப் படிநிலைகளை அழுத்தமாக்கிக்கொள்ளவே வந்த ஏற்பாடு என்று விமர்சனரீதியில் ஒரு புரிதல் இருக்கலாம். கீழ் நிலையில் வைத்திருந்தாலும் சில சமூகங்கள் விலகிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக மற்றவர்கள் செய்த தந்திரம் என்றுகூட ஒரு கருத்து இருக்கலாம். நாம் விவரங்களை மட்டும் பதிவுசெய்து வைப்போம். ஆடி, தை மாதங்களின் வெள்ளிக் கிழமைகளும் செவ்வாய்க் கிழமைகளும் தெய்வங்களை வழிபடும் விசேஷமான நாட்கள் என்பது பொதுப் பண்பாடு. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வழிபடுவதும் பரவலான கலாச்சார வழக்கம். ஆவணி தலை ஞாயிறும் கடை ஞாயிறும் காவிரிக்கரை தலித்துகளுக்கு விரத நாட்கள். அந்த நாட்களில் காலையில் சத்துமாவு மட்டுமே அவர்களின் உணவு. மாலை வரை விரதம் இருந்து புது மண்பாண்டங்களில் சமைத்த உணவு வகைகளை மாரியம்மனுக்குப் படைத்த பின்னர்தான் சாப்பிடுவார்கள். ஏற்கெனவே புழங்கிய மண்பாண்டங்கள் எச்சிலானவை என்று அவற்றை விரத நாட்களில் பயன்படுத்துவதில்லை. படையலில் வடை, பாயசம் உண்டு. ஊறவைத்த பச்சரிசியை இடித்து அதோடு வெல்லம் கலந்த துள்ளுமாவும் மாரியம்மனுக்குப் படைப்பார்கள். முடிந்தவர்கள் கோயிலுக்குச் சென்று மாவிளக்கு போடுவார்கள்.
பரந்த பண்பாட்டுத் தளம்
விரதங்களெல்லாம் சமூகத்தின் மேல்தட்டு மக்களோடு நின்றுகொள்ளும் என்று நினைக்கக் கூடாது. ஆடி, தை அமாவாசை நாட்கள் காவிரிக் கரை தலித்துகள் தவறாமல் கடைப்பிடிக்கும் விரத நாட்கள். இவை அல்லாமல், ஒவ்வொரு அமாவாசையும் பல தலித் குடும்பங்களுக்கு விரத நாட்கள்தான். புரட்டாசி சனிக் கிழமைகளிலும் சிலர் விரதமிருக்கிறார்கள். ஆடியில் ஒரு முறையும், ஆவணியில் ஒரு முறையும் அவர்கள் உள்ளூர் குயவர் வீட்டுக்குப் புதுப் பானை வாங்கச் செல்ல வேண்டியிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக ஆடி அமாவாசைக்குப் புதுப் பானை வாங்கும்போதே ஆவணி ஞாயிற்றுக் கிழமைக்கும் சேர்த்து வாங்கிக்கொள்வார்கள். அக்காலத்தில் ஆறு அல்லது ஒன்பது மரக்கால் நெல் கொடுத்தால் இரண்டு விரதங்களுக்கும் புது மண்பாண்டங்கள் கிடைக்கும்.
கலாச்சார உள்பன்மைக்கு இணையான ஒன்று மொழியில் உண்டு. ஒரு மொழிக்குள்ளேயே அதன் வகைகளாகப் பல மொழிகள் இருக்கக்கூடும். இப்போதெல்லாம் ஆங்கில மொழியை ஆங்கிலங்கள் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. “இதுதான் ஆங்கிலம்” என்று பிரிட்டன் போன்ற ஒரே ஒரு மையம் அந்த மொழியை வரையறுப்பதை மொழி இயல் ஏற்பதில்லை. ஆங்கிலங்களுக்கு இடையில் உள்ளவை போன்ற பெரிய வேறுபாடுகள் இல்லை என்றாலும் தமிழிலும் நாஞ்சில் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், பண்டிதர் தமிழ், பாமரர் தமிழ் என்று பல உள் வகைகள் உண்டு. இவை எப்படியோ திரண்டு, பொதுத்தமிழ் உருவாகிறது. உள்பண்பாடுகள் ஏதோ ஒருவகையில் திரண்டுதான் நம் பொதுப் பண்பாடும் உருவாகிறது. உள்பண்பாடு என்று நாம் சொல்பவற்றை அவ்வளவு நிச்சயமாக உள்பண்பாடுகள் என்று கீழே வைத்து வகைப்படுத்த முடியாது. இப்போது நம் பண்பாட்டுக் கூறுகள் இயங்கும் தளங்களும் எல்லைகளும் முன்பு இருந்ததைவிட விரிவானவை. ஆவணி ஞாயிறு மாரியம்மனும், அய்யனார் கோயில் சாளுவனும் இந்த எல்லைகள் இறுகாமலும் குறுகாமலும் காத்துக்கொள்வார்கள்.
- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT