Published : 02 Sep 2020 08:06 AM
Last Updated : 02 Sep 2020 08:06 AM
எனக்கு நீண்ட நடைகள் பிடிக்கும்! 2012-ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையின் பரந்த புல்வெளிகளை சுட்டிக்காட்டி பிரணாப் முகர்ஜி சொன்னது இது. நாட்டின் தலைநகரில் உள்ள தலைமை மாளிகையின் மீது தனக்கிருக்கும் ஆசையைப் பற்றி தனது கட்சிக்கு அவர் பொதுவெளியில் விடுத்த எச்சரிக்கையும் அது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரு ஆட்சிக் காலகட்டங்களிலும் அதுவரை பிரச்சினைகளைத் தீர்ப்பவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஒருகட்டத்தில் 50 அமைச்சர்கள் கொண்ட குழுவின் தலைவராக இருந்தார். அதாவது, ‘இன்னொரு பிரதமர்’ ஆக இருந்தார். எனினும், உண்மையான பிரதமர் நாற்காலி அவருக்குச் சிக்காமலேயே போய்விட்டது; ஓரிரு முறை வெகு அருகில் அந்த வாய்ப்பு வந்தபோதும்கூட.
புதுடெல்லி எனும் புதிர்வழிப் பாதையில் 1969-லிருந்து குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்த பிரணாபுக்கு அதிகாரம் எங்கிருந்து உருவாகிறது என்பது நன்றாகவே தெரியும். 2012-ல் இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக அவர் ஆனார். அவருடைய நீண்ட நடைகள் அவரது பதவிக்காலம் முடிவடைந்த 2017, ஆகஸ்ட் 9-க்குப் பிறகும் தொடர்ந்தன. அவர் குடியரசுத் தலைவராக இருந்த கடைசி நாளில் காலை 4 கிமீ, மாலை 4 கிமீ நடைப்பயிற்சி மேற்கொண்டார். பல தசாப்தங்களாகச் செய்துவந்ததுபோல் அன்றும் தனது நாட்குறிப்பேட்டில் எழுதினார்.
கசிந்துவிடாத ரகசியங்கள்
தன் நினைவுக்குறிப்புகளை பிரணாப் பல்வேறு புத்தகங்களாக எழுதினார். அவற்றில் அவர் நிறைய பேசினாலும் ரகசியத் தகவல்கள் தொடர்பில் வாயைத் திறக்கவே இல்லை; அந்த ரகசியங்கள் அனேகமாக அவரோடு போய்விட்டன; அந்த ரகசியங்களை எதிர்காலத் தலைமுறைக்குத் தனது நாட்குறிப்பேடுகளில் பதிவுசெய்திருந்தாலொழிய!
ரகசியங்களைக் காக்கும் திறன் கொண்டிருந்ததால்தான் இந்திரா காந்தியின் அன்புக்கு பிரணாப் பாத்திரமானார்; பிரணாபை 1969-ல் மாநிலங்களவைக்கு இந்திரா காந்தி அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 34. “அவருடைய தலைக்குள் எவ்வளவு விஷயம் போனாலும் வெறும் புகை மட்டும்தான் வெளியில் வரும் என்று பிரணாபைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிட்டார். பிரணாபுக்கு சுங்கானில் புகைப்பிடிக்கும் பழக்கம் அப்போது உண்டு. காலப்போக்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலும் 500 சுங்கான்களை அவர் சேகரித்துவைத்திருந்தார். இந்திராவுக்கு அடுத்து அதிகாரத்துக்கு வந்த ராஜீவ் 1984-ல் தனக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து பிரணாபை விலக்கினார். தனது தாய் சோனியாவின் ஆலோசகர்களை ராகுல் தனது நெருங்கிய வட்டாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதோடு நாம் இந்த ஒற்றுமையை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான துணுக்குகளைக் கூறக்கூடியவர் பிரணாப். பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பற்றி மட்டுமல்ல; ஏதாவதொரு நாளிதழை எடுத்துக்கொண்டு அதில் இடம்பெற்ற சுவாரஸ்யமான தகவலைப் பற்றியும் பேசுவார். இதுபோன்ற தகவல்களை அவர் விரல் நுனியில் வைத்திருப்பார். பேசாத வேளைகளில் அவர் படித்துக்கொண்டிருப்பார் – கோப்புகளையோ புத்தகங்களையோ!
இந்திரா படுகொலையான 1984, அக்டோபர் 31 நாளில் ராஜீவ் கொல்கத்தாவில் இருந்தார்; டெல்லி திரும்புகையில் அவரோடு பிரணாபும் விமானத்தில் சேர்ந்து வந்தார். அதற்கு முன்பு இரண்டு பிரதமர்கள் இறந்தபோது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களே பிரதமர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று பிரணாப் கூறினார். தான் ஒருபோதும் பிரதமர் பதவியைக் கோரவில்லை என்று பின்னர் பிரணாப் சொன்னதை ராஜீவுக்கும் இந்திராவுக்கும் நெருக்கமாக இருந்த பி.சி.அலெக்ஸாண்டரும் உறுதிப்படுத்துகிறார். ஆனாலும், ராஜீவ் யுகத்தில் நீண்ட நாட்கள் அரசியல் வனவாசத்தில் இருக்க வேண்டியிருந்தது. தனது மரபார்ந்த வழிமுறைகள் ராஜீவை ஈர்க்கவில்லை என்று பிரணாப் எழுதினார். பிரணாபின் ‘தி டர்புலென்ட் இயர்ஸ்’ புத்தகத்திலிருந்து சில வாக்கியங்களை இங்கே சுட்டுவது முக்கியமானது: ‘அயோத்தியைத் திறந்துவிட்டதால் ராஜீவ் தவறிழைத்துவிட்டார்’; ‘ரிசர்வ் வங்கியிலிருந்து மன்மோகன் சிங் வெளியேற்றப்பட்டதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’; ‘இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த தினத்தின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது சுதந்திரப் போராட்ட இயக்கத்தை அவமதிக்கும் செயல்’; ‘யூனியன் கார்பைடு நிலையத்தை நாட்டுடைமையாக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருந்தது’.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்
1980-களில் பிரணாப் நிதியமைச்சராக இருந்தார். அப்போது பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் மீது அவர் கொண்டிருந்த பிடி அவரது வாழ்க்கை முழுவதும் உதவியாக இருந்தது. நான்கு முக்கியமான துறைகளில் பாதுகாப்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை ஆகிய மூன்று முக்கியமான துறைகளின் அமைச்சராக அவர் இருந்தார். அமெரிக்காவுடன் 2008-ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய உறுப்பினராக இருந்தார்; இந்தப் பிரச்சினை தொடர்பில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரணாபின் அறிவுத் திறனும் முன்கோபமும் அவருடன் உரையாடும் எவரையும் அச்சுறுத்தின. சோனியா, மன்மோகன் இருவருடனான உறவை மதிநுட்பத்துடனும் எச்சரிக்கையுணர்வுடனும் கையாண்டார். அவர் நிதியமைச்சராக இருந்தபோது 1982-ல் மன்மோகனை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக்கும் நியமனத்தில் கையெழுத்திட்டார். மன்மோகனுடன் உறவைப் பேண முடியாமல்போன, ஒருகட்டத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துக்கொண்ட நட்வர் சிங்கைப் போல அல்லாமல் பிரணாப் தனது இரண்டாம் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு ஒருகட்டத்தில் நாட்டின் முதல் குடிமகன் ஆனார். ஆனால், ஒருவருடனான தனது உறவை அவர் மிகவும் சீர்குலைத்துக்கொண்டார் – அது அவரது அமைச்சரவை சகாவான ப.சிதம்பரம். அப்போது அவரைச் சூழ்ந்திருந்த அவரது ஆலோசகர்களின் சிறைக்கைதிபோல் ஆனார் பிரணாப்.
மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி அவரது இறுதி நாட்களில் அவரோடு இருந்தார். எனினும், முன்னதாக பிரணாபோடு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் செல்லவில்லை. பிரணாபின் மனைவி சுவ்ரா 2015-ல் காலமானார். அவரது மகன் அபிஜித் முகர்ஜி மக்களவைக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது அரசியல் வாழ்க்கை வெற்றிகரமாக இல்லை. இன்னொரு மகனான இந்திரஜித்துக்குப் பொது வாழ்க்கை சார்ந்த பிம்பம் ஏதும் இல்லை. வங்கக் கலாச்சார ஆர்வலராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் வங்கதேசத்திலும் மிகவும் பிரபலம். ஷேக் ஹஸினாவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் அவர். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டபோது வங்கத்தின் இடதுசாரிகளுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் காரணமாகவும், பிற காரணங்களுக்காகவும் அவரது தேர்வை இறுதி வரை மம்தா பானர்ஜி எதிர்த்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் அவரை ஆதரித்தனர். காங்கிரஸ் அல்லாதாருக்கும்கூட அவர் ஆலோசனைகள் வழங்கினார். நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், பிறகு பிரதமராக ஆனபோதும்கூட அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமும் மோடி பரிவு காட்டியதில்லை, ‘பிரணாப் தா’ ஒரு விதிவிலக்கு. பிரணாபை மோடி அடிக்கடி சந்தித்தார்; சோனியாவும் அவ்வப்போது வந்து சந்தித்தார்.
பாரத் ரத்னா
2019-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது. அந்தக் காலகட்டத்தில், நாக்பூரில் நடந்த ஒரு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது ஆழ்ந்த மதநம்பிக்கை தனது மதச்சார்பற்ற பார்வைக்குக் குறுக்கே வருவதற்கு ஒருபோதும் அனுமதித்திராத மனிதர் எடுத்த ஆச்சரியமான அவதாரம் இது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்படி அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கேட்டுக்கொண்டார். ஆனால், தனது பதவிக்காலம் முடியும் வரை பிரணாப் காத்திருந்தார். தேசியத்தைப் பற்றி ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களிடம் அவர் ஒரு உரையை ஆற்றினார். அது அவரவருக்குப் பிடித்தமான வகையில் எடுத்துக்கொள்ளும்படி இருந்தது. ஒரே சமயத்தில் இந்துத்துவ தேசியத்தை ஆதரிக்கும் வகையிலும், அதை விமர்சிக்கும் வகையிலும் இருந்தது.
காங்கிரஸ் அரசியலரான மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி அவரை எச்சரித்திருந்தார்: “இந்த உரை மறக்கப்படக்கூடும், ஆனால் படங்கள் நீடித்து நிலைக்கக் கூடியவை; போலியான கூற்றுக்களுடன் அவை வலம்வரக் கூடியவை.” ஆர்எஸ்எஸ் மேடையில் அந்த அமைப்பின் தலைவர்கள் தங்களுக்கேயுரிய சீருடைகளுடன் அமர்ந்திருக்க பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருக்கும் படம் அவரது வரலாற்றின் ஒரு பங்காகவும் இந்தியாவின் பரிணாமத்தின் வரலாறாகவும் நீடிக்கும். பிரணாப் வெகுதூரம் நடந்துவந்துவிட்டார்.
© தி இந்து, தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT