Published : 28 Aug 2020 07:48 AM
Last Updated : 28 Aug 2020 07:48 AM
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்ட காலமாக இருந்தன. எனினும், 1979 எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும். பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அங்கீகாரம் கொடுப்பதைப் பற்றிய முன்நிபந்தனையைத் தள்ளிவைத்துவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்துடன் முழுமையான வெளியுறவை இஸ்ரேல் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அது ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்’ என்று கூறினார். இந்தத் திடீர் மாற்றம் பன்னாட்டு வெளியுறவு வட்டாரத்துக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வழக்கத்துக்கு மாறான அரசியலராகத்தான் பெஞ்சமின் நெதன்யாஹு இருந்துவருகிறார். யார் உதவியுமின்றி அரபு நாடுகளுடன் இஸ்ரேலால் உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் நம்பிவந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இஸ்ரேலின் விளையாட்டு அணிகள் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 2018-ல் இஸ்ரேலின் விளையாட்டுத் துறை அமைச்சர் மிரி ரெஜிவ் அரசாங்கப் பிரதிநிதியாக அபுதாபிக்குச் சென்றார். அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்று 2019-ல் போலந்து நாட்டின் வார்ஸாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு, அரபு நாட்டுத் தலைவர்களை நெதன்யாஹு சந்தித்தார். அந்தச் சந்திப்பின் காணொலியானது இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தால் கசிய விடப்பட்டது. அதில், ஈரான் விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது, அரபு நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்கள்.
உண்மையில், ஈரான் என்ற காரணிதான் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான உறவுக்கு வழிவகுத்தது. இஸ்ரேலின் இறையாண்மையை மேற்குக் கரையின் சில பகுதிகளுக்குத் தான் விரிவுபடுத்தப்போவதாக நெதன்யாஹு அறிவித்ததிலிருந்து அதற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால், ஈரானுக்கு வளர்ந்துவரும் பிராந்தியச் செல்வாக்கின் காரணமாக, இஸ்ரேலுடன் முழு வெளியுறவுத் தொடர்பு வைத்துக்கொள்வது ஏற்புடையது என்று ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. ஈரான் தனது அணு ஆயுதக் குறிக்கோள்களை விடுவதாக இல்லை, பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வந்த அழுத்தங்களுக்கு வளைந்துகொடுக்காத விதத்தில் ஈரானால் இருக்க முடிந்திருக்கிறது. கூடவே, சவூதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள் தற்போதைய நிலையைத் தொடர்வதற்காக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
நெதன்யாஹு ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது இந்த வெளியுறவுத் துறை வெற்றி கிடைத்திருக்கிறது. ஜெருசலேமில் அவருக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஆயிரக் கணக்கானோர் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள யூதர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், அவர் மீது ஊழல், லஞ்சம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. எல்லாம் கைமீறிப்போய்விடுவதுபோல் தோன்றியபோது, அவர் தனது ஆதரவாளர்களை வெளியுறவுத் துறைரீதியிலான வெற்றி மூலம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெற்றியை அவருக்கு மேலும் இனிமையாக்குவது என்னவென்றால், சமரசங்களுக்கும் விட்டுக்கொடுத்தல்களுக்கும் இடம்கொடுக்காமல் இஸ்ரேல் தானாகவே சமாதானத்தை எட்டும் என்ற ஒரு தசாப்த காலமாக அவர் கொண்டிருந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் காரியம் நடந்ததுதான்.
பாலஸ்தீன மக்களின் அரசியல் பிரச்சினைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கின்றன. நீண்ட காலமாக, இந்தப் பிராந்தியத்தில் பாலஸ்தீன விவகாரம் பொருட்படுத்தப்படுவதில்லை. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உடன்படிக்கையைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டதும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழு உறுப்பினரான ஹனான் அஷ்ரவி ஐக்கிய அமீரகத்தின் தலைவரான மொகமது பின் ஸயதுக்கு ட்விட்டரில் இப்படிப் பதிவிட்டிருந்தார்: “உங்கள் சொந்த நாடு திருடப்படும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது… உங்கள் ‘நண்பர்’களால் நீங்கள் ஒருபோதும் விற்கப்படக் கூடாது.”
இஸ்ரேலுடன் எகிப்து 1979-ல் செய்துகொண்ட உடன்படிக்கையிலும் பாலஸ்தீன விவகாரம் ஒரு முன்நிபந்தனையாக இல்லை. கமால் அப்துல் நாஸரின் தலைமையில் எகிப்தானது அரபு உலகின் தலைமையாக இருந்தது. ஆனால், நாஸரின் காலத்துக்கும் 1967 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளின் போர்களுக்குப் பிறகும் இரண்டு நாடுகள் என்ற தீர்வை இஸ்ரேலைச் சம்மதிக்க வைப்பதற்கான வலு தங்களிடம் இல்லை என்று எகிப்து உணர்ந்தது. ஜோர்டானும் இதே நிலையில்தான் இருந்தது. 1994-ல் இஸ்ரேலுடன் இரு தரப்பு உறவுக்கான உடன்படிக்கை செய்தபோது பாலஸ்தீனப் பிரச்சினையை யாஸர் அரஃபாத்தின் கைகளில் விட்டுவிட்டது.
பாலஸ்தீனர்கள் மீது அரபு மக்கள் பரிவு கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு மேல் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலான அரபு ஆட்சியாளர்கள் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதால், அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் இல்லை; தங்கள் பிரதேசத்தின் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் முடிவெடுப்பார்கள். அப்படித்தான் ஈரான் என்ற காரணி அவர்களை இஸ்ரேலை நோக்கித் தள்ளியது. யதேச்சாதிகார அரபு நாடுகளின் தலைவர்கள் பின்னால் பாலஸ்தீனர்கள் உட்கார்ந்துகொள்வது சிறுபிள்ளைத்தனமானது என்று யாஸர் அரஃபாத் நம்பியது சரிதான். தற்போதைய உடன்படிக்கையானது பாலஸ்தீன தேசிய இயக்கம் புத்துயிர் பெற வேண்டும் என்று உணர்த்துகிறது; ஆனால் என்ன, அதை வழிநடத்த எந்தவொரு அரஃபாத்தும் இல்லை.
- கின்விராஜ் ஜாங்கிட், இணைப் பேராசிரியர், இஸ்ரேல்
ஆய்வுகளுக்கான மையம், ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், சோனிப்பட்.
© தி இந்து, தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT