Published : 17 Aug 2020 01:45 PM
Last Updated : 17 Aug 2020 01:45 PM
இஸ்ரேலுடன் தூதரக உறவைத் தொடங்கியிருப்பதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகளில் உறவு மேம்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் இரு நாடுகளுக்கு இடையில் வேளாண் துறை, உணவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 13-ல் இறுதிசெய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தது அமெரிக்காதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியும் வளமும் ஏற்படும் என்றெல்லாம் அமெரிக்கா பெருமிதத்துடன் பேசுகிறது. ஆனால், இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம், இந்த நகர்வின் மூலம் பாலஸ்தீனர்களின் அதிருப்திக்கும், பல்வேறு நாடுகளின் விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.
பின்னணி என்ன?
இஸ்ரேலின் இறையாண்மையை மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களுக்கும், ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் விரிவுபடுத்த நெதன்யாஹு அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். அதைத்தான் இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சமாக அந்நாடு முன்வைக்கிறது.
குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை இஸ்ரேல் கைவிட்டால் அந்நாட்டுடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயார் என்று ஐக்கிய அரபு அமீரகம் சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது உண்மைதான். ஆனால், அந்த ஒற்றை விஷயம் மட்டும்தான் இரு நாடுகளையும் அருகருகே ஈர்த்தது என்று சொல்ல முடியாது. அண்மைக் காலமாகவே அதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன.
அபுதாபியில் நடந்த தடகளப் போட்டிகளில் இஸ்ரேல் வீரர்கள் கலந்துகொண்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இஸ்ரேலுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஈரானின் வான் பகுதியைக் கண்காணிக்க இஸ்ரேல் தனியார் நிறுவனத்தின் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் வாங்கியிருக்கிறது. அக்டோபரில் நடத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டிருந்த ‘எக்ஸ்போ 2020’ கண்காட்சியில் பங்கேற்கவும் இஸ்ரேல் தயாராக இருந்தது (கரோனா பரவல் காரணமாக அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது).
அதுமட்டுமல்ல, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட், கடந்த சில ஆண்டுகளாகவே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளிடம் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகர்வுகளின் ஒட்டுமொத்த விளைவுதான் இந்தப் புதிய ஒப்பந்தம் என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.
கறுப்பு தினம்
எதிர்பார்த்ததுபோலவே பாலஸ்தீனத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. “பாலஸ்தீன வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினம்” என்று பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) கண்டனம் தெரிவித்திருக்கிறது. தனது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தனது தூதரைப் பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் பாலஸ்தீனத்துக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் இது உண்மையில் இஸ்ரேலுக்கான அன்பளிப்பு என்றும் பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரும் யாசர் அராபத்துக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கருதப்படுபவருமான முகமது தஹ்லான் இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னணியில் இருந்ததாகப் பாலஸ்தீனர்கள் கருதுகிறார்கள். பாலஸ்தீன அதிபராக வேண்டும் எனும் லட்சியம் கொண்ட தஹ்லான் தனக்கு ஆதரவு திரட்டவே இதைச் செய்திருக்கிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போது அபுதாபியில் வசிக்கும் அவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகமது பின் சையது அல் நெஹ்யானுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். “இனி தஹ்லானைப் பாலஸ்தீன மண்ணில் கால் பதிக்க விட மாட்டோம்” என்று பாலஸ்தீனர்கள் கொந்தளிக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் குரலை வேறு சில நாடுகளும் எதிரொலித்திருக்கின்றன. மிக முக்கியமாக, ஈரானிடமிருந்து சீற்றம் மிகுந்த வார்த்தைகள் வெளியாகியிருக்கின்றன.
குழந்தைகளைக் கொல்லும் நாடு என இஸ்ரேலை விமர்சிக்கும் ஈரான், அந்நாட்டுடன் தூதரக உறவைத் தொடங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. அதேசமயம், “ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. அறியாமை கொண்ட ஆட்சியாளர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள்” என்று கவனமாகவே தனது விமர்சனத்தை ஈரான் முன்வைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் துருக்கி, அந்நாட்டுடனான தூதரக உறவைத் துண்டித்துக்கொள்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.
ஆபிரஹாம் ஒப்பந்தம்
ட்ரம்பின் வெளியுறவு விவகாரங்களில் பெருமளவு பங்களிப்பு செய்துவரும் அவரது மருமகனுமான ஜாரேட் குஷ்னர்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியிலும் இருக்கிறார். இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்களிடம் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார். வெள்ளை மாளிகையிலேயே பல உயரதிகாரிகளுக்குத் தெரியாத அளவுக்கு மிக ரகசியமாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. யூத மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று முக்கிய மதங்களின் நாடுகள் தொடர்புடைய இந்த ஒப்பந்தம் ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.
வாக்கைக் காப்பாற்றுமா இஸ்ரேல்?
இதுபோன்ற ஒப்பந்தங்களைக் காகித அளவிலேயே கடைப்பிடிப்பது என்பது இஸ்ரேலின் வழக்கம்தான். பாலஸ்தீனத்துடனும், பிற அரபு நாடுகளுடனும் இஸ்ரேல் செய்துகொண்ட ஒப்பந்தங்களை நெதன்யாஹு அரசு ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டும் சர்வதேசப் பார்வையாளர்கள், மேற்குக் கரையில் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் விஷயத்திலும் இஸ்ரேல் அரசு அதேபோலத்தான் நடந்துகொள்ளும் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கிடையே, குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் தடைபட்டிருப்பதால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகள் கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். ஆனால், இது ஒரு தற்காலிகமான தள்ளிவைப்புதான் என்பதில் நெதன்யாஹு தெளிவாக இருக்கிறார். இவ்விஷயத்தில் அமெரிக்காவும் பெரிய அளவில் கவனம் செலுத்தப்போவதில்லை. ஏனெனில், மேற்குக் கரைப் பகுதிகளில் யூதக் குடியிருப்புகள் நிறுவப்படுவதை ட்ரம்ப் அரசு ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமே கண்துடைப்பாகத் தெரிகிறது.
தோல்விகளை மறைக்கும் முயற்சி
கரோனா பரவலைத் தடுப்பதில் மிகப் பெரிய தோல்வி, பொருளாதாரச் சரிவு எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப், தன் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். அவற்றில் ஒன்றாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட இதுபோன்ற பிரச்சினைகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவும் எதிர்கொள்கிறார். கூடவே, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும் அவருக்குத் தலைவலியாகியிருக்கிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவைத் தொடங்கியிருப்பது தனது அரசியல் செல்வாக்கை வளர்க்கும் என்று அவர் கருதுகிறார்.
என்ன பலன்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் முக்கியமான எதிரி அல்ல. மாறாக, ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆட்சி நடக்கும் ஈரான்தான் அந்நாட்டின் பிரதான எதிரியாகக் கருதப்படுகிறது. இத்தனைக்கும் பாலஸ்தீனத்தில் சன்னி முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். ஆனால், எதிரிக்கு எதிரி நண்பன் எனும் முறையில் இந்த நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, ஓமன், பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரக உறவைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்நிகழ்வுகளை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கும் சவுதி அரேபியா, இப்போதைக்கு வெளிப்படையாக எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்றே தெரிகிறது. அரபு உலகின் பெரும் பணக்கார நாடும், முஸ்லிம்களின் புனிதத் தலங்களான மெக்கா, மதீனா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தேசமும், அமெரிக்காவின் நெருங்கிய சகாவுமான சவுதி அரேபியா இவ்விவகாரத்தை மிகக் கவனமாகவே அணுகுகிறது.
உண்மையில், அரபு தேசம் ஒன்று இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்வது இது முதல் முறை அல்ல. 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் அந்நாட்டுடன் தூதரக உறவைத் தொடங்கின. எனினும், அதன் மூலம் பெரிய பலன்கள் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. இஸ்ரேலின் அத்துமீறல்களும் முடிவுக்கு வந்துவிடவில்லை.
இந்தச் சூழலில் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, மத்தியக் கிழக்குக்கு என்ன பலனைத் தரும் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT