Published : 24 Sep 2015 09:57 AM
Last Updated : 24 Sep 2015 09:57 AM
இந்திய சுதந்திர வரலாறு மற்றும் தேசப் பிரிவினையின் பின்னணியில் ரத்தமும் கண்ணீரும் கலந்த மகாசமுத்திரம் உறைந்திருக்கிறது. வரலாற்றுப் பதிவேட்டின் பார்வைக்கே வராமல் போன கதைகள் எத்தனையோ உண்டு. இத்தனை கனமான ஆவணத்தை, வரலாற்றுப் புரிதலுடன் திரையில் பதிவுசெய்பவர்கள் குறைவு. அந்தச் சிறு பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் வங்காள மொழி இயக்குநரான ஸ்ரீஜித் முகர்ஜி. ‘ஆட்டோகிராஃப்’(2010) என்ற வங்காள மொழிப் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘சாட்ஸ்கோனே’ திரைப்படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வென்றவர். இவரது இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ராஜ்கஹினி’ திரைப்படத்தில், ரவீந்திரநாத் தாகூர் எழுதி இசையமைத்த இந்திய தேசிய கீதம் இடம்பெற்றிருக்கிறது, முற்றிலும் வேறு வடிவத்தில்! மொத்தம் ஐந்து பத்திகளைக் கொண்ட ‘ஜன கண மன' பாடலின் முதல் பத்தி மட்டும்தான் தேசிய கீதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
‘ராஜ்கஹினி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அப்பாடல், தாகூர் பாடலின் இரண்டாவது பத்தியிலிருந்து தொடங்குகிறது ‘ஆஹோராஹோ தாபோ ஆஹோ பானு பிரசாரிதோ’ என்று தொடங்கும் தாகூரின் பாடல், மெய்சிலிர்க்கவைக்கும் காட்சிகளின் தொகுப்புடன் இணையத்தில் வெளியாகிப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது. வங்காளத்தின் முக்கியமான இசைக் கலைஞர்கள் பத்துப் பேர், உணர்வுபூர்வமாக இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரம், பிரிவினை, பெண் விடுதலை என்று பல்வேறு விஷயங்களின் பின்னணியிலான கதைக்களம் கொண்ட இப்படத்தில் ரிதுபர்ணா சென்குப்தா, ஜிஷு சென்குப்தா, சஸ்வதா சாட்டர்ஜி போன்ற முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் மாதம் இப்படம் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் ட்ரெய்லரில்தான் இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சசி தரூர் உட்பட பல்வேறு பிரமுகர்களும் ரசிகர்களும் ஜித் முகர்ஜியின் இந்த முயற்சியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.
வங்காளத்தின் கிராமம் ஒன்றில் பாலியல் தொழிலாளர் விடுதியின் வழியே செல்லும் தேசப் பிரிவினையின் கோடு ஏற்படுத்தும் கொந்தளிப்புதான் படத்தின் மையக் கரு. அந்த விடுதியை விட்டுக் காலிசெய்யுமாறு அதிகார வர்க்கம் கட்டாயப்படுத்தும்போது அதை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடுகிறார்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் எளிய பெண்கள். மதக் கலவரம், பாலியல் பலாத்காரம், பற்றியெரியும் வீடுகள் என்று முகத்தில் அறையும் சம்பவங்கள் கொண்ட படம் இது.
‘‘ தேசப் பிரிவினை தொடர்பான வரலாற்றுப் புரிதல் நம்மிடம் இல்லை. இன்றும் ஜெர்மனி குழந்தைகளிடம் ‘நாஜி’எனும் வார்த்தையை உச்சரித்தாலே, தலைகவிழ்ந்துகொள்வார்கள். நம் குழந்தைகளுக்கோ தேசப் பிரிவினை பற்றி எதுவுமே தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் ஜித் முகர்ஜி. இப்படம் அவரைப் போன்றவர்களின் வருத்தத்தைப் போக்கும் என்று நம்பலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT