Published : 17 Sep 2015 09:59 AM
Last Updated : 17 Sep 2015 09:59 AM
மூன்றாவது உலகப் போர் மூளும் என்றால், அதற்கு முக்கியக் காரணமாகத் தண்ணீர்தான் இருக்கும் என்று அறிஞர் பெருமக்கள் சொல்வதுண்டு. சென்னைவாசிகளுக்கு அதற்கான ‘ட்ரெய்லர்’காட்சிகள் இப்போதே தென்பட ஆரம்பித்துவிட்டன. பலரும் இப்போது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடக்கூட நேர மில்லாமல், மெட்ரோ லாரியின் பின்னால் வரிசைகட்டித் தேவுடு காக்கிறார்கள்.
சென்னையில் வாடகைக்குக் குடியிருப்போர் நலச் சங்கம் என்று ஒன்றிருக்கிறதா, குறைந்தபட்சம் அந்தப் பெயரில் ஒரு வாட்ஸப் குரூப்பாவது இருக்கிறதா தெரியாது! ஆனால், அப்படியொன்று இருந்தால் அதன் சார்பில் ஒவ்வொரு முட்டுச் சந்திலும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் என்று போர்க் குரல் எழுப்பிக்கொண்டே இருப்பார்கள் என்பது மட்டும் சர்வ நிச்சயம். நாள் கிழமை அன்று குளிக்கலாம் என்று முடிவெடுத்தால் குழாயில் தண்ணீர் வராது.
மேகத்துக்கு மிக அருகில் இருக்கும் தளத்தில் குடியிருக்கும் வீட்டுக்காரருக்கு, இதுகுறித்துப் புகார் தெரிவிப்பது என்பதும் அத்தனை எளிதான காரியமன்று. அன்னாருக்குத் தகவல் தெரிந்து, அவர் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு கணக்கில் ஏறிவிடும். இதற்காகவே, குளிக்காமல் சென்ட் மட்டும் அடித்துக்கொண்டு அழுக்குசெண்டு சாமிகளாக அலுவலகம் செல்பவர்கள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டதாக, மூக்கைப் பொத்திக்கொண்டு கதறுகிறார்கள் பேருந்துகளில் செல்லும் சக பயணிகள்.
எனவே, எப்படியாயினும் எங்கிருந்தேனும் தண்ணீரைத் தருவித்து முடிந்தவரை உடம்பை நனைத்து அலுவலம் கிளம்பிச் செல்லும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கும் அப்பாவிகள். அட, அடுத்தவர் கதைபோல் சொல்லிக்கொண்டே போவானேன். பாதிக்கப்பட்டவன் அடியேன்தான். பிறப்பதற்கு ஒரு ஊர் பிழைப்பதற்கு ஒரு ஊர் என்று சென்னைக்குக் குடிபுகுந்த நான், கொலைகாரன்பேட்டைக்கு அருகே வசிக்க நேர்ந்தது எந்த ஜென்மத்து ‘ஃபத்வா’வோ தெரியாது.
ஐந்து நிமிடங்களில் அலுவலகம் சென்றுவிடலாம் என்று ஆசைகாட்டிய புரோக்கர், எங்கள் தலையில் ஒரு லைன் வீட்டுக் குடியிருப்பைக் கட்டிவிட்டு, கமிஷன் வாங்கிக் காணாமல் போய்விட்டார். அதைக் கட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருக்கிறேன். வேறு வீடு பார்ப்பதற்கு அதீத உழைப்பும் நேரமும் மிக முக்கியமாக புரோக்கரின் தயாள மனதும் தேவை என்பதால் அதுவும் இழுத்தடித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போதே மோட்டார் போடச் சொன்னால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்று சலித்துக்கொள்வார் வீட்டு ஓனர். அதற்காகப் பல் கூட விளக்காமலா வெளியில் போக முடியும்! இருக்கும் தண்ணீர் கஷ்டத்தில் சுற்றத்தார் உறவினர் எல்லாம் வந்தால், தங்கவே முடியாது என்பதால், ஊரிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வரை வந்து குசலம் விசாரித்துவிட்டு, மறு பஸ் பிடித்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவே அசாத்தியமாகிவிட்டது.
மெட்ரோ லாரியின் முன், மன்னிக்கவும் பின் வரிசையில் நிற்கும் அனுபவத்தைச் சொல்கிறேன். ஒருநாள் விட்டு ஒருநாள் மாலை எங்கள் தெருவுக்கு லாரி வருவது என்று ஏற்பாடாகிவிட்டது. முதல்நாள் கூடிய கூட்டத்தை அரசியல் கட்சிகள் பார்த்தால், குவார்ட்டர், பிரியாணி பேரத்துடன் மாநாடுகளுக்கு ஆள்பிடிக்க வந்துசேர்ந்துவிடுவார்கள்; அந்தக் கூட்டம்! பலர் தண்ணீர் கிடைக்காமல், கண்ணீராலும் வியர்வையாலும் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை. பிறகு, தண்ணீர் பிடிக்கும் நடைமுறையில் பல மாற்றங்கள் அமலுக்கு வந்தன.
குடும்பத்துக்கு ஐந்து குடம். வரிசை மாறாமல் வந்து தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டும்; வசைகளைப் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் கொள்கைகள் வகுக்கப்பட்டன. கொள்கைகளைக் கட்சித் தலைவர்களே சட்டை செய்யாத நிலையில், குடிதண்ணீருக்காகக் குமுறிக்கொண்டிருக்கும் எளிய மக்கள் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன? ஒரே களேபரம்தான். முதல் நாள் வரை, ‘அக்கா கொஞ்சம் கருவேப்ல குடுக்கா’என்று குலாவிக்கொண்டிருந்த பெண்கள், ‘அய்ய, இன்னா நீ முந்திக்கினு போற! இம்மாம்பேர் வர்சேல நிக்கிறது தெர்ல’என்று வன்மம் காட்டுகிறார்கள்.
நிரம்பிய குடத்தைத் தூக்கிச் செல்வது, சச்சரவு வந்தால் சமாதானத் தூதுவர் பணி செய்வது என்பன உள்ளிட்ட வேலைகள் ஆண்களுக்கு. குழந்தைகளும் குடத்துடன் வந்துநிற்பது சோக நாடகம்தான்!
குடிதண்ணீர் லாரிகளுக்குப் பின்னால் அலைந்ததேயில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனால், அதெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு. கடந்த சில ஆண்டுகளில் இத்தனை கஷ்டத்தை அனுபவித்ததில்லை. தண்ணீர் பிடிப்பதற்காகவே அலுவலகத்தில் பெர்மிஷன் போடும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. நாளொன்றுக்கு இத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் லாரியில் விநியோகிக்கப்படுகிறது என்கின்றன செய்திகள். சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டுகொண்டிருக்கின்றன என்று அச்சுறுத்துகிறார்கள் நிபுணர்கள். நிலைமை இப்படியே சென்றால், ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் அகதிகள் பட்டியலில் சென்னைவாசிகளும் இடம்பெறலாம். சந்தேகமில்லை!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT