Published : 05 Aug 2020 08:08 AM
Last Updated : 05 Aug 2020 08:08 AM

செய்திகள் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

செயல்படாமல் மூடப்பட்ட தகவல்தொடர்பைப் படிமமாக்கி காஷ்மீரி கவிஞர் ஆஹா சாகித் அலி எழுதிய புகழ்பெற்ற கவிதைத் தொடரின் பெயர் ‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’ (தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபீஸ்). 1990-ல் ஜம்மு-காஷ்மீரில் நிலவிய சூழலைப் பின்னணியாக வைத்து அவர் எழுதிய கவிதை இன்றும் பொருளுள்ளதாக இருக்கிறது. செய்தி பரப்புவதற்கான ஊடகத்தில்தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, செய்தியைச் சொல்ல முடியாத, செய்திகளைக் கொண்டுசேர்க்க முடியாத, செய்தி யாருக்கும் போய்ச்சேராத நிலைமையைப் பொறுத்தவரை மாற்றமே இல்லை.

செய்தி காதலைச் சொல்கிறது. செய்தி நட்பைச் சொல்கிறது. செய்தி உறவைச் சொல்கிறது. செய்தி மரணத்தைச் சொல்கிறது. செய்தி சோகத்தையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. செய்தி முரண்பாட்டைச் சொல்கிறது. செய்தி எதிர்ப்பைச் சொல்கிறது. செய்தி கண்டனத்தைச் சொல்கிறது. செய்தி ஒரு யதார்த்தத்தைச் சொல்கிறது. செய்தி ஏக்கத்தையும் தனிமையையும் சொல்கிறது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்துபோன காஷ்மீரி கவிஞரான ஆஹா சாஹித் அலியின் கவிதையில், அவரது தாயகத்தில் என்ன நடக்கிறது என்று பரிதவிக்கும் இதயம் தெரிகிறது. உலக சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாகத் தெரியும் ஒரு நிலப்பரப்பு, அரசியல் காரணங்களால் கோரப்படுத்தப்பட்டு, அரச பயங்கரவாதமும் தீவிரவாதமும் சேர்ந்து உருவாக்கிய அழிவின் துர்ச்சித்திரங்களைக் கொண்டு இந்தக் கவிதை படைக்கப்பட்டுள்ளது.

எங்கே மினாரெட் புதைக்கப்பட்டிருக்கிறதோ/ இந்த நாட்டுக்குத் திரும்பவும் வருகிறேன்/ களிமண் விளக்குகளின் திரிகளைக் கடுகெண்ணெய்க்குள்/ யாரோ ஒருவர் முக்கி நனைக்கிறார்/ கிரகங்களின் மீது கீறப்பட்ட செய்திகளைப் படிப்பதற்காக/ ஒவ்வொரு இரவும் அவர் மினாரெட்டின் படிகளில் ஏறுகிறார்./ ஜம்மு-காஷ்மீரின் கலாச்சார அடையாளமான மினாரெட்டும், அதன் அன்றாட அத்தியாவசிய மனிதர்களில் ஒருவரான தொழுகைக்கு அழைப்பவரும் வருகிறார்கள். பூமியில் செய்திகளே மறுக்கப்பட்ட நிலையில், கிரகங்களின் மீது கீறப்பட்ட எழுத்துகளைப் படித்து ஆரூடம் தெரிந்துகொள்வதுதானே நமது நியதியும் நம்பிக்கையும்.

அடுத்தடுத்த வரிகளில் கவிதை காஷ்மீர் இன்றும் எதிர்கொள்ளும் யதார்த்தத்தில் இறங்கிவிடுகிறது. தொழுகைக்கு அழைக்கும் மனிதர், தபால் அதிகாரியாக ஆகிறார். புதைக்கப்பட்ட அல்லது காலிசெய்யப்பட்ட வீடுகளின் முகவரிக்கு/ எழுதப்பட்ட கடிதங்களின் குவியலிலிருந்து கடிதங்களை எடுத்து/ அவனது விரல்ரேகைகள் ஸ்டாம்ப் இடப்படாத கடிதங்களை ரத்துசெய்கிறது./

கவிதையில் அடுத்து, வீடுகளைக் காலிசெய்து சமவெளிக்கு ஓடிப்போன பண்டிதர்கள் வருகின்றனர். அடுத்து, வீடுகளுக்கு ராணுவத்தினர் தீவைக்கும் சம்பவம் விவரிக்கப்படுகிறது. இலைகளைப் போல வீடுகள் எரிகின்றன. பண்டிதர்களின் வீடுகளும் சரி, எங்களின் வீடுகளும் சரி… ஒவ்வொரு நாளும் புதைக்கப்படுகின்றன என்கிறார் கவிஞர். தாங்கள் இன்னமும் விசுவாசத்துடன் இருப்பதால், தங்கள் புதைக்கப்பட்ட வீடுகளுக்கு மலர்வளையம் வைக்கிறோம் என்கிறார். தீயின் சிறையில் அவர்கள் இருக்கிறார்கள். வெளியே எரியும் வெளிச்சம். உள்ளே தீக்குள் இருப்பவர்களையோ குகை இருட்டாகச் சூழ்கிறது என்கிறார்.

‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’ கவிதைத் தொடரின் நான்காவதும் கடைசியுமான கவிதையில், மினாரெட் என்ற படிமம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகிவிடுகிறது. சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியாத கடிதங்களைப் படிக்கத் தொடங்குகிறான் அவன்/ நான் அவற்றை வாசிக்கிறேன், காதலர்களின் கடிதங்கள், பைத்தியம் பிடித்தவர்களின் கடிதங்கள்/ நான் அவனுக்கு எழுதி பதில்களே வராத கடிதத்தையும். நான் விளக்குகளை ஏற்றுகிறேன், எனது பதில்களை அனுப்புகிறேன், பிரார்த்தனைக்கான அழைப்பையும் கண்டங்களாகப் பரவியுள்ள செவிட்டு உலகங்களுக்கு. மரணம் கிட்டத்தட்ட அருகில் இருக்கும் நிலையில் உலகத்துக்கு எழுதப்பட்டு, இறந்துபோன கடிதங்களைப் போல எனது அழுகையும் புலம்பலும் உள்ளது என்று எழுதுகிறார். இதை எழுதும்போது மழைபெய்கிறது. என்னிடம் பிரார்த்தனை இல்லை, வெறும் கூச்சல்தான் உள்ளது என்று மறுகுகிறார். சிறையில் நொறுங்கும் அழுகையோலங்கள்தான் இந்தக் கடிதங்கள் என்று எழுதுகிறார்.

அஞ்சலும் செய்தியும் வெறும் தொழில்நுட்பம் மட்டும்தானா? அது நாகரிகத்தின் சின்னம் இல்லையா? இத்தனை நவீன வசதிகளுடன் நாம் எதை இழந்து நிற்கிறோம்? சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து நாம் அந்த மக்களுக்குக் கொடுத்த பரிசு இதுதானா? இதுதான் நாகரிகமா? பைத்திய இதயமே, தைரியமாய் இரு என்று முடிக்கிறார் கவிஞர்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x