Last Updated : 05 May, 2014 10:18 AM

 

Published : 05 May 2014 10:18 AM
Last Updated : 05 May 2014 10:18 AM

முதல் பூட்ஸ் ஆயுதப் படைகள், இரண்டாவது பூட்ஸ் வளர்ச்சி: விஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி

இந்தியாவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் தலைகள் கூடும் ஜமா இந்திய சர்வதேச மையம். 1960-ல் இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த ஜப்பான் மன்னர் அகிடோ கையால் இதை நிறுவினார் பிரதமர் நேரு. டெல்லியின் கௌரவம் மிக்க கலாச்சார அடையாளங்களில் ஒன்றான இந்த மையம் அறிவுஜீவி அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள், படைப்பாளிகள் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்டது. படிக்க அருமையான நூலகம் இங்கு உண்டு. நாட்டின் மதிப்புமிக்க அதிகாரிகளில் ஒருவரான விஜயகுமாரை இங்குதான் சந்தித்தேன். ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவி வரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். இந்திய அரசு, சமகாலத்தில் எதிர்கொள்ளும் பெரும் உள்நாட்டுப் பிரச்சினையான மாவோயிஸ்ட் பிரச்சினையை எதிர்கொள்ள விஜயகுமாரைத்தான் தேர்ந்தெடுத்தது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) தலைவராக. காஷ்மீர் பிரச்சினையிலும் அரசுக்கு அவர் ஆலோசனை சொன்னார். இப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நிற்கிறார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உயிரிழந்த செய்தி வந்தபோது, இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தது. ஒருபுறம் செல்பேசியில் அடுத்தடுத்த கட்டளை களை அனுப்பிக்கொண்டே மறுபுறம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிகாரவர்க்கத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசினார் விஜயகுமார்.

ஒரு காவல் துறை அதிகாரியின் மகனாகப் பிறந்தீர்கள். உங்கள் முழு வாழ்வும் காவல் துறையை ஒட்டியே கழிந் திருக்கிறது. சின்ன வயதில் நீங்கள் காவல் துறையைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் ஏதேனும் வித்தியாசங்களை உணர்கிறீர்களா?

நிறைய உணர்கிறேன். முக்கியமாக என்றால், அன்றைக்குக் காவல் துறையிடம் பெரிய அளவில் அதிகாரம் இருந்தது. அதாவது, குறுக்கீடுகளற்ற அதிகாரம் இருந்தது. அது ஒரு சுதந்திரத்தைத் தந்தது. அன்றைக்கு உள்ள பிரச்சினைகளைக் காட்டிலும் நூறு மடங்கு பிரச்சினைகளை இன்றைக்குக் காவல் துறை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், எங்கு பார்த்தாலும் குறுக்கீடுகள்.

அரசியல் குறுக்கீடுகளைச் சொல்கிறீர்களா?

ஆமாம். ஆனால், அது மட்டும் இல்லை. சுற்றிலும் கண்காணிப் பான கட்டமைப்பு. ஊடகங்கள், நீதிமன்றங்கள், மனித உரிமை அமைப்புகள்… ஒருபுறம் இவை வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழிவகுப்பவை என்றாலும், ஒரு நேர்மையான அதிகாரியைக் கொஞ்சம்கொஞ்சமாக முடக்கிப்போடுபவை.

ஆனால், இவ்வளவு கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் சூழலிலும் இன்னமும் இந்தியக் காவல் துறை காலனியாதிக்க அணுகுமுறையோடுதானே மக்களை அணுகுகிறது?

நம்முடைய அடிப்படையிலேயே உள்ள பிரச்சினை இது. பிரிட்டிஷார் கொடுத்த கட்டமைப்பைக் கொண்டுதான் நம்முடைய எல்லாத் துறைகளும் கட்டப்பட்டன. ஏனைய துறைகளை எல்லாம் பிரிட்டனில் எப்படி அமைத்தார்களோ அதேபோல அமைத்த பிரிட்டிஷார், காவல் துறையை மட்டும் லண்டனில் ஒரு மாதிரியும் டெல்லியில் ஒரு மாதிரியும்தான் அமைத்தார்கள். சுதந்திரத்தின்போதே நாம் மாற்றம் கொண்டுவந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கிறது. அப்புறம் நம்முடைய ஊடகங்களும் பொது அமைப்புகளும்கூட ஒரு காரணம் என்று சொல்வேன். சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி, காவல் துறையின் பிம்பத்தை மோசமாக்கி விட்டார்கள். இவ்வளவு பரந்து விரிந்த நாட்டில், மொத்த மக்கள்தொகைக்கு இருக்கும் காவல் துறையினர் எத்தனை பேர், எல்லா இடங்களிலும் அவர்கள் இருப்பது சாத்தியம்தானா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு சங்கிலிப் பறிப்பைக்கூட ஒட்டுமொத்தக் காவல் துறையின் தோல்வியாக விமர்சிக்கும் சூழல் இங்கே நிலவுகிறது. ஒரு குற்றம் என்பது அது சம்பந்தப்பட்ட சமூகத்தின் பல்வேறு கட்டுமானங்களோடும் சம்பந்தப்பட்டது. அங்கே சரியில்லை என்றால், இங்கேயும் அது எதிரொலிக்கும். ஆனால், ஒட்டுமொத்தத்தையும் சேர்த்துச் சிந்திப்பதில்லை.

நம்முடைய காவல் துறையின் பெரிய பலம் என்ன? பெரிய பலவீனம் என்ன? அதன் மிகப் பெரிய தேவை என்ன?

ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.

எதைச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறீர்கள்?

நம்முடைய காவல் துறை 19, 20, 21 இந்த மூன்று நூற்றாண்டு களுக்கும் இடையில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் பெண்களை உயிரோடு கொளுத்தும் போன நூற்றாண்டுக் குற்றவாளிகளை எதிர்கொள்கிறோம்; இன்னொருபுறம், அடுத்த நூற்றாண்டின் சைபர் குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால், அதற்கேற்ற நவீனக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். 1. தேர்தல் ஆணையம்போல, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இரண்டுக்கும் அப்பாற்பட்டுச் செயல்படும் சுதந்திரம் இருக்க வேண்டும். 2. ஆட்களை அதிகரிக்க வேண்டும். 3. காலத்துக்கேற்ப நவீனமயமாக்க வேண்டும். 4. காவல் துறையுடன் ஏனைய துறைகளுடனான செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்... இப்படி நிறைய வேண்டும்கள் இருக்கின்றன.

உங்கள் அதிகாரக் காலத்தில் ரவுடிகளை நிறையவே ஒடுக்கியிருக்கிறீர்கள். அதேசமயம், நிறைய என்கவுன்டர்களும் உங்களுக்குக் கீழ் நடந்தன... இதற்கு என்ன நியாயம் சொல்கிறீர்கள்?

நான் எனக்குக் கீழ் பணியாற்றுவோரிடம் அடிக்கடி சொல்வது துப்பாக்கி வெறும் பொம்மை அல்ல என்பதைத்தான். ஒரு அரசாங்கம் யாரிடமாவது சும்மா துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொல்லுமா? காவல் துறையிடம் கொடுத்திருக்கிறது என்றால், ஏன்? மக்களைக் காப்பாற்றுவதற்காக. அப்படிக் காப்பாற்ற நேரும்போது, உன் உயிருக்கு ஆபத்து வந்தால் உன்னைக் காத்துக்கொள்வதற்காக. ஆனால், எதற்கெடுத்தாலும், துப்பாக்கியைத் தூக்குபவனோ, தூக்கச் சொல்பவனோ அல்ல நான். தவிர்க்க முடியாத தருணத்திலேயே அவை வெடிக்கின்றன.

அதிகமான மனித உரிமை மீறல்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) முன்னணி வகிக்கிறது. உங்களாலும் தடுக்க முடியவில்லை. என்ன காரணம்?

இது பெரிய படை. அதனால், எண்ணிக்கை அதிகம். விகிதப்படிப் பார்த்தால் குறைவாகத்தான் இருக்கும். அதற்காக நான் நியாயப்படுத்தவில்லை. தவறுகளைக் குறைக்க எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவ்வளவும் எடுத்துவருகிறோம்.

உங்கள் பார்வையிலிருந்து நீங்கள் காஷ்மீர் பிரச்சினையை எப்படிப்பார்க்கிறீர்கள்? மாவோயிஸ்ட் பிரச்சினையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அமெரிக்கா, ரஷ்யா போல எடுத்த எடுப்பிலேயே உள்ளே புகுந்து நொறுக்கும் இயல்பு நமக்குக் கிடையாது. ஆகையால், நாம் நிதானமாகச் செயல்படுகிறோம். இரு பிரச்சினைகளுமே வெவ்வெறு அடிப்படையிலானவை. ஆனால், ஒரு கோட்டில் இவை சந்திக்கின்றன - வளர்ச்சி. மக்களுடைய அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறாத சூழலில், அவர்களுடைய கோபத்தை எதிராளிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆயுதப் படைகள் மூலமாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இல்லை. ஆனால், ஆயுதப் படைகளும் அவசியம் தேவை என்பேன். அதாவது, மூடியிருக்கும் ஒரு அறையின் கதவைத் திறந்து நீங்கள் உள்ளே செல்வதாக வைத்துக்கொள்வோம். உங்கள் பூட்ஸின் வலது கால் ஆயுதப் படை என்றால், இடது கால் வளர்ச்சிப் படை. உடனே நுழைய வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.

முதலில் வைக்கும் வலது கால் ஏன் வளர்ச்சியாக இருக்கக் கூடாதா?

ம்ஹூம். அது சரிப்படாது. பாதுகாப்புக்குப் பதிலாக வளர்ச்சியை முதலில் எடுத்துச்சென்ற இடங்களில் அடிகளைத்தானே நாம் எதிர்கொண்டோம்? மாவோயிஸ்ட் பகுதிகளில், பள்ளிக்கூடங்கள், செல்கோபுரங்கள், பாலங்கள் எல்லாம் அப்படித்தானே தகர்க்கப்பட்டன?

உங்கள் பார்வையில் வளர்ச்சி என்பது என்ன? ஒரு நிலத்தின் பூர்வகுடிகள் ஆக்கிரமிப்பாகக் கருதுவதை வெளியாட்கள் வளர்ச்சி என்று திணிக்க முடியுமா?

இது பெரிய விவாதத்துக்கான விஷயம். ஒருகாலத்தில், பழங்குடிகள் நலன் என்பது அவர்கள் வாழும் வாழ்முறையை அப்படியே தொந்தரவு செய்யாமல் நீடிக்க விடுவதுதான் என்று கருதப்பட்டது. பின்னர், இன்னொரு கேள்வி எழுந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் எல்லாப் பயன்களையும் நீங்களும் நானும் அனுபவிக்கும்போது, அவர்கள் மட்டும் அப்படியே வனத்தில் வறுமையில் வாழ வேண்டுமா என்று. இந்தக் கேள்வியும் நியாயமானது என்று நினைக்கிறேன்.

நம் ஜனநாயக ஆட்சியின் தோல்விகளின் வெளிப்பாடுகளில் ஒன்று மாவோயிஸ்ட் பிரச்சினை என்று சொல்லலாமா?

இன்றைக்கும் மாவோயிஸ்ட்டுகள் கையில் நிறைய பகுதிகள் இருக்கின்றன. இவற்றில் பல பகுதிகள் நீண்ட காலமாக அவர்கள் வசம் இருப்பவை. நாம் அவற்றை மீட்கும்போது தெரியவருவது என்னவென்றால், அவர்கள் அங்கெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்பதைத்தான். நம்முடைய ஜனநாயக அமைப்பில் கோளாறுகள் இருக்கலாம். ஆனால், இதுவே சிறந்தது.

ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகளின் கடமை, பங்களிப்பு என்ன - அதாவது, ஜனநாயகம் தழைக்க?

இந்த நாட்டில் ஒவ்வொரு அதிகாரிக்கும் எவ்வளவோ அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அதிகாரி தன் சுயநலத்துக்காக அந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தாலே போதும்; ஜனநாயகம் தானே தழைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x