Published : 27 Jul 2020 05:57 PM
Last Updated : 27 Jul 2020 05:57 PM
இன வெறியும் நிற வெறியும் மனதளவில் ஏற்படுத்தும் காயங்களையும் வலிகளையும் பற்றித்தான் பெரும்பாலான விவாதங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படும்/ தாக்கப்படும் சமயங்களில் அம்மக்கள் உடல் ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளாவதைப் பற்றிப் பேசுகிறோம்.
இவற்றையெல்லாம் தாண்டி சுகாதார ரீதியாக இனவெறி ஏற்படுத்தும் இழப்புகள் மிகக் கொடூரமானவை என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். இந்தியாவில் சாதியின் அடிப்படையில் இப்படியான அவலங்கள் நேர்வதையும் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
ஏற்றத்தாழ்வு
அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகளில் வெள்ளையினத்தவர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சை வசதிகள், மருந்துகள் போன்றவை கறுப்பினத்தவர்கள், பழுப்பு நிறத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்குக் கிடைப்பதில்லை எனும் தகவல்கள் தொடர்ந்து பதிவாகிவருகின்றன.
இது தொடர்பாக, ‘தி கார்டியன்’ இதழ் வெளியிட்டிருக்கும் கட்டுரை மேலும் பல தகவல்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடூர மரணத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக, ‘பிபிசி ரேடியோ 1’ வானொலி நிலையத்தில் பணிபுரியும் க்ளாரா ஆம்ஃபோ, நேயர்களிடம் வெளிப்படையாகப் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. பிரிட்டன் வாழ் கறுப்பினப் பெண்ணான க்ளாரா, ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் தொடர்பான செய்திகளால் மனதளவில் உடைந்துபோனதால், ஜூன் மாதம் தான் பங்கேற்க வேண்டிய வானொலி நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டிவந்ததாக நேயர்களிடம் கூறியிருந்தார்.
“பொதுவாகவே இனவெறி, குறிப்பாகக் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான மனநிலை என்பது, வெறுமனே அவமதிப்பு, உடல்ரீதியான வன்முறை என்றே தவறாகக் கருதப்படுகிறது. உண்மையில், அது அவற்றையெல்லாம்விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது” என்றும் அவர் வேதனையுடன் பேசியிருந்தார். அவர் குறிப்பிட்டது மனநலம், உடல்நலம் சார்ந்த பாதிப்புகளைத்தான்.
பலி கேட்கும் பாரபட்சம்
ஆம். பிரிட்டனில் இனவெறி ரீதியிலான வசவுகள், கிண்டல்களுக்கு ஆளாகும் கறுப்பினப் பெண்கள், மன உளைச்சலுக்குள்ளாகி, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரையிலான பாதிப்புகளைச் சந்திப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலும் இதுபோன்ற அவமதிப்புகளுக்குள்ளாகும் கறுப்பினப் பெண்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின ஆண்களில் கணிசமானோர் வயதையும் மீறி முதுமையடைகிறார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோயியல் நிபுணர் டேவிட் சாய் கூறியிருக்கிறார்.
“இனவெறி என்பது குழந்தைகள், இளம் பருவத்தினர், வளரிளம் பருவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் சுகாதாரத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் சமூக நிர்ணயம்” என்று 2019-ல் ‘தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள் இந்த ஏற்றத்தாழ்வைச் சுட்டும் சமீபத்திய உதாரணங்கள்.
பிரிட்டனில் கரோனா பாதிப்பு தொடர்பாக, எச்.ஐ.வி. தொற்று நிபுணர் டாக்டர் வனேசா அபே தலைமையிலான குழு நடத்தியிருக்கும் ஆய்வு இந்த அவலத்தை ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறது. கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்களும், தெற்கு ஆசிய நாடுகளைப் பூர்விகமாகக் கொண்ட பெண்களும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், உயிரிழப்பும் அவர்களிடையே அதிகம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ‘வெள்ளையினத்தைச் சேர்ந்த முதியோர்தான் கரோனாவுக்கு அதிகம் பலியாகிறார்கள். ஆனால், கறுப்பின, ஆசிய மக்களைப் பொறுத்தவரை கரோனாவால் உயிரிழப்பவர்களில் இளம் வயதினரே அதிகம்’ என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில் தொடரும் அநீதி
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நிலவும் இனவெறியைப் போல, இந்தியாவில் பட்டியலின/ பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய ஒடுக்குமுறையும், சமூகப் புறக்கணிப்பும் அதிகம் பேசப்பட வேண்டிய விஷயங்கள். இங்கு சாதியின் காரணமாக, சக மனிதர்களுக்குக் கிடைக்கும் சமூக மதிப்பு, மரியாதை முதல் மருத்துவ சேவை வரை பல விஷயங்களை அம்மக்கள் இழக்கின்றனர்.
இந்தியாவில் பல தலைமுறைகளாகவே உடை, வீடு, நீர்நிலைகளைப் பயன்படுத்துவது எனப் பல்வேறு விஷயங்களில் கடும் கட்டுப்பாடு / கண்காணிப்பின்கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தது, ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூக, பொருளாதார அளவீடுகளில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சமூகத்தினர் சுகாதார வசதிகளைப் பெறுவதிலும் கடுமையான புறக்கணிப்பை எதிர்கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
“இந்தியாவில் சராசரி எடையைவிடக் குறைவான எடை கொண்ட குழந்தை, பட்டியலின அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது” என்று 2017-ல் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு சுட்டிக்காட்டியது.
பிற சமூகத்தினருடனான ஒப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்திருந்தன. 5 வயதுக்குட்பட்ட பட்டியலின / பழங்குடியின ஆண் குழந்தைகளில் 32 முதல் 33 சதவீதத்தினர் எடை குறைந்தவர்கள். பிற சமூகத்தினரில் இது 21 சதவீதம்தான். ஊட்டச்சத்து குறைபாடுதான் இந்தியாவில் நிகழும் 50 சதவீத குழந்தைகள் மரணத்துக்குக் காரணம் என்பன உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அதில் பட்டியலின/ பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் அதிகம்.
பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 70.4 சதவீதம் பெண்கள், சுகாதார வசதிகளைப் பெறுவதில் பொருளாதார வசதியின்மை, அதிகத் தொலைவில் மருத்துவமனை அமைந்திருப்பது என்பன உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்வதாக 2017-ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்திருக்கிறது. முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த 66.8 சதவீதம் பெண்கள், மருத்துவர் முன்னிலையில் குழந்தையைப் பிரசவிக்கும் நிலையில், பட்டியலினப் பெண்களில் 52.2 பெண்களுக்குத்தான் அது சாத்தியமாகிறது என்றும் அந்த ஆய்வு முடிவு கூறியது.
அதுமட்டுமல்ல, பட்டியலினப் பெண்களின் மரண வயது சராசரியாக 39.5 ஆண்டுகள்; உயர் சாதிப் பெண்களைப் பொறுத்தவரை அது 54.1 ஆண்டுகள் என்றும் அந்த ஆய்வு கூறியது.
பட்டியலின சமூகத்தினரின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயதைத் தொடுவதற்குள் மரணமடைந்துவிடுகின்றன. பிற சமூகத்தினரின் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61. அதேபோல், ஐந்து வயதை எட்டுவதற்குள் பட்டியலினக் குழந்தைகளில் 1,000-ல் 39 குழந்தைகள் இறந்துவிடுகின்றன என பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழு வெளியிட்ட அறிக்கை பதிவுசெய்திருக்கிறது.
ஆய்வுகளின் போதாமை
அதேசமயம், இதுபோன்ற ஆய்வுகள், புள்ளிவிவரங்கள்கூட முழுமையானவை அல்ல என்றும்; இன்னமும் வீரியத்துடன் கள ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கொள்கை உருவாக்கங்களில் பெரும் பங்கு வகித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூகச் செயற்பாட்டாளருமான பி.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இவற்றுடன் கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், நட்பு வட்டாரம் என பல்வேறு தளங்களில் சாதிரீதியிலான வசவுகள், மறைமுகமான கிண்டல்கள், புறக்கணிப்புகள் என உளவியல் ரீதியாகக் கடுமையான அழுத்தங்களைப் பட்டியலின/ பழங்குடியின சமூகத்தினர் எதிர்கொள்வதன் உளவியல்/ உடல்ரீதியான விளைவுகளைப் பற்றியும் விரிவாக ஆய்வுசெய்யவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT