Published : 24 Jul 2020 07:32 AM
Last Updated : 24 Jul 2020 07:32 AM
கோவை ஞானி என்று தமிழ்ச் சிந்தனை, இலக்கிய உலகிலும், ‘கி.ப.’ என்று அவரது நெருக்கமான நண்பர்களாலும் அழைக்கப்பட்டுவந்த கி.பழனிசாமி எனும் ஒரு மாபெரும் ஆளுமை மறைந்துவிட்டது. தமிழ் அறிவுலகத்துக்கு அவர் வழங்கிய பங்களிப்பைப் பதிவுசெய்ய அவர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த நண்பர்களால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறப்பு மலர் கொண்டுவரப்பட்டபோது, தன்னைப் பற்றி நான்கு வரியாவது நான் எழுதுவதையே பெரிதும் விரும்புவதாகக் கூறினார் ஞானி. கி.ப.வின் ஆக்கங்களையும் அவரது அரசியல் வாழ்க்கையையும் மதிப்பீடு செய்யும் கட்டுரை என்று பிரத்யேகமாக எதையும் என்னால் எழுத முடிந்திருக்குமா என்பது ஐயத்துக்குரியது. ஏனெனில், நான் எழுதிய நூல்களில் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல், நானும் அவரும் மணிக்கணக்கில் பேசி பகிர்ந்துகொண்ட அல்லது அவரால் கோடிட்டுக் காட்டப்பட்ட சிந்தனைத் தாக்கத்தின் கீழ் எழுதப்பட்டவை. மார்க்ஸியம் பற்றிய எனது புரிதல், இலக்கியம் பற்றிய எனது பார்வை ஆகியவற்றை வடிவமைத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
1960-களில் கோவையில் இயங்கிவந்த ‘சிந்தனை மன்றம்’தான் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நெருக்கமான நண்பர்களாவதற்கான களம். சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர் கட்சி’யைச் சேர்ந்தவர்களிலிருந்து தீவிர இடதுசாரிச் சிந்தனையுடையவர்கள் வரை பல்வேறு தரப்பினர் ஒன்றுகூடி மாதமொருமுறை காத்திரமான விவாதங்களை – கசப்புணர்வோ காழ்ப்புகளோ இல்லாமல் – நடத்திவந்த அந்த மன்றத்தில்தான் எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸின் ‘அந்நியமாதல்’ கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறி, மார்க்ஸியம் பற்றிய எங்கள் புரிதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார்.
மாவோ மீதும், சீனா மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த ஜோசப் நீதாம் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர். அவர் எழுதிய ‘டைம் தி ரெஃப்ரெஷிங் ரிவர்’ என்ற நூலை, அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஞானிதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்பதில் ஞானிக்கு உள்உந்துதல் தந்தவர் நீதாம்தான். கிராம்ஷி என்ற பெயரே தமிழ்நாட்டில் அறிமுகமாகியிராத 1970-களில் அவரது படைப்புகளைத் தேடியலைந்து நாங்கள் இருவரும் அப்போது படித்தோம். ஜான் லூயிஸ், ஜோசப் நீதாம், சிட்னி பிங்கெல்ஸ்டைன், ஹெர்பெர்ட் ஆப்தேகர், அர்னால்ட் ஹாஸர், வால்ட்டர் பெஞ்சமின், ழான்-போல் சார்த்ர் போன்ற மேலை நாட்டு மார்க்ஸியர்களைப் படிக்கத் தொடங்கினோம். பெண்ணிலைவாதம் என்ற சொல்லே தமிழகத்தில் அறிமுகமாகியிருந்திராத நாட்களில் ஷுலாமித் ஃபயர்ஸ்டோனின் ‘டயலெடிக் ஆஃப் செக்ஸ்’ நூலைப் படித்து எனக்கு அந்த நூலின் சாரத்தை எடுத்துக்கூறியவர் ஞானி. என் பங்குக்கு செக் நாட்டு மார்க்ஸிய அறிஞர் விட்டேஸ்லாவ் கார்டாவ்ஸ்கி எழுதிய ‘தி காட் ஈஸ் நாட் யெட் டெட்’ என்ற நூலை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.
சீனாவில் மாவோ 1966-ல் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் புரட்சிப் போராட்டங்கள் நடைபெற்றுவந்த காலம் அது. சின்னஞ்சிறு வியத்நாம், உலகின் மிகப் பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது. 1968-ல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர் போராட்டங்கள் முகிழ்த்தெழுந்தன. அந்த ஆண்டில் பிரான்ஸில் மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கிடையில் நடத்திய புரட்சிகரப் போராட்டம், அங்கு மாபெரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் தோன்றிய நக்ஸலைட் இயக்கம் எங்களை ஈர்த்ததில் வியப்பில்லை.
சைவ சித்தாந்தத்திலிருந்து கிறிஸ்தோபர் கால்ட்வெலின் இலக்கியக் கோட்பாடுகள் வரை சிந்தனை மன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட விஷயங்கள் ஏராளமானவை. அந்த மன்றத்தின் செயல்பாடுகளின் நீட்சியாகத்தான் ‘புதிய தலைமுறை’ என்ற மாத ஏடு பிறந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்திலுள்ள எந்தவொரு கட்சியின், பிரிவின் கட்டுப்பாடுகளுக்கும் கட்டளைகளுக்கும் உட்படாமல் மார்க்ஸியத்தை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான விவாதங்களுக்கான ஏடாகத்தான் அது தொடங்கப்பட்டது. கருத்து வேறுபாடுகள் காரணமாக கி.பி.யும் நானும் அதிலிருந்து விலகினோம். அந்த ஏடு எந்த அளவுக்கு நக்ஸலைட் இயக்கத்தையும் மாவோ சிந்தனையையும் ஆதரித்ததோ அதே அளவுக்கு நானும் ஞானியும் அதே அரசியலை ஆதரித்தோம்; சிந்தனை அளவில் மட்டும் அல்ல; மாவோவின் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை நானும் ஞானியும் அடங்கிய குழுவினர் கோவை நகர் முழுவதும் ஒட்டும் அளவுக்குக்கூட இந்த ஆதரவு ஒருகாலகட்டத்தில் இருந்தது. அதே வேளையில், எது ஒன்றையும் விமர்சனப் பார்வையுடன் அணுகும் நாங்கள் அந்த இயக்கத்தையும் விதிவிலக்காகக் கருதவில்லை. சாரு மஜும்தாருக்கே எங்கள் கருத்து வேறுபாடுகளை ஒளிவுமறைவின்றி முன்வைத்தோம்.
சீனாவில் நூறு மலர்கள் பூத்தனவோ இல்லையோ, நூறு கருத்துகள் முட்டி மோதினவோ இல்லையோ, ‘புதிய தலைமுறை’ ஏடு தொடங்கப்பட்டதற்கான குறிக்கோள்களை ‘பரிமாணம்’, ‘நிகழ்’ ஆகிய இரு ஏடுகளில் நிறைவேற்றுவதில் ஞானி பெற்ற வெற்றி கணிசமானது. 1990-ல் கண் பார்வையை அவர் முற்றிலுமாக இழந்துவிட்ட பிறகு ஞானப் பார்வையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் முயற்சியாகவே அவரது அரசியல், இலக்கியச் செயல்பாடுகள் அமைந்திருந்தன என்றால் தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் அவர் பெற்றிருந்த ஆழமான புலமை அதற்கான வலுவான ஊட்டமாக அமைந்திருந்தது. அவரது அடிமனதில் கனன்றுகொண்டிருந்த தமிழ் தேசியத்தை மார்க்ஸிய அடித்தளத்தின் மீதே கட்டமைக்க விரும்பினார். உலக இலக்கியத்தையும் ஒட்டுமொத்த மானுட குலத்தின் விடுதலையையும் விழைந்த அவரால் ஒருபோதும் வேறுவிதமாகச் சிந்தித்திருக்க முடியாது.
- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT