Published : 19 Jul 2020 07:35 AM
Last Updated : 19 Jul 2020 07:35 AM
முப்பத்து மூன்று ஆண்டு காலமே இம்மண்ணுலகில் வாழ்ந்து, கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், நாடகாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் சூரியநாராயண சாஸ்திரி. மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரியில் பிறந்த இவர், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழ் கற்று, பின் 1890-களின் தொடக்க ஆண்டுகளில் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புலமை பெற்றிருந்த சாஸ்திரியார், அன்றைய கல்லூரி முதல்வர் மில்லரின் அன்புக்கும் நன்மதிப்புக்கும் உரியவராகத் திகழ்ந்ததுடன் 1892-ல் நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதல்நிலையில் தேர்ச்சியடைந்தார். 1893-ல் பி.ஏ. பட்டம் பெற்ற சாஸ்திரியாருக்கு அந்தக் கல்லூரியிலேயே தத்துவ சாத்திர ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை முதல்வர் மில்லர் வழங்கினார். ஆனால், தனக்குத் தமிழாசிரியராகப் பணியாற்றத்தான் விருப்பம் என்றார்.
அவர் விருப்பப்படியே நடந்தது. கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி மேற்கொண்ட முதல் பட்டதாரியாக சாஸ்திரியாரே அறியப்படுகிறார். 1893-ல் தன் இருபத்து மூன்றாவது வயதில், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, 1895 தலைமைத் தமிழாசிரியராக உயர்ந்தார். இவர் தலைமைப் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில்தான் (1898) வேதாசலம் என்கிற மறைமலையடிகள் கல்லூரியின் தமிழ்ப் பண்டிதர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். அறுபது பேர் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில், மறைமலையடிகளே தேர்வாகி சாஸ்திரியாருடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். தனித்தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகத் தம்முடைய வடமொழிப் பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொண்ட முன்னவர்களாக மறைமலையடிகளும் பரிதிமாற்கலைஞருமே அறியப்படுகின்றனர். மறைமலையார் தனித்தமிழ்க்கென ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார். சூரியநாராயண சாஸ்திரியாரும் ‘தனித்தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்’ என்ற செய்தியே குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. உண்மை அதுதானா?
சாஸ்திரியார் என்ன செய்தார்?
ஆங்கிலத்தில் ஒரே பொருளைப் பற்றி பதினான்கு அடிகளில் எழுதக்கூடிய ‘சானட்’ என்ற இலக்கிய வகையின் மீது ஈர்ப்பு கொண்ட சாஸ்திரியார், அவ்வப்போது தமக்குத் தோன்றும் கருத்துகளைப் பதினான்கு அடி கொண்ட நேரிசை ஆசிரியப்பாக்களாக எழுதிவந்தார். கருத்திலும் வடிவத்திலும் புதிய முயற்சியான இந்தத் தனிப்பாசுரங்களை மு.சி.பூரணலிங்கம் பிள்ளை ஆசிரியராக இருந்து நடத்திவந்த ‘ஞானபோதினி’ மாத இதழில் 1897 முதல் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். புதிய முயற்சி என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதை உண்மையாக அறிய விரும்பிய சாஸ்திரியார், தன் உண்மைப் பெயரை மறைத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞர் என்கிற புனைபெயரால் வெளியிட்டுவந்தார்.
‘இப்பாசுரங்களில் சில புதுக் கருத்துகள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம் எமது மெய்ப்பெயரின் வெளியிடாது பரிதிமாற்கலைஞன் என்னும் புனைவு பெயரின் வெளியிடுவேமாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியால் சாலவும் புகழப்பட்டிலங்கவும் நாடொறுங் காண்டலின் இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்’ என்று தன் பெயர் மாற்றத்துக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, சாஸ்திரியார் தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று தனித்தமிழ்ப்படுத்திக்கொண்டிருப்பினும் இப்பெயரை ஒரு குறிப்பிட்ட நூலுக்கான புனைபெயராக, இன்னும் சொல்லப்போனால் அந்நூலைத் தான் எழுதியது என்பதைப் பிறர் அறியக் கூடாது என்பதற்கான மறைபெயராகத்தான் பயன்படுத்திக்கொண்டார்.
தனிப்பாசுரத்தொகையும் மதிவாணனும்
1897 இதழில் புனைபெயரில் வெளியிட்ட இந்தப் பாசுரங்கள் தொகுக்கப்பட்டு, ‘தனிப்பாசுரத்தொகை’ என்னும் நூலாக 1901-ல் வெளிவந்தது. இடைப்பட்ட காலத்தில் மக்களிடமிருந்து இப்பாடல்களுக்கான உண்மை மதிப்பை சாஸ்திரியார் அறிந்திருக்கக்கூடும். அதனாலேயே இந்நூலைப் புனைபெயரில் அல்லாமல் சூரியநாராயண சாஸ்திரியார் என்கிற பெயரிலேயே வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஒரு நூலைத் தவிர, வேறு எங்கும் இப்பெயரை அவர் பயன்படுத்தியதாக அறிய முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘ஞானபோதினி’ இதழில் பரிதிமாற்கலைஞர் என்கிற பெயரில் பாசுரங்கள் வந்துகொண்டிருந்த அதே காலகட்டத்து இதழ்களில் ‘மதிவாணன்’ என்கிற புதினமும் தொடர்ந்து தொடராக வந்துகொண்டிருந்தது. ஒரே இதழில் ‘தனிப்பாசுரத்தொகை’ பரிதிமாற்கலைஞர் பெயரிலும், ‘மதிவாணன்’ புதினம் சூரியநாராயண சாஸ்திரியார் பெயரிலும் வந்துகொண்டிருந்தது.
தனித்தமிழ் காரணமாகத் தன் பெயரை மாற்றிக்கொண்டவராக இருந்திருப்பின், ஒரே நேரத்தில் இரு பெயரில் இயங்கியிருக்க மாட்டார். கல்லூரி இதழ்களில் எழுதிய கட்டுரைகளிலும் கவிதைகளிலும் சரி, உ.வே.சா.வுக்கு எழுதியதாகக் கிடைக்கும் கடிதங்களிலும் சரி, அவர் மறைவு வரை அனைத்து இடங்களிலும் சூரியநாராயண சாஸ்திரியார் என்கிற பெயரையே பயன்படுத்திவந்திருக்கிறார். மத்திய அரசு, மறைமலையடிகள் பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதுபோல் பரிதிமாற்கலைஞர் என்கிற பெயரில் வெளியிடாமல் சூரியநாராயண சாஸ்திரியார் பெயரில்தான் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாஸ்திரியின் மொழிக் கொள்கை
சூரியநாராயண சாஸ்திரியார் தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுடன், தனித்தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் அவர் எழுத்துகளில் காண முடிவதில்லை. 1903-ல் இறப்பதற்கு முன் வெளிவந்த தமிழ் மொழி வரலாறு நூல் முழுவதிலும் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதுடன் ‘பாஷையின் சீர்திருத்தம்’ தலைப்பிலமைந்த கட்டுரையில் “தமிழ்ச் சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ் பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதைத் தடுக்க முடியாது. தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்… ஆங்கிலச் சொற்களைத் திசைச் சொற்களென மேற்கொள்வதில் யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம்” என்று தன் மொழிக் கொள்கையைப் பதிவுசெய்துள்ளார்.
எனினும், பி.ஏ. பட்டம் பெற்று, தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்ற முதல்வர்; உயர்தனிச் செம்மொழி என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி, முதன்முதலாகத் தமிழ்மொழி செம்மொழி என்கிற சிந்தனைக்கு வித்திட்டவர்; நாடகத் தமிழுக்கு முதன்முதலாக இலக்கணம் எழுதியவர்; 1902-ல் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை விலக்குவதாக சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்தபோது, மு.சி.பூரணலிங்கம் பிள்ளையோடு சேர்ந்து வாதிட்டு இத்திட்டத்தை முறியடித்தவர்; சென்னை செந்தமிழுரைச் சங்கம் நிறுவி, அதன் வழி கல்லூரி தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதியவர் என்று தமிழ் மொழிக்கு சாஸ்திரியார் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.
- ஜெ.சுடர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
தொடர்புக்கு: sudaroviya@gmail.com
ஜூலை 6: பரிதிமாற்கலைஞரின் 150-வது பிறந்த நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT