Published : 17 Jul 2020 04:18 PM
Last Updated : 17 Jul 2020 04:18 PM
அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க, சச்சின் பைலட்டும் பாஜகவினரும் எடுத்த முயற்சிகள் பற்றிய சர்ச்சைகளுக்கு நடுவே இன்னொரு சர்ச்சையும் பேசப்படுகிறது. அது, அம்மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மெளனம். மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டிருந்தாலும் கட்சியைவிட்டு இன்னமும் அவர் நீக்கப்படவில்லை.
அவரும் பாஜகவில் சேர்வதாக உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால், பாஜகவினருடன் அவர் பேசிக்கொண்டிருப்பது உறுதி என்றே காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. சச்சின் ஆதரவு எம்எல்ஏக்களுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் பேசியதற்கான ஆதாரம் இருப்பதாகக் காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
தொடரும் மெளனம்
இவ்வளவு பெரிய விவகாரம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கியத் தலைவருமான வசுந்தரா ராஜே இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த சில மாதங்களாகக் கட்சி நடவடிக்கைகளிலிருந்தும் அவர் விலகியே நிற்கிறார். இத்தனைக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.
இதற்கிடையே, “காங்கிரஸ் எம்எல்ஏக்களை அழைத்து, அசோக் கெலாட் அரசைக் காப்பாற்ற வசுந்தரா கேட்டுக்கொண்டார்” என்று பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் தலைவர் ஹனுமன் பேனிவால். அதுமட்டுமல்ல, ஜாட் தலைவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து சச்சினிடமிருந்து விலகியிருக்குமாறு வசுந்தரா கேட்டுக்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டி யிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் மோடி, அமித் ஷா இருவரையும் ‘டேக்’ செய்திருக்கிறார். இதற்கும் வசுந்தரா தரப்பிலிருந்து கிடைத்திருக்கும் பதில்- மெளனம்தான்.
புகைச்சலின் பின்னணி
ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரான வசுந்தரா, ஒரு காலத்தில் பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர். இரண்டு முறை முதல்வராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் இப்போது ஒதுங்கி நிற்பதன் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாஜக மேலிடத்துடனான பிணக்குதான் இதன் பின்னணியாகச் சொல்லப்படுகிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ராஜஸ்தானின் ஜாலூர் மாவட்டத்துக்கு நர்மதை நதி நீரைக் கொண்டுசெல்லும் கால்வாய் திட்டம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்பதில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடிக்கும், ராஜஸ்தானின் அப்போதைய முதல்வர் வசுந்தராவுக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2014 மக்களவைத் தேர்தலில் வென்று மோடி பிரதமரானபோது, வசுந்தராவின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது எதிரணியினருக்கே பொறுப்புகளை மோடி வழங்கினார்.
அதேபோல, அமித் ஷாவுடனும் வசுந்தராவுக்கு முரண்கள் இருந்தன. ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் தலைவர் ஹனுமன் பேனிவாலுக்கும் வசுந்தராவுக்கும் இடையில் நீண்ட காலமாகப் பிரச்சினை நிலவுகிறது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலின்போது ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பேனிவாலின் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்வதால் அரசியல் லாபம் இருக்கும் என்று கருதி அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக தலைமை முடிவெடுத்தது. அதே பேனிவால்தான் தற்போது அசோக் கெலாட்டுக்கு வசுந்தரா உதவுவதாகக் குற்றம்சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தேர்தலின்போது வசுந்தரா பரிந்துரைத்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க அமித் ஷா மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியமைத்தபோது வசுந்தராவின் ஆதரவாளர்களுக்குப் பதவி வழங்கப்படவில்லை. ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரைத் தேர்வுசெய்வதிலும் அமித் ஷாவுக்கும் வசுந்தராவுக்கும் இடையில் முரண்கள் இருந்தன.
தனது மகன் துஷ்யந்துக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வசுந்தரா. ஆனால், மோடி - அமித் ஷா ஜோடி மறுத்துவிட்டது. உண்மையில், ராஜஸ்தானில் பாஜக பலவீனமடைவதற்கு துஷ்யந்தின் செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு.
அதுமட்டுமல்ல, 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, 2019 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் 25 மக்களவைத் தொகுதிகளிலும் வென்றது. இது வசுந்தராவின் தனிப்பட்ட தோல்வியாகவும் கருதப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், கட்சித் தலைமை அந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. இப்படிப் பல விஷயங்கள் வசுந்தராவை வருத்தத்துக்குள்ளாக்கின.
குறையாத செல்வாக்கு
கட்சித் தலைமையுடன் வசுந்தராவின் உறவு அத்தனை சிலாக்கியமாக இல்லை என்றபோதிலும் ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் மத்தியில் வசுந்தராவுக்கு இன்னமும் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால்தான், சச்சின் விவகாரத்தில் வசுந்தராவின் கருத்து என்ன என்பதை அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்னொரு கோணமும் முன்வைக்கப்படுகிறது. முரண்டுபிடிக்கும் மாநிலத் தலைவர்களைப் பலவீனப்படுத்த பாஜக மேலிடம் பயன்படுத்தும் தந்திரம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சமீபத்திய உதாரணம், மத்தியப் பிரதேசம். அம்மாநிலக் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட்டு பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் அவரது ஆதரவாளர்களுக்கு அதிக இடங்களை வழங்கியிருப்பதன் மூலம், பாஜக முதல்வர் ஷிவ்ராஜ் சிங்குக்கு அழுத்தம் தரப்படுவதாகக் கருதப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடியுடன் ஷிவ்ராஜ் சிங் கொண்டிருந்த கருத்து வேறுபாடு இதற்குப் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதேபோல, சச்சினைப் பாஜகவுக்குள் இழுப்பதன் மூலம் ராஜஸ்தான் பாஜகவுக்குள் வசுந்தராவின் செல்வாக்கைக் குறைக்கலாம் என்று கட்சித் தலைமை திட்டமிடுவதாகப் பேசப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகள்தான் ராஜஸ்தான் அரசின் தலைவிதியைத் தீர்மானிக்கவிருக்கின்றன.
மொத்தத்தில், இந்த விவகாரம் காங்கிரஸில் மட்டுமல்ல, பாஜகவிலும் ஒரு புயலை உருவாக்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT